’ஆர்யன்’ – விமர்சனம்

’ஆர்யன்’ – விமர்சனம்

சைக்கோ த்ரில்லர் பாணிப் படங்களுக்கெனத் தனி ரசிகர் கூட்டம் உண்டு. லாரி லாரியாக ரத்தங்களை கொண்டு வந்து சிகப்பு வண்ணக் கலவையைச் சிதற விடும் கொலைகளையும், அதை செய்யும்  குற்றவாளியைப் பிடிப்பதுடன், குற்றங்களை நிறுத்த முயல்வதும்தான் இதுவரை நாம் பார்த்த பாணி. ஆனால், இயக்குநர் பிரவீன்.கே இந்த விதிகளை எல்லாம் உடைத்து, முழுக்க முழுக்கப் புதியதொரு கோணத்தில் இந்தக் களத்தைக் கையாண்டிருக்கிறார். கொலைகாரனைப் பிடிப்பதை விட, அவர் செய்யப்போகும் கொலைகளைத் தடுப்பதில் தீவிரம் காட்டும் ஒரு சவாலான திரில்லர்தான் இந்த ‘ஆரியன்’ திரைப்படம்.

கதைச்சுருக்கம்: ஐந்தே நாட்களில் ஐந்து கொலைகள்! 

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் திடீரெனப் பார்வையாளர்கள் வரிசையில் இருந்து எழும் செல்வராகவன், துப்பாக்கி முனையில் அங்கிருக்கும் அனைவரையும் பிணைக் கைதிகளாக்கி அதிர்ச்சி அளிக்கிறார். இந்த நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பாக சேனலில் தெரிவதால் நாடு முழுவதும் வைரலாகி அனைவருமே சேனலை கவனிக்கிறார்கள்.  அப்போது அவர்களிடம் பேசும் செல்வராகவன் அடுத்த ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து ஒவ்வொரு கொலையாக செய்யப் போவதாக அடித்துச் சொல்கிறார். “அந்தக் கொலைகள் நடப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்புதான் சாகப் போகும் நபர் யார் என்பதை நான் சூசகமாக வெளியிடுவேன்” என்கிறார். தகவல் அறிந்து போலீஸ் சேனல் ஸ்டுடியோவை சுற்றி வளைக்கிறது. அதிரடிப் படையினர் ஓடி வந்து செல்வராகவனை பிடிப்பதற்கு எத்தனிக்கும்போது சொல்லுவராகவன் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொள்கிறார்.

இதை அடுத்து பிணைக் கைதிகளைப் பத்திரமாகக் காப்பாற்றிய பின், இந்த மிரட்டல் குறித்து விசாரிக்கும் காவல்துறை, தொடர் கொலைகளைத் தடுக்க விஷ்ணு விஷால் தலைமையில் ஒரு சிறப்புக் குழுவை அமைக்கிறது. அப்போது செல்வராகவன் சொன்னது போலவே ஒவ்வொரு நாளும் கொலைகள் நடக்க காவல்துறை என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளிக்கிறது.இறுதியில் செல்வராகவன் யார் என்பதைக் கண்டுபிடித்து எப்படி? கொலைகள் ஏன்,எப்படி நடந்தன?என்பதை கொஞ்சம் ஒவ்வாத காரணத்துடன் விளக்குவதுதான் த ‘ஆர்யன்’ என்ற படக் கதை.

திரைக்கதையின் பலம்: புத்திசாலித்தனமான கையாளுதல் 

இதுவரை வந்த சீரியல் கில்லர் படங்களில், கொலையாளியால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் அவனுக்குத் தீங்கு இழைத்தவர்களாகவோ அல்லது சமூகத்துக்குத் தீங்கிழைத்தவர்களாகவோ இருப்பார்கள். ஆனால், இந்த ஆரியன் படத்தின் மிகப்பெரிய ஹைலைட்டே, பலியானவர்கள் அனைவரும் அப்பாவிகள் மற்றும் நல்ல மனம் கொண்டவர்கள் என்பதுதான்! இதற்கான விடை கிளைமாக்ஸில் வெளிப்படும்போது, அது உண்மையிலேயே  புதிய கோணமாக இருந்தாலும்  ஒரு மாற்று கருத்தை உருவாகி விடுகிறது.

கொலையாளி யார் என்று தெரிந்த பின்னரும், அவர் செய்யப் போகும் கொலைகள் மற்றும் அதைத் தடுக்க முயலும் ஹீரோவின் பயணத்தை மட்டுமே இயக்குநர் படு சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார். லாஜிக் மீறாமல், செல்வராகவனின் ஒவ்வொரு செயலையும் புத்திசாலித்தனமாகச் சித்தரித்துக் காட்சிக்குக் காட்சி வியக்க வைக்கிறார் பிரவீன்.கே.

குறிப்பாக, கடைசிக் கொலையும் அதை முறியடிக்க விஷ்ணு விஷால் எடுக்கும் துணிச்சலான முயற்சிகளும் தரும் பரபரப்பு அல்டிமேட்!

