தமிழ் குரல் / AI Voice
அரசு ஊழியர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்கள் மற்றும் குடும்பத்தினர் சொத்து விபரங்களை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் இதை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் செய்வதில்லை. தமிழகத்தில் வருவாய், நில நிர்வாகம், கலால், முத்திரைத்தாள், அரசு நலத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் துணை கலெக்டர்கள் அந்தஸ்தில் 576 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களிடம் சொத்து விபர பட்டியலை பெற அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.
வருவாய் நிர்வாக ஆணையர் ஸ்ரீதர் அனைத்து துறை தலைவர்கள், மாவட்ட கலெக்டர்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு பணியாளர்கள் ஒவ்வொருவரும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சொத்துக்கள் குறித்த விவர அறிக்கைகளை அரசுக்கு அளிக்க வேண்டும். ஒரு சில துணை கலெக்டர்கள் மட்டுமே தங்களது சொத்துடமை பட்டியலை அளித்துள்ளனர். 2005ம் ஆண்டுவரைக்கான பட்டியலை இன்னும் பலர் அளிக்கவில்லை. துணை கலெக்டர்கள் தங்களது சொத்துடமை பட்டியலை சமர்ப்பித்த பின்னரே அவர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வை வழங்க வேண்டும். இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விபர அறிக்கையை வரும் 16ம் தேதிக்குள் அரசுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
மேலும்சொத்து விவரத்தை பலமுறை கேட்டும் அதிகாரிகள் வழங்காததால், அதிரடி நடவடிக்கையாக ஊதிய உயர்வை நிறுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் துணை கலெக்டர்கள் சொத்து விவரத்தை தாக்கல் செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
