ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் !

ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் !

ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் என்றக் காந்தப் பெயர் ஹாலிவுட்டைத் தாண்டி கோலிவுட்டில் கூட தெரியாதவர் இருக்க முடியாது. ஆல்பிரட் ஹிட்ச்காக் 1899ம் ஆண்டில் ஆகஸ்ட் 13ம் தேதி பிறந்தார்.பொதுவாக 13 என்பது மேற்கத்திய உலகினருக்கு அதிர்ஷ்டமில்லாத எண். ஆனால் இவருக்கு இதுவே ராசியான எண்ணாக அமைந்துவிட்டது. பிரிட்டனில் சில மௌனப்படங் களை இயக்கிய பிறகு அவர் ஹாலிவுட்டுக்கு வந்தார்.1956ல் அமெரிக்க குடியுரிமை பெற்ற அவர் சினிமா கலையின் புதிய சகாப்தத்தை உருவாக்கினார். ரசிகர்களை திகிலடைய வைக்கும், முதுகுத் தண்டைச் சில்லிட வைக்கும் திடுக்கிடும் திருப்பங்கள் கொண்ட திரைக்கதைகளையே அவர் படமாக்கினார்.

கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் ஹிட்ச்காக்கின் ஐந்தாவது வயதில் நடந்த ஒரு நிகழ்வு, முக்கியமானதாக கருதப்படுகிறது. அவரது சேட்டை தாங்காமல் அவரது தந்தை அவரிடம் ஒரு பேப்பரில் ஏதோ எழுதிக்கொடுத்து, உள்ளூர் போலீஸ் ஸ்டேசனில் போய் அதைக் கொடுக்கச் சொன்னார். இவரும் அதை எடுத்துப் போய்க்கொடுக்க, அதைப் படித்த போலீஸ் ஹிட்ச்காக் கை தூக்கி உள்ளே வைத்துவிட்டார்கள். ஏனென்றால் அதில் ஏறக்குறைய இப்படி எழுதி இருந்தது : ‘தவறு செய்தால் என்ன தண்டனை என்று அவனுக்குப் புரியவேண்டும். எனவே அவனை கொஞ்சநேரம் உள்ளே வைத்து, மிரட்டி அனுப்பிவையுங்கள்…முடியல!’

போலீஸாரும் சிறிதுநேரம் கழித்து ‘இப்போது புரிந்ததா? இனி தவறு செய்யக்கூடாது’ என்று அறிவுரை சொல்லி, ஹிட்ச்காக்கை விடுதலை செய்தார்கள். ஜெயிலில் இருந்த கொஞ்ச நேரத்தில் சிறுவன் ஹிட்ச்காக், பயந்துபோனார். பின்னர் வாழ்க்கை முழுவதுமே ‘எதற்கும் எளிதில் பயப்படக்கூடியவராக, குறிப்பாக போலீஸ் என்றால் நடுங்கக்கூடியவராக’ ஆனார் ஹிட்ச்காக். மனரீதியில் அவரால் அந்த பயத்தில் இருந்து மீள முடியவில்லை. எது தனது குறையோ, அதையே தன் வெற்றிக்குப் படிக்கட்டாக ஆக்கினார் ஹிட்ச்காக். ஆம். ‘பயம் என்றால் என்ன? எதெற்கெல்லாம் பயப்படுகிறோம்?’ என்பதில் தெளிவடைந்த அவர், பின்னாளில் தன் படங்களை ‘பய உணர்ச்சியைத் தூண்டும்’ த்ரில்லர்களாக அமைத்தார். பார்வையாளர்களின் உணர்ச்சிகளுடன் எப்படி விளையாடுவது என்பதில் கைதேர்ந்தவராக ஆனார்.

