தமிழ் குரல் / AI Voice
நாடு முழுவதும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள், மீ டு இயக்கத்தின் மூலம் பலர் மீது பாலியல் புகார்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் மத்தியமைச்சர் அக்பர் தங்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக 14 பெண்கள் இதுவரை புகார்கள் அளித்துள்ளனர். சுமார் 15-20 வருடங்களுக்கு முன், அவர் பத்திரிக்கை ஆசிரியராக இருந்தபோது இந்த சம்பவங்கள் நடந்ததாக கூறப்பட்டாலும், இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்ற அமைச்சர் அக்பர், இன்று நாடு திரும்பினார். அவர் உடனடியாக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என நெருக்கடி எழுந்து வந்த நிலையில், ராஜினாமா கடிதத்தை அனுப்பி விட்டதாக முன்னர் கூறப்பட்டது.
இந்நிலையில், இன்று பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில், தான் ராஜினாமா செய்வதாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இது குறித்து அக்பர் வெளியிட்ட அறிக்கையில், தனது நடத்தை மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை, ஜோடிக்கப்பட்டவை என்று அவர் கூறியுள்ளார் மேலும் , ’என் ,மீதான குற்றச்சாட்டுகள் தவறானது மற்றும் திரித்து கூறப்பட்டுள்ளது. அரசாங்க சுற்றுப்பயணமாக வெளிநாடு சென்றிருந்ததால் முன்னரே பதிலளிக்க முடியவில்லை. ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டுவது வைரலாகி வருகிறது. ஒன்றாகப் பணியாற்றும்போது நான் தவறாக நடக்க முயற்சித்ததாக கஸாலா வஹாப் கூறுகிறார். நாங்கள் இருவரும் ஒன்றாகப் பணி யாற்றியது ஏசியன் ஏஜ் ஊடகத்தில்தான். அதுவும் மிக சிறிய அறையில்தான் ஆசிரியர் குழு பணியாற்றியது. அத்தகைய சூழலில் நான் அவரிடம் தவறாக நடந்துகொண்டேன் என்று கூறுவது நம்பும் படியாக இல்லை.இதேபோல், அஞ்சு பார்தி என்பவர் நான் நீச்சல்குளத்தில் பார்ட்டி கொண்டாடியதாக கூறுகிறார். ஆனால், எனக்கு நீச்சலடிப்பது எப்படி என்றே தெரியாது.
ஓர் ஆண்டுக்கு முன்னதாக பத்திரிகையாளர் பிரியாமணி ஒரு இதழில் கட்டுரை மூலம் இந்தப் பிரச்சாரத்தைத் தொடங்கினார். ஆனால் அவர் என்பெயரைக் குறிப்பிடவில்லை, காரணம் அவருக்குத் தெரியும் அது சரியில்லாத ஒரு செய்தி என்று. சமீபத்தில் என்னை ஏன் குறிப்பிட வில்லை என்று கேட்டதற்கு அவர் அளித்த ட்வீட் பதிலில், ‘அவர் பெயரைக் குறிப்பிடவில்லை, காரணம் அவர் எதுவும் செய்யவில்லை’ என்று கூறியிருக்கிறார்.
நான் எதுவும் செய்யவில்லை என்றால் இவையெல்லாம் எங்கிருந்து முளைத்தன? இதில் செய்தியே இல்லை, எல்லாமே மறைமுகக் குத்தல் பேச்சு, ஊகம், நடக்காத ஒன்றைச் சுற்றி வசைமாரி பின்னப்படுகிறது. இதில் சில நிரூபணமே இல்லாத வெறும் வதந்தியே. மற்றவர்கள் நான் எதுவும் செய்யவில்லை என்பதை பதிவு செய்துள்ளன
பொதுத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் ஏன் இந்த சர்ச்சை எழுந்துள்ளது. ஏதாவது திட்டம் உள்ளதா? நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.இந்த தவறான, அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் என் புகழ் மற்றும் நல்லெண்ணத்திற்குக் களங்கம் ஏற்படுத்துகிறது. பொய்களுக்கு கால்கள் கிடையாது. ஆனால், அவை விஷத்தன்மை நிறைந்தவை. இது ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. நான் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.