நடிப்பு: அசத்திய விஷ்ணுவும் மிரட்டிய செல்வராகவனும் 

  • விஷ்ணு விஷால்: ஏற்கனவே ‘ராட்சசன்’ படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தாலும், இதில் முற்றிலும் மாறுபட்ட பரிமாணத்தைக் காட்டுகிறார். மிடுக்கான தோற்றத்துடனும், கம்பீரமான உடல் மொழியுடனும் வலம் வரும் அவர், ஒவ்வொரு காட்சியிலும் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மானாசாவுடனான காதல், விவாகரத்து போன்ற தனிப்பட்ட வாழ்க்கையின் பாதிப்பை அழுத்தமான நடிப்பால் அனாயசமாக ரசிகர்களிடத்தில் கடத்துகிறார். விஷ்ணு விஷாலுக்கு தயாரிப்பாளராக (VV Studioz) இது மேலும் ஒரு வெற்றிப் படமாக அமைந்துவிட்டது.
  • செல்வராகவன்: வில்லன் என்று ஆரம்பத்திலேயே தெரிந்தாலும், திரையில் அவர் தோன்றும் ஒவ்வொரு காட்சியும் மிரட்டலாக இருக்கிறது. சைக்கோ கொலையாளியாக அலட்டிக் கொள்ளாத அவரது நடிப்பு மற்றும் இயல்பான உடல் மொழி, அவர் செய்யும் கொடூரமான செயல்களையும் பார்வையாளர்களை நம்பச் செய்து பதற்றத்துடனேயே வைத்திருக்கிறது.
  • மற்ற நடிகர்கள்: தொலைக்காட்சி நிருபராக வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், விஷ்ணு விஷாலின் மனைவியாக வரும் மானசா சௌத்ரி, கருணாகரன், அவினாஷ் என அனைவரும் திரைக்கதை ஓட்டத்திற்குப் பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள். (குறிப்பாக, ஷ்ரத்தா ஸ்ரீநாத் நாயகியாக இருந்தும், விஷ்ணு விஷாலுடன் ஜோடியாக நடிக்காமல் இருந்தது ஒரு வித்தியாசமான சிந்தனை).

தொழில்நுட்பம்: பின்னணி இசையும் ஒளிப்பதிவும் 

  • இசை (ஜிப்ரான்): இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது பின்னணி இசை மூலம் கதாபாத்திரங்களின் உணர்வுகளைப் பார்வையாளர்களிடம் ஆழமாகக் கடத்துகிறார். படத்தின் விறுவிறுப்புக்கு இவருடைய இசை பெரும் பலம்.
  • ஒளிப்பதிவு (ஹரிஷ் கண்ணன்): பயப்படுவதையும் தாண்டிய ஒரு உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற சவாலைச் சாமர்த்தியமாகக் கையாண்டிருக்கும் ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணன், தனது கேமரா கோணங்கள் மற்றும் வண்ணங்களின் மூலம் பார்வையாளர்களைப் படத்துடன் ஒன்றிவிடச் செய்கிறார்.
  • சண்டை & எடிட்டிங்: படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷின் நேர்த்தியான படத்தொகுப்பு மற்றும் சண்டைப் பயிற்சி இயக்குநர்கள் ஸ்டண்ட் ஷில்வா, பி.சி ஸ்டண்ட் பிரபு ஆகியோரது சண்டைக் காட்சிகளும் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.

இயக்குநரின் சாதனை: வன்முறையற்ற சைக்கோ திரில்லர் 

பொதுவாகச் சைக்கோ திரில்லர் என்றாலே ரத்தமும், சதையும் நிறைந்த வன்முறைக் காட்சிகள் இருக்கும். ஆனால், இயக்குநர் பிரவீன்.கே அத்தகைய எந்த முயற்சியும் இன்றி, ஒவ்வொரு கொலையையும் அறிவியல் பூர்வமாக நிகழ்த்தி, காட்சிகளில் எந்த வன்மத்தையும் வெளிப்படுத்தாமல் ஒரு பெரிய சமூகப் பிரச்சினையைப் பின்னணியில் சொல்லியிருக்கிறார். இதனால், இந்தப் படம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கக்கூடிய ஒரு சைக்கோ திரில்லர் படமாக அமைந்திருக்கிறது.

ஆழமாக கதையை யோசித்தவர்கள் பப்ளிக் டிஸ்ப்ளேயில்  முன்னரே புரோக்ராம் செய்து எப்படி தோன்ற முடியும்?  டிவி சீரியல் ஓடிக் கொண்டிருக்கும் போது தனது வீடியோவை இணைத்து மக்களைப் பார்க்க வைக்க முடியும் என்பதற்கு எல்லாம் டெக்னிக்கல் டேர்ம்களை சொல்லி நழுவாமல், மக்களுக்குப் புரியும் வகையில் எளிமையாக சொல்லி இருக்கலாம்.

ஆனாலும் கொலைகளை வைத்து குற்றவாளியைப் பிடிக்கும் பாரம்பரியப் பாணியைத் துளியும் பின்பற்றாமல், முழுக்க முழுக்கப் புத்தம் புதிய கதை முயற்சியில் ஒரு சைக்கோ த்ரில்லர் படத்தைக் கொடுத்து வெற்றி கண்டிருக்கிறார் இயக்குநர் பிரவீன்.கே.

த்ரில்லர் பட விரும்பிகளை வியக்க வைக்கும் ஒரு படைப்பு இது.

மார்க்  3.75/5

error: Content is protected !!