போர் நிறுத்தமா? – வாய்ப்பே இல்லை – இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்

போர் நிறுத்தமா? – வாய்ப்பே இல்லை – இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்

“ஹமாஸ் உடன் நடந்து வரும் போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை’’ என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால் போர் தொடரும் என்பது உறுதியாகிவிட்டது.

மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும், கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி முதல் மோதல் நடக்கிறது. ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்க இஸ்ரேல் நடத்தி வரும் போர் 4 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து வருகிறது.இந்த தாக்குதலில் இதுவரை 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காசாவில் பலியாகி இருக்கின்றன. இவர்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமானோர் குழந்தைகள் மற்றும் சிறார் ஆவர். இந்த உக்கிர போரை முடிவுக்கு கொண்டு வருவதன் முதல் படியாக போர் இடை நிறுத்தத்துக்கு கத்தார், எகிப்து போன்ற நாடுகள் ஏற்பாடு செய்தன. அதன்படி பல கட்டங்களாக நடந்தேறிய முதல் சுற்று போர் இடை நிறுத்தத்தில் கணிசமான கைதிகள் பரஸ்பரம் விடுவிக்கப்பட்டனர்.

தற்போது அடுத்த சுற்று போர் நிறுத்தத்துக்கான ஏற்பாடுகளிலும் மத்தியஸ்த நாடுகள் இறங்கின. இதற்கு அமெரிக்காவும் அழுத்தம் கொடுத்தது. அதன்படி 135 நாட்களை உள்ளடக்கிய பல கட்டங்களாகப் பிரிந்த போர் இடை நிறுத்தத்துக்கு ஹமாஸ் முன்வந்தது. இருதரப்பில் கைதிகள் விடுவிப்பு, காசா மக்களுக்கான உதவிகளை ஒருங்கிணைப்பது, காசாவை புனரமைப்பது உள்ளிட்டவை போர் இடை நிறுத்தத்துக்கான ஹமாஸின் நிபந்தனைகளாக இடம் பெற்றிருந்தன.

ஆனால். இதனை ஏற்க இஸ்ரேல் மறுத்துவிட்டது. இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ கூறியதாவது: பாலஸ்தீனியர்களுக்கு தனிநாடு அந்தஸ்து தொடர்பான சர்வதேச ஆணைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது. பாலஸ்தீனத்தை ஒருதலைபட்சமாக அங்கீகரிப்பதை எனது தலைமையிலான இஸ்ரேல் அரசு தொடர்ந்து கடுமையாக எதிர்க்கும். ஹமாஸ் உடன் நடந்து வரும் போர் நிறுத்த பேச்சுவார்த்தை இல்லை. ஹமாஸ் அமைப்பினரின் கோரிக்கை ஏமாற்றும் வகையில் உள்ளது. அவர்களின் கோரிக்கைகளை ஏற்க முடியாது. இவ்வாறு இஸ்ரேல் பிரதமர் தெரிவித்து விட்டார்

error: Content is protected !!