அமேசான் தொடங்கிடுச்சு -ஆன்லைன் மருந்து விற்பனை!
அமேசான். இது இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் இ-காமர்ஸ் (டிஜிட்டல் வர்த்தகம்) செய்து வருகிறது. தற்போது கொரோனா ஊரடங்கில் இ-காமர்ஸ் தொழிலில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் சூழலில் நம் நாட்டில் முதன்முறையாக ஆன்லைன் மருந்து விற்பனையை அறிமுகப்படுத்தியுள்ளது அமேசான் நிறுவனம்.
கொரோனா ஊரடங்கு காரணமாக நோய்வாய்ப்பட்டவர்கள் வெளியே சென்று மருந்து வாங்குவதற்கும், மருத்துவர்களின் ஆலோசனைகளை பெறுவதற்கும் சிரமமாக கருதுவதால், பல ஆன்லைன் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குவதில் போட்டி போடுகின்றன. அதன்படி அண்மைக்காலமாக மருந்துகள் இ-காமர்ஸ் தளங்களில் விற்பனையாவது அதிகரித்துள்ளது. மருந்து விற்பனைக்காக பிரத்யேகமாக தொழில் செய்யும் சில இ-காமர்ஸ் நிறுவனங்கள் ஏற்கெனவே இயங்கி வருகின்றன. இந்நிலையில் தற்போது அமேசான் நிறுவனமும் மருந்து விற்பனை சேவையில் தடம் பதித்துள்ளது. “அமேசான் பார்மசி” என்ற சேவை, மருந்துகள், அடிப்படை சுகாதார சாதனங்கள் மற்றும் பாரம்பரிய இந்திய மூலிகை மருந்துகளை வழங்கவுள்ளன.
முதல் கட்டமாக கர்நாடகா மாநிலம் பெங்களூரு நகரத்தில் மட்டும் இந்த சேவையை தொடங்கியுள்ள அமேசான், விரைவில் மற்ற நகரங்களிலும் இதனை விரிவுப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது. மருத்துவர் பரிந்துரைத்த மருந்து சீட்டில் உள்ள மருந்துகளை ஆர்டர் செய்தால் அங்கீகரிக்கப்பட்ட மருந்தகங்களில் இருந்து பெற்று விநியோகிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஆன்லைன் மருந்து விற்பனை அல்லது இ-மருந்தகங்களுக்கான விதிமுறைகளை இந்தியா இன்னும் இறுதி செய்யவில்லை. ஆனால் மெட்லைப், நெட்மெட்ஸ், பார்ம் ஈஸி போன்ற பல ஆன்லைன் விற்பனைதளங்களின் வளர்ச்சி, பாரம்பரிய மருந்து கடைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.