ஆப்பிள் செய்திகள், தகவல்களுக்கு என்றே ஒரு செய்திமடல்!

ஆப்பிள் செய்திகள், தகவல்களுக்கு என்றே ஒரு செய்திமடல்!

நான் ஆப்பிள் பயனாளி இல்லை, ஆனால் ஆப்பிள் அபிமானி எனும் தலைப்பில் தனி குறிப்பு எழுத வேண்டும் என நினைத்துக்கொண்டிருக்கிறேன். இப்போதைக்கு, ஆப்பிள் தொடர்பான ஒரு இணையதளத்தை பார்க்கலாம். இது ஒரு சாதாரண இணைய செய்தி மடல் தளம் தான். – https://www.startupchime.com/subscribe/. ஆனால் இந்த செய்திமடல் சிறப்பு வாய்ந்தது. இந்த செய்திமடல் ஆப்பிள்மயமானது. அதாவது ஆப்பிள் நிறுவனம் தொடர்பான புதிய செய்திகளையும், தகவல்களையும், அறிமுகங்களையும் இன்னும் பிற சங்கதிகளையும் தொகுத்தளிக்கும் மடல். இந்த இடத்தில் தான் ஆப்பிள் போல ஒரு நிறுவனம் வேறில்லை என ஆப்பிள் புகழ் பாட வேண்டியிருக்கிறது. ( ஆப்பிள் மீது விமர்சனமும் இருக்கிறது என்பது வேறு விஷயம்). ஏனெனில் ஆப்பிள் தவிர வேறு எந்த தொழில்நுட்ப நிறுவனத்திற்கும் இத்தகைய செய்தி மடல் இருப்பதாக தெரியவில்லை.

இந்த செய்தி மடலில், இதழ்தோறும், ஆப்பிள் தொடர்பான செய்திகள், ஆப்பிளின் ஐபோன் உள்ளிட்ட சாதனங்கள் தொடர்பான பயன் குறிப்புகள், ஆப்பிள் சாதனங்களுக்கான சலுகைகள், ஆப்பிள் தொடர்பான விவாத சரடுகள், ஆப்பிள் செயலிகள் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெறுகின்றன. இவைத்தவிர, பயனாளிகளின் ஆப்பிள் கம்ப்யூட்டர் மேஜை அமைப்புகள் மற்றும் ஆப்பிள் மேற்கோள்களும் பகிரப்படுகின்றன. யோசித்துப்பாருங்கள், குறிப்பிட்ட துறை அல்லது தலைப்பு சார்ந்த செய்தி மடல் சேவைகள் ஈர்ப்புடையதாக அமையலாம். ஆனால் ஒற்றை நிறுவனத்திற்கு என செய்திமடல் நடத்தப்படுவது வியப்பாக அமைகிறது அல்லவா? இருப்பினும் இந்த மடல் ஆப்பிள் அபிமானிகளுக்கு ஈர்ப்புடையதாகவும், பயனுள்ளதாகவும் அமையலாம். ஆப்பிளின் தாக்கமும் செல்வாக்கும் அப்படி.

அமேசானுக்கோ, பேஸ்புக்கிற்கோ, ஏன் கூகுளுக்கு இப்படி ஒரு செய்திமடல் சேவை இல்லை. அப்படியே இருந்தாலும் அந்த செய்திமடல்கள் சுவாரஸ்யமானதாக இருக்கிறதா என்று தெரியாது. ஏனெனில் ஆப்பிள் பற்றி தினந்த்தோறும் பேசவும், தொடர்ந்து பின் தொடரவும் தகவல்களும், செய்திகளும் இருக்கின்றன. ஆப்பிளின் புதிய அறிமுகங்களை வதந்திகளாக தெரிந்து கொள்வதில் தனி ஆர்வம் இருக்கிறது என்பதோடு, ஆப்பிள் சாதனங்கள் குறை நிறை பற்றி தொடர்ந்து விவாதிக்கும் தேவையும் இருக்கிறது.

எனவே தான் ஆப்பிள் தொடர்பாக எண்ணற்ற துணை இணையதளங்கள் இருக்கின்றன. மேக்ரூமர்ஸ் ஒரு உதாரணம். மேக்செண்ட்லர் இன்னொரு உதாரணம். இந்த வரிசையில் இப்போது ஆப்பிள் செய்திகள், தகவல்களுக்கு என்று ஒரு செய்திமடல் வந்திருக்கிறது. இது போல வேறு ஒரு நிறுவன செய்திமடல் சேவை இருந்தால் தெரிவிக்கவும். அல்லது நீங்கள் இத்தகைய செய்திமடல் சேவையை எதிர்பார்க்கும் நிறுவனம் பற்றியும் குறிப்பிடவும்.

சைபர்சிம்மன்

error: Content is protected !!