அமெரிக்கன் பிராண்ட் அரசியல்!

அமெரிக்கன் பிராண்ட் அரசியல்!

டிரம்ப் 2.0 வின் கீழ் அமெரிக்காவில் நடக்கும் விஷயங்களை பார்ப்பது ஸ்லோமோஷனில் ஒரு ரயில் விபத்தை பார்ப்பது போல இருக்கிறது. அமெரிக்காவின் முதுகெலும்பே அதன் தனி மனித மைய நோக்கும் அதன் தொழில்முனைப்பும் தான் . இந்த இரண்டு குதிரைகளையும் வெற்றிகரமாக பூட்டி சவாரி செய்வதுதான் முதலீட்டியம் (free market capitalism ) . அமெரிக்க முதலீட்டியம் உலகமயமாக்கல் மூலம் பெரும் செல்வத்தை ஈட்டியது . எங்கு விலை குறைவோ அங்கு பொருட்களை வாங்கியது . எங்கு கூலி குறைவோ அங்கு உற்பத்தியை நகர்த்தியது . ஆனால் அதன் விளைகனிகள் அனைவருக்குமாக சமமாக போய்ச் சேரவில்லை .ஒரு பக்கம் அதன் முதலாளிகளும் , உயர் கல்வி கற்ற professional தரப்பும் இதனால் பலனடைந்தன. ஆனால் உடல் உழைப்பு சார் வேலைகளை சார்ந்திருந்த அமெரிக்க உழைக்கும் வர்க்கம் நசிந்தது. ஒரு கட்டத்தில் பள்ளி கல்வி முடித்தால் கூட போதும் அதைக்கொண்டு நல்ல சம்பளத்துடன் வீடு, கார், விடுமுறை என்று மிக வசதியாக ஒரு சராசரி அமெரிக்கனால் வாழ முடியும் என்று இருந்த நிலை மாறியது.

முதலீட்டியத்தின் தொடர் லாப நோக்கு உலகமயமாக்கலும் அதை தகர்த்தன .அமெரிக்க கீழை வர்க்கம் அரசியல்ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் கை விடப்பட்டது. சமூக ரீதியாக மதம் , இனப்பெருமை போன்ற கடந்த கால எச்சங்களுக்குள் தன்னை இன்னும் ஆழமாகப் புதைத்துக் கொண்டது. அவர்களின் நிலைமைக்கு , பிற நாட்டவரின் குடியேற்றமும் , பிற நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக நடத்தும் வியாபார யுத்தமும் , அமெரிக்க அரசின் ஊதாரித்தனமான செலவுகளும் காரணங்களாக வலது சாரி அரசியலில் சார்பாக கட்டமைக்கப்பட்டன .’மன்னின் மைந்தர்களின்’ துன்பங்களுக்கு வெளிநாட்டில் இருந்து வருபவர்களே முதன்மை காரணிகளாக்கப்பட்டனர் . அமெரிக்காவே ஒட்டு மொத்தமாக ஒரு குடியேற்ற நாடு என்பது வசதியாக மறக்கப்பட்டது.

இதை நியாயப்படுத்தும் உரையாடல்கள் சமூக ஊடகங்கள் மூலம் புரட்டாகவும் அச்சமாகவும் ஊதி பெரிதுபடுத்தப்பட்டன .இப்படி கிளப்பிவிடப்பட்ட பூதாகரத்தில் இருந்து மக்களை காக்கும் தேவதூதனா டிரம்ப் தன்னை ‘பிராண்ட்’ செய்துகொண்டார் . சூழலை கணித்தார் , அதிகாரத்தை பிடித்தார் . அமெரிக்காவை மீண்டும் அதன் பொற்காலம் நோக்கி கொண்டு செல்வேன் என்று சூளுரைத்தார் .டிரம்பின் கோட் பாக்கெட்டுக்குள் அமெரிக்க முதலீட்டியம் குடிபுகுந்தது. உலகின் மிகப்பெரும் பணக்காரர்கள் கொஞ்சம் கூட தயக்கமோ கூச்சமோ இல்லாமல் டிரம்புக்கு அடிபணிந்தனர்.சட்டத்திற்குப் புறம்பாக குடியேறியவர்களை வெளியேற்றுவதில் சட்டநீதியான நியாயங்கள் இருந்தாலும் அது ‘தான்-பிறன்’ என்பதை அழுத்தமாக அமெரிக்க சமூகம் உணரும் வகையில் ஒரு களையெடுப்பாக காட்சி படுத்தப்படுகிறது. அச்சங்களை களையும் நோக்கில் புதிய பதற்றங்களும் பிளவுகளும் உருவாக்கப்படுகின்றன.

ஒட்டு மொத்த அரசு இயந்திரமுமே ஊதாரித்தனமானது , சார்பானது என்று சொல்லி அடியில் இருந்து உச்சி வரை மானாவாரியாக தன்னை விமர்சிக்கு ஆட்களை டிரம்ப் நீக்குகிறார் . அரசு கருவூலத்தை உலகின் முதல் பணக்காரரான இலான் மஸ்க் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார் .அரசு இயந்திரத்தின் இதயம் என்று சொல்லப்படும் கருவூலம் , மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத , எந்த அமைச்சகத்துக்கு கீழ் வராத ஒரு புது ‘அமைப்பின்’ மூலம் மஸ்கின் முழு கட்டுப்பாட்டுக்கு போகிறது.மாகாணங்களுக்கும், அரசு திட்டங்களுக்கும் , மக்களுக்கும் என்று கோடிக்கணக்கான கோடிகளில் பணம் பட்டுவாடா நடக்கும் ஒரு களத்தின் கட்டுப்பாடு இன்று தனியார் வசம் போயிருக்கிறது.