Henley Telegraph Company எனும் கேபிள் கம்பெனியில் தன் பதினைந்தாவது வயதில் வேலைக்குச் சேர்ந்தார். அதே நேரத்தில் ஓவியக்கலை பற்றியும் University of London-ல் படிக்க ஆரம்பித்தார். அதையறிந்த அவரின் கம்பெனி, தங்கள் விளம்பரத்திற்கு அவரை டிசைன் செய்து தரும்படி கேட்டது. சந்தோசமாக தன் கலைப்பயணத்தை அதன்மூலம் தொடங்கினார் ஹிட்ச்காக். அந்த கம்பெனி வெளியிட்ட நிறுவன மலர் இதழ்களில் கட்டுரைகளும் கதைகளும் எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய முதல் கதை Gas(1919), ஒரு பெண் தன்னை யாரோ தாக்கியதாக உணர்வதும், அது மாயை – அந்தப் பெண்ணின் கற்பிதம் என்று கிளைமாக்ஸில் தெரிவதாகவும் இருந்தது. அதாவது, முதல் கதையிலேயே தன்னுடைய பாதை என்ன என்பதை அவர் உணர்ந்திருந்தார். மர்மம், மாயை, கொலை, சஸ்பென்ஸ் என்பதெல்லாம் ஹிட்ச்காக்கின் ஃபேவரிட் விஷயங்கள்!

ஆனாலும் காட்சி வழியே கதை சொல்லும் பாணியால் உலகையே வியக்க வைத்தார். தஸ்த வஸ்க்கியின் கிரைம் அன்ட் பனிஷ்மென்ட் எப்படி ஒரு மர்ம நாவல் போல தெரிந்தாலும் அதைக் கடந்த தத்துவார்த்தப் பிரச்சினைகளைப் பேசுகிறதோ அதைப் போலவே, ஹிட்ச்காக் கின் திரைப்படங்களும் தத்துவ சாயை கொண்டிருந்தன. மரணபயம், அச்சம், துரோகம் போன்ற காரணங்களால் அந்தப் படங்கள் உளவியல் மற்றும் சமூகவியல் ஆவணங்களாகவும் கருதப்பட்டன.

ஹிட்ச்காக் ஹாலிவுட்டுக்கு வந்த போது ஸ்டூடியோ முறை பிரபலமாக இருந்தது.தயாரிப்பு, விநியோகம், திரையிடுதல் போன்ற சகல விஷயங்களிலும் ஈடுபட்டு பிரம்மாண்டமான நெட்வொர்க்கை கொண்டிருந்த 5 முன்னணி ஸ்டூடியோக்களில் நடிகர்கள் உட்பட அனைவரும் மாதச் சம்பளத்துக்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்படியான இன்றைய Paramount Pictures, 1920ஆம் ஆண்டு இங்கிலாந்தில் தங்கள் கிளையை ஆரம்பித்தது. பிரிட்டிஷ் படங்கள் தயாரிப்பதில் இறங்கியது. அந்த அமெரிக்க கம்பெனியில் வேலை செய்வதன் மூலம், சினிமா பற்றி மேலும் கற்றுக்கொள்ள முடியும் என்று நினைத்த ஹிட்ச்காக், அங்கே ‘டைட்டில் டிசைனர்’ வேலைக்கு விண்ணப்பித்தார். அது மௌனப்படக் காலம் என்பதால், படத்தின் முதலில் மட்டுமல்லாது இடையிலும் வசனங்களை டைட்டிலாக காட்ட வேண்டும். அதற்கு ஓவியத்திறன் மட்டுமல்லாது, எதையும் சுருக்கமாகச் சொல்லும் எழுத்துத்திறனும் வேண்டும். ஓவியம், கதை இரண்டிலும் அனுபவமுள்ள ஹிட்ச்காக், எளிதில் தேர்ந்தெடுக்கப்பட்டார். டைட்டில் டிசைனராக அவர் வாழ்க்கை, சினிமாவில் ஆரம்பித்தது.

சீக்கிரமே டைட்டில் டிபார்ட்மெண்ட்டுக்கு ஹெட்டாக ஆனார் ஹிட்ச்காக். டைட்டில் எழுதும் போது, திரைக்கதை ஆசிரியர்கள் மற்றும் இயக்குநர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டார். ஆர்ட் டைரக்டர் மற்றும் அசிஸ்டெண்ட் டைரக்டர் வேலை கிடைத்ததால், ஹிட்ச்காக். Islington Studios எனும் வேறொரு நிறுவனத்திற்கு அடுத்து மாறினார். அங்கே தான் பின்னாளில் அவர் மனைவியாக Alma Reville -ஐச் சந்தித்தார். ஹிட்ச்காக்கை விட பெரிய போஸ்ட்டில் இருந்தார் அல்மா. (இயக்குநர் ஆகும்வரை அல்மாவிடம் அடக்கியே வாசித்தார் ஹிட்ச்காக்..பின்னர் காதலித்து திருமணம் செய்துகொண்டார்!) ஜெர்மனியில் தயாரான The Blackguard எனும் படத்தில் ஆர்ட் டைரக்டராக வேலை செய்தார் ஹிட்ச்காக். அங்கே தான் German Expressionism பற்றி கற்றுத் தேர்ந்தார். அவரது படங்களில் ஸ்டைலாக, அது பின்னாளில் ஆகியது.

