டெல்லியில் விஷம் போல் பரவும் காற்று மாசு.. பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு..!

டெல்லியில் விஷம் போல் பரவும் காற்று மாசு.. பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு..!

டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்து காற்றின் தரக் குறியீடு 400க்கும் அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக முண்ட்கா பகுதியில் 498 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. காற்றின் தரக் குறியீடு 400ஐ கடக்கும்போது அது அபாய கட்டமாகக் கருதப்படுகிறது. இந்த அளவுக்கு மாசுபட்டுள்ள காற்றை ‘உடல் ஆரோக்கியம் உள்ளவர்களையும் பாதிக்கக்கூடியது’ என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வகைப்படுத்தி உள்ள டெல்லியில் உள்ள ஐந்தாம் வகுப்பு வரையிலான தொடக்க பள்ளிகளுக்கு நவம்பர் 5-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது அது நவம்பர் 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என என்று டெல்லியின் கல்வி அமைச்சர் அதிஷி இன்று தெரிவித்துள்ளார்.

டெல்லியின் காற்று மாசு வழக்கமாக நவம்பர் 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் அதிகரிக்கும். அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியானாவில் இந்தக் காலத்தில்தான் விவசாயிகள் வேளாண் கழிவுகளை எரிக்கிறார்கள் என்று டெல்லி மாசு கட்டுப்பாடு குழு தெரிவிக்கிறது.நுரையீரல் அடைப்பையும், பல நுரையீரல் பாதிப்புகளையும் ஏற்படுத்தக் கூடிய PM 2.5 என்ற துகள்களின் அளவு வியாழக்கிழமை மாலை அதிகரித்துள்ளது. காற்றில் ஒரு கன மீட்டரில் 60 மைக்ரோகிராம் மட்டுமே இருக்கவேண்டிய PM2.5, நேற்று நகரத்தின் பல்வேறு இடங்களில் அதைவிட ஏழு முதல் எட்டு மடங்கு அதிகமாக இருந்ததாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையின் நுரையீரல் மற்றும் சுவாச பிரச்னைகளுக்கான துறையின் இயக்குநர் மருத்துவர் சந்தீப் நாயர் டெல்லி தற்போது விஷ வாயு அறை (மனிதர்களைக் கொல்வதற்காகப் பயன்படுத்தும் விஷ வாயுவைக் கொண்ட அறை) போன்று உள்ளதாக எச்சரித்திருந்தார்.

நிலைமையைக் கருத்தில் கொண்டு டெல்லியில் 6 முதல் 12 வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறலாம் என்றும் கல்வி அமைச்சர் கூறினார். டெல்லி கல்வி அமைச்சர் அதிஷி கூறுகையில், டெல்லியில் அதிக அளவு காற்று மாசுபாடு சுகாதார அடிப்படையில் மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளது. குறிப்பாக இது குழந்தைகளுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு, டெல்லியில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளையும் நவம்பர் 10-ஆம் தேதி வரை மூடுவதற்கு அரசு முடிவு செய்துள்ளது என கூறினார்.

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் கூற்றுப்படி, டெல்லியின் ஷாதிபூர் பகுதியில் உள்ள மக்கள் அதிகபட்ச மாசுபாட்டை எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. டெல்லியில் கடந்த மூன்று நாட்களாக காற்றின் தர அளவு மோசமாக உள்ளது. டெல்லி குதுப்மினார் பகுதியில் ஆளில்லா விமானம் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் தெற்கு டெல்லி பகுதியில் மூடி படர்ந்த புகை மூட்டம் போல காட்சியளித்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலை அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கும் என மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இதை அடுத்து “இது மிகவும் ஆபத்தான அளவை எட்டியுள்ளது. வெளியில் சென்றாலே, கண்களில் எரிச்சல், தொண்டையில் வலி உண்டாகிறது. எங்கள் மருத்துவமனையில் புறநோயாளிகளின் எண்ணிக்கை 20-30% அதிகரித்துள்ளது. விஷ வாயுக்கள் உடலுக்குள் செல்லும்போது, அனைத்து உறுப்புகளையும் பாதிக்கும். ஆனால் வேலைக்காக நாம் வெளியே செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது.எனவே வெளியில் செல்பவர்கள், முகக் கவசம் அணிந்து, உடலை முழுவதுமாக மறைக்கும் ஆடைகளை அணிந்துகொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவு, போதிய அளவு தண்ணீரும் உட்கொள்ள வேண்டும்“ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!