மெக்சிகோ , கனடா , சீனா போன்ற நாடுகளுடன் இருக்கும் Trade deficit ஐ சரி செய்வோம் என்று கூடுதலாக இறக்குமதி வரி போடப்படுகிறது . இந்த கூடுதல் வரியை அந்த நாடுகள் கட்ட வேண்டும் என்று புரட்டாக ஒரு பிம்பம் கட்டமைக்கப்படுகிறது . ஆனால் இந்த கூடுதல் வரியை கட்ட வேண்டியது அமெரிக்க இறக்குமதியாளர்தான் என்பதும் , இந்த கூடுதல் வரி சராசரி அமெரிக்கர்கள் தலையில் தான் விடியும் என்பதும் சாதுர்யமாக மறைக்கப்படுகிறது. அரசுக்கு ஒன்றுமே செய்யாமல் கூடுதல் வரி , ஆனால் விலைவாசி கூடுதலாக 25 % உயர்வு . மற்ற நாடுகள் இதற்கு போட்டியாக அவர்கள் தரப்பிலும் இறக்குமதி வரி விதித்தால் அமெரிக்க ஏற்றுமதியும் அடிபடும் .எல்லோருக்குமே அடி , எல்லோருக்குமே வலி .

சரி , ஏன் அமெரிக்கா இறக்குமதி செய்ய வேண்டும் . இந்தியா போலவே “மேக் இன் அமெரிக்கா” என்று போகலாமே என்று கேட்கலாம் . நாலு சதம் ஐந்து சதம் லாபம் தரும் சோப்பு ,சீப்பு ,கண்ணாடி தயாரிக்க எந்த புத்திசாலி அமெரிக்க முதலாளியும் முதலீடு செய்ய மாட்டார். அப்படியே செய்தாலும் அமெரிக்க ஊதியம் கொடுத்து உற்பத்தி செய்தால் கட்டுபடியாகாது . இன்று பத்து டாலருக்கு விற்கும் டீஷர்ட் நாளை 20 டாலருக்கு விற்கும் . மீண்டும் விலைவாசி உயர்வு பொதுமக்கள் தலையில் தான் விடியும்.சுற்றி வளைத்து ‘இந்தா பூச்சாண்டி’ என்று காட்டி பயமுறுத்தி மக்களை மேலும் அதிக வரி கட்ட வைப்பதில் தான் இது முடியும்.இப்படி அவதியுறும் மக்கள் பொருதாரார நெருக்கடி , மருத்துவ நெருக்கடி , இயற்கை சீற்றம் பேரழிவு என்று அரசிடம் போய் நிற்கவும் முடியாது . அரசு உதவிகள் அனைத்தையும் முடக்க வேண்டும் , அரசு என்பதையே சுருக்கி சின்னதாக்க வேண்டும் என்பது டிரம்பின் நோக்கம்.

FBI , DoJ , Federal agencies என்று எல்லா முக்கிய அரசு அமைப்புகளில் இருந்தும் ஆட்களை சரமாரியாக நீக்கி வருகிறார் . இங்கு லாபம் என்று பார்த்தால் – அரசுடன் நட்பாக இருக்கும் பெரும் முதலாளிகளுக்கு மட்டுமே எனலாம் . அவரவர்களுக்கு வசதியான கொள்கைகள் வகுக்கப்படும் , அவர்களே கூட அதை வகுத்து அரசுக்கு கொடுத்து விடுவார்கள் . ஏற்கனவே அளவற்ற பணம் படைத்த நிறுவனங்கள் மேலும் அதிகாரம் பெற்று குட்டி ராஜாங்கங்களாக வலம் வருவார்கள்.இப்படியெல்லாம் வேறு எங்காவது நடந்திருந்தால் அராஜகம், முற்றதிகாரம் , தனியுரிமை , முதலாளிகள் ஆட்சி என்று சற்றும் தயங்காமல் விமர்சிக்கும் அமெரிக்க ஜனநாயக லிபரல் மனங்கள் தான் இந்த அட்சியை தங்கள் நாட்டுக்கே விரும்பி தேர்ந்த எடுத்திருக்கின்றன என்பதை நம்புவதற்கு சற்று சிரமமாகத்தான் இருக்கிறது. தனக்கென்றால் தக்காளி சட்னி எனும் விசித்திரமான மனித இயல்பு.

இவ்வளவு நடந்த பின்னும் – அமெரிக்காவின் திறந்த சந்தை போக்கு , கட்டுப்பாடற்ற முதலீட்டியம் உருவாக்கும் அழிவு , பற்றி சற்றேனும் ஒரு பொது விவாதம் நிகழாது . கம்யூனிஸம் , சோசலிசம் இடையே உள்ள அடிப்படை வித்தியாசம் கூட விவாதிக்கப்படாது . மெக்கார்த்தியிசம் காலம் தொட்டு அப்படி ஒரு பூதம் முதலீட்டியத்தால் ஊட்டி வளர்த்தப்பட்டு வருகிறது.மெல்ல தனது வாலை தானே விழுங்கும் பாம்பாக அமெரிக்கா மாறி வருகிறது. அமெரிக்காவின் சரிவு என்பதை உறுதி செய்யும் வரலாற்று திருப்பு முனையாக அடுத்த நன்கு வருடங்கள் அமைந்தால் வியப்பதற்கில்லை. அப்படி நடந்தால் அதற்கு முக்கிய காரணமாக முதலீட்டியம் பின் நின்று இயக்கும் இந்த ‘அமெரிக்கன் பிராண்ட்’ அரசியலைச் சொல்லலாம்.

யோசித்துப் பார்த்தால் உலகத்தில் இருப்பதிலேயே மிகப்பெரிய கண்கட்டு வித்தை அரசியல்தான்|

கார்த்திக் வேலு

error: Content is protected !!