தமிழ் குரல் / AI Voice
அமெரிக்கா உலகளவில் மேன்மையான பொருளாதார நிலையைக் கொண்டுள்ளதாகப் பொதுவாக நம்பப்படுகிறது. ஆனால், உண்மையில் அமெரிக்கா நிதிப் பற்றாக்குறையில் கடனில் தான் இயங்கி வருகிறது. அமெரிக்க அரசின் கையிருப்பில் தற்போது காசில்லாமல் பொருளாதார நெருக்கடிக்கான அபாயம் ஏற்பட்டுள்ளது. ஜூன் 1ம் தேதிக்குள் அமெரிக்கா கடன் வரம்பை உயர்த்தவோ அல்லது நிறுத்தி வைக்கவோ இல்லை என்றால், அதற்கு முன்னதாகவே அமெரிக்கா தனது கடன் உச்சபட்ச வரம்பை எட்டிவிடும் என்று அமெரிக்க நிதியமைச்சர் ஜேனட் யெலன் காங்கிரசுக்கு அறிவித்துள்ளார்.

அமெரிக்க நிதித் துறை, 31.4 டிரில்லியன்அமெரிக்க டாலர் அளவுக்குக் கடன் வாங்கலாம் என்று ஏற்கெனவே அனுமதிக்கப் பட்டுள்ளது. இந்த உச்சவரம்பு, கடந்த ஜனவரி 19ஆம் தேதியே எட்டப்பட்டு விட்டது. இருப்பினும், ஜூன் வரை கையிருப்புத் தொகை நீடிக்கும் என நிதியமைச்சர் ஜேனட் யெல்லன் நம்பிக்கை தெரிவித்தார். ஜூன் 1க்குள் கையிருப்புத் தொகைக் கரைந்துவிடும் என்ற அச்சத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
காங்கிரஸ், செனட் தலைவர்களுக்கு எழுதிய கடிதத்தில், ஜேனட் யெல்லன் காங்கிரஸை ‘முடிந்தவரை விரைவில் செயல்படுத்துவதன் மூலம் அமெரிக்காவின் மீதான முழு நம்பிக்கையையும் கடனைத் திருப்பிச் செலுத்தும் நிலையையும் பாதுகாக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார்; அதன் சட்டப்பூர்வமாகப் பெறக்கூடிய கடன் உச்சவரம்பை உயர்த்த வேண்டும்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதத்தில், யெலன் காங்கிரஸை “முடிந்தவரை விரைவில் செயல்படுவதன் மூலம் அமெரிக்காவின் மீதான முழு நம்பிக்கையையும், கடன் முழுமையாக அடைக்கப்படும் என்ற நம்பிக்கையையும் பாதுகாக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தி உள்ளார்.
கடைசி நிமிடம் வரை காத்திருந்து கடன் வரம்பை இடைநிறுத்தம் செய்வது அல்லது உயர்த்துவது அமெரிக்கத் தொழில் வணிகத்திற்கும் நுகர்வோர் நம்பிக்கைக்கும் கடுமையான தீங்கு விளைவிக்கும்; வரி செலுத்துவோர் பெறும் குறுகிய காலக் கடனுக்கான செலவுகளை உயர்த்தும் மற்றும் அமெரிக்காவின் கடன் தர மதிப்பீட்டை எதிர்மறையாக பாதிக்கும் என்பதைக் கடந்த கால கடன் வரம்பு இடர்ப்பாடுகளில் இருந்து நாம் கற்றுக்கொண்டோம், என்று அவர் கடிதத்தில் கூறினார்.
ஜனவரி மாதத்தில், ஜேனட் யெல்லென் தனது துறையானது மத்திய அரசாங்கத்தின் கடனைத் தவிர்க்க ‘அசாதாரண நடவடிக்கைகளை’ நாடத் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். கடன் வரம்பை உயர்த்த அல்லது இடையில் நிறுத்துவதற்கு காங்கிரஸ் சரியான நேரத்தில் செயல்படுவது மிகவும் முக்கியமானது என்றும் அவர் கூறியிருந்தார்.
ஜனநாயகக் கட்சியினரும் வெள்ளை மாளிகையும் கூட்டாட்சி அரசின் கடன் வரம்பை அதிகரிக்க காங்கிரஸுக்கு அழுத்தம் கொடுக்கின்றன. அதிபர் ஜோ பைடன் பேச்சுவார்த்தையின்றி உச்சவரம்பை உயர்த்த விரும்புகிறார். குடியரசுக் கட்சியின் பெரும்பான்மையுடன் மிகச் சமீபத்தில் கடன் வரம்பு அதிகரிப்புக்கு ஈடாகச் செலவினக் குறைப்புகளை உறுதி செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த வாரம், வாஷிங்டனில் நடந்த கொள்கை மாநாட்டில், “நிபந்தனைகள் இல்லாமல் கடன் வரம்பை உயர்த்த அல்லது இடைநிறுத்த காங்கிரஸ் வாக்களிக்க வேண்டும்,, கடைசி நிமிடம் வரை இதற்காகக் காத்திருக்கக்கூடாது. இதை நிறைவேற்றுவது நமது தேசத் தலைவர்களின் அடிப்படைப் பொறுப்பு என்று நான் நம்புகிறேன்.” என்று அவர் கூறியுள்ளார்.அரசு கடன் உச்சவரம்பை மீறும் நிலையில் இருந்தாலும், இந்த ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் கடன் வாங்குவதை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் நிதியமைச்சகம் தெரிவித்திருந்தது.
இந்தக் காலாண்டில் 726 பில்லியன் டாலர் கடன் வாங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இது ஜனவரியில் திட்டமிடப்பட்டதை விட 449 பில்லியன் டாலர் அதிகமாகும். காலாண்டில் தொடக்கத்தில் குறைந்த பண இருப்பும், எதிர்பார்த்ததை விட குறைவான வருமான வரி வரவுகள், அதிகச் செலவினங்கள் இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
பொருளாதாரக் கொள்கைக்கான உதவிச் செயலர், எரிக் வான் நோஸ்ட்ராண்ட், ஒரு அறிக்கையில், “காங்கிரஸ் கடன் வரம்பை இறுதியில் உயர்த்தினாலும் கூட, தொடரும் நிச்சயமற்ற தன்மை கடன் வாங்கும் செலவுகளை அதிகரிக்கலாம், உழைப்புச் சந்தையை பலவீனப்படுத்தும் விதத்தில் பிற நிதி அழுத்தங்களைத் தூண்டலாம். உலக அளவில் அமெரிக்காவின் நிலையையும் பாதிக்கலாம்” என்று கூறியுள்ளார்.
\இதே நிலை பாகிஸ்தானுக்கோ, இலங்கைக்கோ ஏற்பட்டால் சர்வதேசப் பண நிதியத்திடமும், பிற நாடுகளிடமும் கையேந்திப் பிச்சையெடுக்க வேண்டும். ஆனால் அதே நிலை அமெரிக்காவுக்கு வந்தால் கையேந்த வேண்டியதில்லை. விருப்பம் போல் டாலரை அச்சடித்துக் கொள்ளலாம். உலகின் மொத்த சுமையையும் தாங்கிப் பொருளாதாரத்தைக் கட்டிக் காத்ததால் அமெரிக்காவுக்கு இந்நிலை நேர்ந்ததாகக் கருதப்படும்.
