போதை சாம்ராஜ்ய பேரரசன் ஜாஃபர் சாதிக் கைது!- முழு விபரம்!

போதை சாம்ராஜ்ய பேரரசன் ஜாஃபர் சாதிக் கைது!- முழு விபரம்!

போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப் பொருட்களை (சூடோபெட்ரின்), தேங்காய் பவுடர் மற்றும் ஹெல்த் மிக்ஸ் (சத்து மாவு) பாக்கெட்களில் மறைத்து வைத்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அத்தகவலும் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் டெல்லியில் கடந்த மாதம் குடோன் ஒன்றில் 50 கிலோ சூடோபெட்ரின் எனும் போதைப் பொருளை பறிமுதல் செய்த போதே கிடைத்தது. அது குறித்து,தமிழகத்தைச் ச் சேர்ந்த மூன்று பேரை அதிகாரிகள் விசாரித்தபோது, தி.மு.க நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் தான் இந்தப் போதைப்பொருள் கடத்தலின் மூளை என்று தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, அவர் தலைமறைவாகி விட்டான். ஒருபக்கம் தி.மு.க இவரை கட்சியிலிருந்து நீக்கம் செய்ய, இன்னொருபக்கம் அதிகாரிகள் இவரைத் தேடிவந்தனர். அதே சமயம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இந்த கும்பலே கடந்த மூன்று ஆண்டுகளில் 2000 கோடி ரூபாய் மதிப்பிலான வேதிப்பொருட்களை கடத்தியதும் தெரியவந்துள்ளது. ஆனால் சூடோபெட்ரின் போதை பொருள் ஒரு கிலோவின் மதிப்பு 6000 ரூபாய் தான், 50கிலோவின் மதிப்பு குறைவுதான். ஆனால் தவறான தகவல் பரவி வருகிறது.மத்திய ஏஜென்சிகள் போதை பொருள் பறிமுதலை விட, தமிழக காவல்துறை பறிமுதல் செய்த எண்ணிக்கை அதிகம் என்று தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால், ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால், சென்னை மாநகர காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் ஆகியோர் கூட்டாக தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் சர்வதேச அளவில் மெத்தம்பேட்டமைன் என்ற போதை பொருளுக்கு மிகப்பெரிய அளவிலான டிமாண்ட் உள்ளதால் இவற்றை சூடோபெட்ரின் என்ற வேதிப்பொருட்களை பயன்படுத்தி தான் தயாரிக்கிறார்கள் அதனால் இந்த வேதிப்பொருளின் தேவையானது சர்வதேச சந்தையில் அதிகமாக இருந்ததையும் பயன்படுத்தி கொண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு கிலோ கணக்கில் 1.50 கோடி ரூபாய்க்கு இந்த வேதிப்பொருளை விற்று உள்ளனர்! அதே சமயத்தில் இந்த வேதிப்பொருள் நம் நாட்டின் மருந்து தயாரிப்பிற்கு சட்டபூர்வமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது ஆனால் இதனை பலர் கடத்தி போதைப்பொருள் தயாரிப்பதற்கு பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்துள்ளனர். இதை எல்லாம் சேகரித்தப்படி இருந்த, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் ஜாபர் சாதிக்கை இன்று கைதுசெய்திருக்கிறது.

ஜாபர் சாதிக் கைது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு இணை இயக்குநர் ஞானஸ்வர் சிங், “சர்வதேச போதைப் பொருள் கடத்தல்காரர் ஜாபர் சாதிக்கை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் இன்று கைதுசெய்தனர். இவரின் போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க் இந்தியா முழுவதும் மட்டுமல்லாது நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா வரை பரவியிருக்கிறது. கடந்த மாதம் டெல்லியில் பறிமுதல் செய்யப்பட்ட 50 கிலோ `சூடோபெட்ரின்’ போதைப்பொருள் வழக்கின் தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம், டெல்லி சிறப்பு போலீஸ் மற்றும் பிற ஏஜென்சிகளின் ஒத்துழைப்பால் டெல்லியில் இன்று ஜாபர் சாதிக்கை கைது செய்திருக்கிறோம். ஜாபர் சாதிக் பிப்ரவரி 15 முதல் தலைமறைவாக இருந்துவந்தார். கடந்த மாதம், இவரின் அவெண்டா (Aventa) நிறுவனத்தில் கைப்பற்றப்பட்ட சூடோபெட்ரின் போதைப்பொருளுக்கு ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் டிமாண்ட் அதிகம். உணவுப் பொருள் ஏற்றுமதி மூலம் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா ஆகிய நாடுகளுக்குப் போதைப் பொருள்களை இவர் கடத்தியிருக்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளில் தோராயமாக 3,500 கிலோவுக்கு மேற்பட்ட சூடோபெட்ரின் போதைப்பொருளை பல்வேறு நாடுகளுக்கு கடத்தியிருக்கிறார்.

போதைப்பொருள் கடத்தலுக்கான நிதி ஆதாரம் மற்றும் அதன்மூலம் கிடைத்தவை குறித்து தொடர் விசாரணை நடந்துவருகிறது. விரைவில் அந்த தகவல்கள் வெளியிடப்படும். குற்றம் முழுமையாக உறுதிசெய்யப்பட்டால் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை கிடைக்கும். இவரின் வாக்குமூலத்தின்படி, முழுப்பெயர் ஜாபர் சாதிக் அப்துல் ரகுமான். இந்த போதைப் பொருள் கடத்தலின் மூளையாக இவரே செயல்பட்டிருக்கிறார். சமீபத்தில் திருவனந்தபுரம், மும்பை, புனே, ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களுக்குப் பயணித்த இவர், ஒரு கிலோ சூடோபெட்ரின் கடத்த ஒரு லட்ச ரூபாய் என 45 பாக்கெட்டுகளைக் கடத்தியிருக்கிறார். இதுவரை மொத்தமாக 3,000 முதல் 3,500 கிலோ கடத்தல் செய்திருக்கிறார்.

இதன் மூலம் கிடைத்த அதிகளவிலான பணத்தை திரைப்படங்களில் முதலீடு செய்திருக்கிறார். இவரின் மங்கை திரைப்படம் முழுக்க முழுக்க போதைப் பொருள் கடத்தல் மூலம் வந்த பணத்தில் எடுக்கப்பட்டது. ரியல் எஸ்டேட் தொழிலிலும் இந்தப் பணத்தை முதலீடு செய்திருக்கிறார். மேலும், இந்தப் பணத்தைப் பயன்படுத்தி சென்னையில் 2019-ல் ஹோட்டல் ஒன்றைக் கட்டியிருக்கிறார். சினிமா தயாரிப்பில் இவருக்கு இருக்கும் தொடர்பு குறித்து விசாரிக்கப்பட்டுவருகிறது. மும்பையில் இவருடன் தொடர்பிலிருக்கும் தயாரிப்பாளர்களும் விசாரணை வளையத்தில் இருக்கின்றனர்.” என்றார்.

நிலவளம் ரெங்கராஜன்

Related Posts

error: Content is protected !!