பணிந்தார் தாய்லாந்து பிரதமர் -கலைக்கப்பட்டது பாராளுமன்றம
தாய்லாந்து பெண் பிரதமர் யிங்லக் சின்வத்ரா பதவி விலக வேண்டும் என்று, கடந்த சில வாரங்களாக தலைநகர் பாங்காக்கில் எதிர்ப்பாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். முன்னாள் துணை பிரதமர் சுதேப் தலைமையில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டுள்ளனர். இதனால் நாடு முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்தநிலையில் பாராளுமன்றத்தை கலைத்த பிரதமர் யிங்லக் சின்வத்ரா, தேர்தல் நடத்தப்போவதாக அறிவித்தார்.தாய்லாந்து சட்டப்படி, பாராளுமன்றத்தை கலைத்தால் 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதிமுறை ஆகும். அதன்படி 500 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்ற கீழ்சபைக்கு 60 நாட்களுக்குள், அல்லது அடுத்த ஆண்டு பிப்ரவரி 2-ந்தேதிக்கு முன் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணைய உறுப்பினர் தெரிவித்தார். ஆனால் நாட்டை நிர்வகிக்க ’மக்கள் குழு’ ஒன்றை அமைக்க வேண்டும் என்று கூறியுள்ள சுதேப், இதை வலியுறுத்தி பேரணிகள் நடத்தப்போவதாகவும் கூறியுள்ளார்.


