அ.தி.மு.க-வில் ‘துக்ளக் தர்பார்’ – எடப்பாடியின் பயம் தணிக்கப்படுமா?

அ.தி.மு.க-வில் ‘துக்ளக் தர்பார்’ – எடப்பாடியின் பயம் தணிக்கப்படுமா?

ரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்பார்கள். ஆனால், அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை, நிரந்தர நம்பிக்கைக்குரியவரும் இல்லை என்பது மீண்டும் ஒருமுறை உறுதியாகியுள்ளது. ஒரு காலத்தில் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராகவும், முன்னாள் அமைச்சராகவும் இருந்த செங்கோட்டையனிடமிருந்த அனைத்துப் பொறுப்புகளும் பிடுங்கப்பட்டிருப்பது, இதை மீண்டும் நிரூபிக்கிறது. இது அவருக்கு அதிர்ச்சி அளித்திருக்கலாம், ஆனால் கட்சியின் தற்போதைய போக்கைப் பார்த்தால், இது பெரிய ஆச்சரியமில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. உண்மையில், அவரை கட்சியிலிருந்து முழுவதுமாக நீக்காமல் விட்டதே எடப்பாடி பழனிசாமியின் ‘பெருந்தன்மை’ என்று சொல்ல வேண்டும்.

அ.தி.மு.க-வில் இப்போது நடப்பது ‘துக்ளக் தர்பார்’ போலவே இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். துக்ளக்கின் தன்னிச்சையான முடிவுகளைப் போல, எடப்பாடியின் அதிரடி நடவடிக்கைகளும் கட்சியின் ஒற்றுமையைக் குலைப்பதாக உள்ளன. இந்த தர்பாரில் முதலில் தடுக்கி விழுந்தவர் ஓ.பன்னீர்செல்வம், இப்போது செங்கோட்டையன். இந்த நடவடிக்கைகள் எடப்பாடிக்குச் சாதகமாக அமையும் என்று நினைத்தால், அது தவறான எண்ணம். மாறாக, இந்த நடவடிக்கைகள் அவரை மேலும் பலவீனப்படுத்துவதற்கே வழி வகுக்கும்.

கட்சிக்குள் பிரிந்து கிடக்கும் அனைத்துக் குழுக்களையும் ஒன்றிணைத்தால், அ.தி.மு.க வலிமை பெறும். பா.ஜ.க-வின் பிடியிலிருந்து விடுபட்டு, தனித்து நின்று, வரும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும். ஆனால், இந்த ஒன்றிணைப்பு தனது தலைமைப் பதவிக்கு ஆபத்தாக அமையுமோ என்ற பயம் எடப்பாடியின் மனதை ஆக்கிரமித்துள்ளது. ஒருவேளை முதல்வர் பதவி கிடைக்காவிட்டாலும், எதிர்க்கட்சித் தலைவர் பதவியாவது கிடைக்கும்; அதுவும் இல்லையென்றால் அரசியல் வாழ்வே கேள்விக்குறியாகிவிடும் என்ற பயம் அவரைத் துரத்துகிறது. இந்தப் பயத்தை மறைப்பதற்காகத்தான், அவர் இதுபோன்ற தன்னிச்சையான, அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அ.தி.மு.க ஒரு ஆரோக்கியமான கட்சியாக வளர்ந்து, மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்றால், அதற்கு ஒரேயொரு வழிதான் உள்ளது. எடப்பாடி பழனிசாமி முதலில் தனது பயத்தையும், ‘தான்’ என்ற அகம்பாவத்தையும் கைவிட வேண்டும். அதன் பிறகு, பிரிந்து கிடக்கும் அல்லது அவமரியாதையாக நடத்தப்பட்ட அனைவரையும் அழைத்து, மனம்விட்டுப் பேச வேண்டும். அவர்கள் அனைவரையும் வெற்றிக்காக ஒன்றிணைப்பதுதான் ஒரு உண்மையான தலைவனின் பண்பு.

இந்த ஒருங்கிணைப்பைச் செய்துவிட்டால், ‘துக்ளக் தர்பார்’ மெல்ல மெல்ல மறைந்துவிடும். இப்போது தனிக்காட்டு ராஜாவாக வலம் வரும் தி.மு.க-வுக்கும் ஒரு அச்சம் உருவாகும். மேலும், பா.ஜ.க-விடமும் “சற்றே விலகி இரும் பிள்ளாய்” என்று சொல்ல முடியும்.

ஆனால், விதி வலிமையாக நின்றால் என்ன செய்வது? “விதி நின்றது; பிடர் பிடித்து உந்த நின்றது” என்று கும்பகர்ணனுக்கு விதி வலிமையாக நின்றது போல, எடப்பாடியின் விதியை விடவும் வலிமையாக பா.ஜ.க அவருக்குப் பின்னால் நிற்குமானால், இந்த மாற்றங்களை நம்மால் எதிர்பார்க்க முடியாது. அ.தி.மு.க-வின் எதிர்காலம், எடப்பாடியின் தனிப்பட்ட பயத்தையும், பா.ஜ.க-வின் அழுத்தத்தையும் கடந்து, ஒரு சிறந்த ஒருங்கிணைப்பை நோக்கிச் செல்கிறதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

செ.இளங்கோவன்

error: Content is protected !!