தமிழ் குரல் / AI Voice
150 ஆண்டுகள் பழமையான (Adultery Law, Section 497) தகாத உறவு குறித்தான வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று முக்கிய தீர்ப்பளித்துள்ளது. இத் தீர்ப்பில், ‘ஒரு பெண் கணவன் அல்லாத வேறு ஒருவருடன் உறவு கொள்வது மட்டுமே கிரிமினல் குற்றம் ஆகாது. தகாத உறவால் யாரும் தற்கொலைக்கு தூண்டப்படாத வரையில் இது குற்றம் அல்ல. பிடிக்கவில்லையெனில் விவாகரத்து பெறலாம்’ என்று தெரிவித்துள்ளது.
நம் நாட்டில் கள்ளக் காதலில் ஈடுபடும் ஆணுக்கு மட்டும் தண்டனை வழங்கப்படுகிறது. அதுவே பெண்ணுக்கு எந்த தண்டனையும் இல்லை. எனவே, இந்திய தண்டனைச் சட்டம் 497வது பிரிவை மாற்ற வேண்டும் என்று ஜோசப் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி சுப்ரீம் கோர்ட் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதற்கு மத்திய அரசு தாக்கல் செய்த 11 பக்க பதில் மனுவில், “கள்ளக்காதலில் ஈடுபடும் மனைவிக்கு எதிராக கணவர் புகார் கொடுத்தால் அவனது மனைவியுடன் பழகிய ஆணுக்கு மட்டுமே தண்டனை கொடுக்க முடியும். கணவன் கள்ளக்காதலில் ஈடுபட்டால் மனைவியால் புகார் கொடுக்க முடியாதநிலை உள்ளது. ஆண்- பெண் சமத்துவத்திற்கு எதிரானதாக இருக்கும் ஐபிசி 497 ஆவது பிரிவை நீக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணையின்போது ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர், “திருமணமான பெண் ணுடன் வேறு ஒரு ஆண் பழகுவது உறுதி செய்யப்பட்டால் அந்த ஆணுக்கு மட்டும் அபராதத்துடன் 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க முடியும். ஆனால் இதே குற்றத்தை செய்த பெண்ணுக்கு அந்த 5 ஆண்டுகள் தண்டனையை வழங்க முடியாது என சட்டத்தில் உள்ளது” என்றார்.
மேலும் “கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்கள் குறித்து சட்டத்தில் எதுவும் குறிப்படப்படவில்லை. எனவே கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்களுக்கு தண்டனை சட்டம் இல்லை” என்றும் கூறினார். இதைக் கேட்ட நீதிபதிகள், திருமணத்தின் புனிதத்தைக் காப்பாற்ற இந்த சட்டப் பிரிவு அவசியம். அதேநேரத்தில் பெண் உரிமை, ஆண் – பெண் சமநிலை போன்றவற்றை காப்பாற்ற அதில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பான விசாரணை நடைபெறும். இந்த வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிப்பதற்கு பதில், இதைவிட அதிகமான நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தால் நன்றாக இருக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதனால், இந்த வழக்கு விசாரணை வேறு அமர்வுக்கு மாற்றப்படுவதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது
அதன் படி இந்த வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமியினான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கியது.
.இதன் தீர்ப்பை வாசித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, “ஆணும், பெண்ணும் சம உரிமை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். பெண்ணின் எஜமானர் கணவன் அல்ல. பெண் களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவது சட்ட விதிகளை மீறுவதாகும். தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு மட்டும் 5 வருட சிறைத்தண்டனை என்பது சரியல்ல. எனவே பிரிவு 497 அரசியல் சாசனத்தில் இருந்து நீக்கப்படுகிறது. கணவன் -மனைவி இடையே விவாகரத்து நடக்க தகாத உறவும் காரணமாக உள்ளது. தற்கொலைக்கு தூண்டும் விதத்தில் தகாத உறவு இருந்தால் அது கிரிமினல் குற்றம். அதன் பேரில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்” என தெரிவித்துள்ளது.
சமீபத்தில் கூட இந்தியாவில் ஓரின சேர்க்கைக்கு அனுமதி அளித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது பலத்த வரவேற்பையும் சர்ச்சையையும் பெற்ற நிலையில் வேறொருவர் மனைவியுடன் அவரது ஒப்புதலுடன் உடலுறவு கொள்ளும் தகாத உறவு சட்டப்படி குற்றமில்லை என்று வெளியான தீர்ப்பும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