1922ஆம் ஆண்டு, முதன்முதலாக Number 13 எனும் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. பாதி ஷூட்டிங்கிலேயே படம் ட்ராப் செய்யப்பட்டது. அடுத்து அவர் இயக்க ஆரம்பித்த Always Tell Your Wife படத்திற்கும் அதுவே நிகழ்ந்தது. பின்னர் 1925ஆம் ஆண்டு தான் அவரது முதல் முழுமையடைந்த படமாக The Pleasure Garden படம் உருவானது. ஆனாலும் பெரும்பாலான இடங்களில் அது ரிலீஸ் ஆகவில்லை. அந்த நேரத்தில் தான் முதல் ஹிட்ச்காக் ஸடைல் படமான The Lodger(1927) ரிலீஸ் ஆனது. அந்த படத்தின் வெற்றி, ஹிட்ச்காக்கை பிரபல இயக்குநராக ஆக்கியது. அவரது முந்தைய படமும் அதன்பின்னரே மக்களைச் சென்றடைந்தது.

எட்டு (முழுமையடைந்த) மௌனப்படங்களை எடுத்தபின்னர், ஹிட்ச்காக் பிரிட்டிஷ் சினிமாவின் முதல் பேசும்படமான The Blackmail(1929)-ஐ எடுத்தார். பேசும்படங்களை விட மௌனப்படங்களே உண்மையான சினிமா எனும் எண்ணம் ஹிட்ச்காக்கிற்கு இருந்தது. இருப்பினும் டெக்னாலஜி வளர்ச்சியுடன் மோதாமல், பேசும்படங்களைத் தொடர்ந்து எடுக்க ஆரம்பித்தார். பொதுவாக ஹிட்ச்காக் எதனுடனும், யாருடனும் மோதுவதில்லை. எதையும் சரியென்று இலகுவாக எடுத்துக்கொண்டு முன்னகரும் மனது அவருக்கு இருந்தது.

ஆனாலும் ஆரம்பத்தில் ரிலீஸான தவறான குற்றத்தின் வலைக்குள் வந்து சிக்கிக் கொள்ளும் ஹிட்ச்காக்கின் கதாபாத்திரங்கள் தாஸ்தயவஸ்கியின் நாவல் பாத்திரங்களுக்கு நிகரான மதிப்பைப் பெற்றன.ஆசை, பொறாமை, சந்தேகம் போன்ற குணங்களால் ஏற்படக் கூடிய வன்முறை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உணர்ச்சியின் மிகுதியால் நிகழ்ந்துவிடும் கொலை போன்ற குற்றங்களின் மறுபக்கத்தை ஹிட்ச்காக்கின் படங்கள் ஒளியூட்டின.இதனால்தான் தாஸ்தயவஸ்கி, காப்காவுக்கு இலக்கியத்தில் உள்ள இடம் சினிமாவில் ஹிட்ச்காக்குக்கு உண்டு

.அவருடைய திரைக்கதை உத்திகள் ரசிகர்களுக்கு அதிகபட்ச திகிலையும் தவிப்பையும் ஏற்படுத்தும் நோக்கம் உடையவை. அழகான பெண்களை கொலை செய்வதற்கு ஏற்ற கதாபாத்திரங்கள் என்று தனது படப் பாத்திரங்களைப் பற்றி ஹிட்ச்காக் கூறுகிறார்.ஓர் அழகான பெண் அநியாயமாக கொலை செய்யப்படும் போது ஏற்படும் அனுதாபம் மொத்தமும் அவளுக்கு கிடைத்துவிடும் என்ற அவரது கணிப்பு சரியானதுதான்.

