சென்னை மெரினா கடற்கரை உள்பட பல இடங்களில் வைஃபை மண்டலங்களை முதல்வர் துவக்கி வைத்தார்

சென்னை மெரினா கடற்கரை உள்பட பல இடங்களில் வைஃபை மண்டலங்களை முதல்வர் துவக்கி வைத்தார்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 5–ந் தேதி அன்று தலைமைச் செயலகத்தில், தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை, கோயம்புத்தூர் – காந்திபுரம் பேருந்துநிலையம், சேலம் – மத்திய பேருந்து நிலையம், திருச்சிராப் பள்ளி – மத்திய பேருந்து நிலையம் மற்றும் மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அம்மா வை–பை மண்டலங்களை துவக்கி வைத்தார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 23.9.2016 அன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் உள்ள பெரிய பேருந்து நிலையங்கள், வணிகவளாகங்கள், பூங்காக்கள் போன்ற பொது இடங்களில், வை–பை என்னும் கம்பியில்லா இணைய வசதி கட்டணமில்லாமல் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நடைமுறைப்படுத்தும் வகையில், முதற்கட்டமாக பெரிய பேருந்து நிலையங்கள், பூங்காக்கள் போன்ற 50 இடங்களில் ‘அம்மா வை–பை மண்டலம்’ (Amma Wi-Fi Zone) ஏற்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார். அவரின் அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் வாயிலாக 8 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் 50 இடங்களில் அம்மா வைபை மண்டலங்கள் அமைக்க அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசால் 16.8.2017 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.

அதன்படி முதற்கட்டமாக, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை, கோயம்புத்தூர் – காந்திபுரம் பேருந்து நிலையம், சேலம் – மத்திய பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி – மத்திய பேருந்து நிலையம் மற்றும் மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அம்மா வைபை மண்டலங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

 

இந்தநிகழ்ச்சியில் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், தகவல் தொழில்நுட்பவியல் துறை செயலாளர் டாக்டர் பி. சந்தரமோகன், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜெ.குமரகுருபரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

அம்மா வை-பை’ வசதியை எப்படி பயன்படுத்துவது என்ற விவரம் இதோ:-

ஆண்டிராய்டு செல்போன் வைத்திருப்பவர்கள் உழைப்பாளர் சிலை பகுதியில் சென்றதும் அவர்களது செல்போன் ‘வை-ஃபை’ ஆன் செய்ததும் பல நெட்ஒர்க் சேவைகளை காட்டும். அதில் ‘அம்மா வை-ஃபை’ என்ற நெட் ஒர்க்கை இணைப்பில் எடுத்துக் கொண்டால் உள் நுழையும் பக்கம் காண்பிக்கும். அதை கிளிக் செய்து திறந்ததும் பதிவு செய்யும் பக்கம் வரும்.

அதில் செல்போன் எண் மற்றும் இ.மெயில் முகவரியை பதிவு செய்ததும் எஸ்.எம்.எஸ். மூலம் ஓ.டி.பி. எண் வரும். அந்த ஓ.டி.பி. எண்ணை பதிவு செய்ததும் ‘பை-பை’ இணைப்பு கிடைத்து விடும்.

அதன்பிறகு கூகுள், வாட்ஸ்-அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இங்கு ஒரு நாளைக்கு 20 நிமிடங்கள் மட்டுமே ‘வை-ஃபை’ இலவசமாக கிடைக்கும். 20 நிமிடம் முடிந்ததும் தானாகவே இணைய தள இணைப்பு துண்டிக்கப்பட்டு விடும்.

தொடர்ந்து கட்டணம் செலுத்தும் பக்கம் செல்போனில் தோன்றும். அதில் 1 மணி நேரம், 2 மணி நேரம் பேக்கேஜ் காண்பிக்கும். அதில் தேவையான பேக் கேஜ்ஜை தேர்வு செய்து கொள்ளலாம். அதற்கு ரூ.10, ரூ.20 என்ற விகிதத்தில் கட்டணம் வசூலிக்கப்படும்.

இதற்கான கட்டணத்தை நெட்பேங்கிங், டெபிட்கார்டு, கிரிடிட்கார்டு பயன்படுத்தி செலுத்தலாம்.

Related Posts