ஆப்ஸ்-களை பதிவிறக்கம் செய்யாமலேயே பயன்படுத்த உதவும் சேவை!

ஆப்ஸ்-களை பதிவிறக்கம் செய்யாமலேயே பயன்படுத்த உதவும் சேவை!

உள்ளங்கையில் உலகை கொண்டு வந்து விட்ட ஸ்மார்ட் போன்களின் பிரெய்னாக அல்லது மிகச் சிறந்த சேவகனாக இருக்கும் கூகிள் ப்ளே ஸ்டோரில் 3 மில்லியனுக்கும் மேற்பட்ட ஆப்ஸ்கள் குவிந்து கிடக்கின்றன. இதில் நமக்கு தேவையான சில ஆப்ஸ் மட்டுமே நாம் பயன்படுத்துவோம். அந்த வகையில் ஸ்மார்ட்போனில் நாம் டவுன்லோடு செய்திருக்கும் ஆப்ஸ்களில் பல பயனற்று ஸ்டோரேஸை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும். இதில் வாழ்க்கையின் ஓர் அங்கமாகிவிட்ட பேஸ்புக், மெசென்ஜர், வாட்ஸ்அப், யூடியூப், ஆகிவற்றை தவிர்த்தும் மக்களின் வாழ்க்கைத் தேவைக்கு ஏற்ப பல்வேறு வகையிலான ஆப்ஸ்கள் தினந்தோறும் வெளியாகின்றன. ஆனால், இந்த ஆப்ஸ்கள் அனைத்தையும் ஆண்ட்ராய்டு போன்களில் பதிவிறக்கம் செய்வது என்பது இயலாத காரியம்.

அதாவது இந்த ப்ளே ஸ்டோரில் வெளியாகும் ஆப்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உள்ளதே இதற்குக் காரணம். வழக்கமாக ஓர் ஆப்ஸை   டவுன்லோட் செய்த பின்புதான் அதனை இன்ஸ்டால் செய்து பயன்படுத்த முடியும். இதனால் ஸ்மார்ட் போன்களில் இடப்பற்றாக்குறை பிரச்னை ஏற்படுவதுடன், டேட்டா பயன்பாடும் வீணாகிறது. இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்ய உதவும் ப்ளே ஸ்டோரில் புதிய சேவையை வழங்கி உள்ளது.

ப்ளே ஸ்டோரில் தற்போது ”டிரை நவ்” என்ற புதிய வசதியை வழங்கி உள்ளது. இதன் மூலம் புதிய ஆப்ஸ்களை ஸ்மார்ட் போன்களில் பதிவிறக்கம் செய்யாமலேயே சோதனை முறையில் அதனைப் பயன்படுத்தலாம். முதல்கட்டமாக சில ஆப்ஸ்களுக்கு மட்டும் இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது. வரும் நாள்களில் அனைத்து ஆப்ஸ்களுக்கும் இந்த வசதி நீட்டிக்கப்படும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வசதியால் புதிய ஆப்ஸ்களின் பயன்பாடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் ஸ்மார்ட் போன் கேம் பிரியர்களுக்கும், கூகுள் புதிய வசதிகளை அளித்துள்ளது. அதன்படி, ப்ளே ஸ்டோரில் வரும் விளையாட்டு ஆப்ஸ் தொடர்பான சிறிய அளவு காணொலியை, பயன்பாட்டாளர்கள் பயன்படுத்துவதற்கு முன்பே காணலாம். அந்தக் காணொலியின் ஸ்கிரீன் ஷாட்ஸ்களையும் பயன்பாட்டாளர்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.