சைக்கோ படத்தில் கதாநாயகி ஷவரில் குளி்க்கும்போது கொலை செய்யப்படும் அந்த பிரசித்திப் பெற்ற காட்சி சினிமா ரசிகர்களால் மிகவும் சிலாகிக்கப்படுகிறது. அழகான கழுத்து வெட்டுவதற்கு ஆசையைத் தூண்டுவது என்ற விதமாக படுகொலை படங்களின் தந்தையான ஹிட்ச்காக் கூறுவார் என்றாலும் அவர் உண்மையில் போலீஸ்காரர்களைப் பார்த்தால் பயந்த சுபாவம் உடையவராகவே இருந்தார்.

ஒரு படத்தின் வில்லன் எவ்வளவு வெற்றிகரமாக செயல்படுகிறானோ அந்த அளவுக்கு படம் வெற்றி பெரும் என்பது அவர் கணிப்பு. மிகச் சாதாரணமான பின்புலங்களில் மிக அதீதமான நிகழ்ச்சிகள் நடைபெறுவதாக காட்டுவது அவருக்குப் பிடித்தமானது. இருள் கொண்ட திகிலான ஒரு பாழடைந்த கட்டிடத்தில் ஒரு கொலை நடப்பதைக் காட்டுவதை விட மக்கள் புழுங்கும் இடத்தில், கூட்டத்தின் இடையே வில்லன் புகுந்து கொலை செய்து தப்பிச் செல்வது பரபரப்பை ஏற்படுத்தும் என்பதை நன்கு அறிந்த ஹிட்ச்காக் இந்த உத்தியையே பின்பற்றினார்.

தி மேன் ஹூ நியு டூமச் படத்தில் இசை நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் கொலை நடக்கும் போது ஏற்பட்ட பரபரப்பை நினைத்துப் பாருங்கள். ரசிகர்களை அது அந்தளவுக்கு திடுக்கிட வைத்தது. தனக்கு வலுவான விஷூவல் மைன்ட் இருப்பதாக ஹிட்ச்காக் ஒருமுறை கூறினார்.

படத்தின் திரைக்கதை தயாரானதும் அதை முழுவதுமாக காட்சி வடிவில் கற்பனை செய்துக் கொள்வதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். அதன் பிறகு அந்த திரைக்கதையை புரட்டிக் கூடப் பார்க்க மாட்டாராம். அதை தன் உள்ளத்தால் அணு அணுவாக அறிந்து வைத்திருப்பதாக அவர் கூறுவார். ஹிட்ச்காக் படங்களில் பெண்களுடனான மனித உறவுகளுக்கு கூடுதல் அழுத்தம் தரப்பட்டிருந்தது. குறிப்பாக தாயுடன் மனிதன் கொள்ளும் உறவு அவருடைய படங்களில் கூடுதல் முக்கியத்துவம் பெற்றது.

நடிகர்களை மந்தையைப் போல் நடத்தியவர் என்று ஹிட்ச்காக் மீது புகார் உண்டு. ஆனால் நடிப்புக்கு என வந்துவிட்ட பிறகு அவர்கள் திரைக்கதைக்கு நியாயம் செய்ய வேண்டும் என்றும் ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியவர் ஹிட்ச்காக்.

60 ஆண்டு திரையுலக வாழ்வில் 53 படங்களை இயக்கியவர் ஹிட்ச்காக். Rear Window, A Man who knew too much, 39 Steps, Psycho, Vertigo, Rebecca போன்ற படங்கள் அவருடைய சாதனைகளாக கருதப்படுகின்றன.

அகடமி விருதுகள் அவருக்கு பலமுறை நிராகரிக்கப்பட்ட போதும் ஸ்பெல் பவுண்ட் என்ற படத்தின் இசைக்கு அகடமி விருது கிடைத்தது. கலிபோர்னியாவில் தமது இறுதிக்காலத்தைக் கழித்த அவர் 80 வது வயதில் 1960ம் ஆண்டில் இதே நாளில் காலமானார். எந்த வித திடுக்கிட வைக்கும் மர்மம் இல்லாமல் இயற்கையாகவே அவர் உயிர் பிரிந்தது.

error: Content is protected !!