நோட் இட் – நாட்டில் கள்ள நோட்டு புழக்கம் எக்கச்சக்கமாயிடுச்சு!

நோட் இட் – நாட்டில் கள்ள நோட்டு புழக்கம் எக்கச்சக்கமாயிடுச்சு!

எதிர்பார்த்தற்கு மாறாக பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகும் கள்ள ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளது என நிதிப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் புழங்கும் கறுப்புப்பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி உயர் மதிப்புடைய ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்ததுடன் புதிய ரூ.2000, 500, 200 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், பெரும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாயினர். தங்களது ரூபாயை மாற்றுவதற்கும், தங்களுக்குத் தேவையான பணத்தை எடுப்பதற்கும் வங்கிகள் முன்பு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிட்டது. அப்போது வரிசையில் காத்திருந்த அப்பாவி மக்கள் ஏராளமானோர் உயிரிழந்தனர். நாட்டின் பொருளாதாரம் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பி விடும் என்று சிலர் தெரிவித்திருந்தனர். ஆனாலும் இதுவரை நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை.

இதைத் தொடர்ந்து நாட்டில் பணப்புழக்கத்தின் அளவு, கள்ள ரூபாய் நோட்டுகளின் புழக்கம் உள்ளிட்டவை குறித்து நிதித் துறை புலனாய்வுப் பிரிவு ஆய்வு செய்தது. அப்போது நாட்டில் கள்ள ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளது எனவும் நிதிப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வு தொடர்பாக, அந்தப் பிரிவு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் ,” பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிந்தைய நிதியாண்டில், கள்ள ரூபாய் நோட்டுகளின் புழக்கமும், சந்தேகத்திற்குரிய பணப்பரிமாற்றங்களின் அளவு 2015-16 நிதியாண்டை விட, 2016-17 நிதியாண்டில் 480 சதவீதம் அதிகரித்துள்ளது என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முந்தைய நிதியாண்டில் (2015-16) ரூ.4 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பிடிபட்டன. ஆனால் 2016-17 நிதியாண்டில் ரூ.7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுக்கள் பிடிபட்டுள்ளன என்றும் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. ஏற்கனவே, பிரதமர் நரேந்திர மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வி என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், புலனாய்வு பிரிவின் இந்த அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts