சர்ச்சையைக் கிளப்பிய டவ் சோப் விளம்பரம் நீக்கம்!
நம் நாட்டில் என்றில்லாமல உலகமெங்கும் பல்வேறு விளம்பரங்கள் சர்ச்சையை கிளப்புவது வாடிக்கைதான். அந்த வகையில் இனவெறியைத் தூண்டியதாக பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து சர்ச்சைக்குரிய சோப் விளம்பரத்தை நீக்கி விட்டது டவ் நிறுவனம்.

சருமத்தை அழகாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ள அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று தான் சோப்பு. அத்தகைய சோப்பை வாங்கும் போது, பலரும் நினைப்பது பட்ஜெட்டிற்கு ஏற்றவாறும், நல்ல நறும ணத்துடனும், சருமத்திற்கு எவ்வித பிரச்சனையையும் ஏற்படுத்தாதவாறு இருக்க வேண்டும் என்பது தான். அப்படி நாம் நினைத்தவாறு இருக்கும் ஒரு குளியல் சோப்பு தான் டவ். சமீபத்தில் இந்த டவ் சோப்பு சிறந்தது என்பதை வெளிக்காட்டும் நிறைய விளம்பரங்கள் உள்ளன. அவற்றைப் பார்த்தால் நீங்களே இனிமேல் டவ் சோப்பிற்கு மாறிவிடுவீர்கள். ஆனால் அதன் நோக்கில் டவ் நிறுவனம் வெளியிட்ட ஒரு விளம்பரத்தில் கறுப்பினப் பெண் தன்னுடைய சட்டையைக் கழட்டிய பிறகு வெள்ளை நிறப் பெண்ணாக தோன்றும் காட்சி வெளியானது. இந்த விளம்பரம் இனவெறியைத் தூண்டுவதாக சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இணையப் பயனாளிகள், கறுப்பினப் பெண் வெள்ளை நிறப் பெண்ணாக மாறும் டவ் சோப் விளம்பரத்தில் இனவெறித் தாக்கங்கள் உள்ளன என்று கூறியுள்ளனர். மேலும் கறுப்புத் தோல் அழுக்கு என்றும் வெள்ளைத் தோலே தூய்மையானது என்றுமே விளம்பரம் சொல்ல முற்படுகிறது என்று கருத்து தெரிவித்தனர். இதையடுத்து டவ் நிறுவனத்தில் சர்ச்சைக்குரிய அந்தப் பதிவு நீக்கப்பட்டது. எனினும் அதன் ஸ்க்ரீன்ஷாட்டுகள் இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகின்றன. அதில் சிலவற்றில் கறுப்பினப் பெண்ணே வெள்ளை நிறப் பெண்ணாக மாறியதற்கான படங்கள் காணப்படுகின்றன.
இதுகுறித்துக் கடும் கண்டனம் தெரிவித்த அட்லாண்டா பல்கலைக்கழக பேராசிரியர் அபிகைல் சிவெல், ”டவ் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் குழு அடிப்படையில் இனவெறி கொண்ட குழு. சுத்தமான உடல் என்பது வெள்ளை நிற உடலல்ல. அதேபோல கறுப்பு நிற உடல்களும் அழுக்கானவை இல்லை. இத்தனை நாட்களாக எப்போதும் டவ் தயாரிப்புகளையே பயன்படுத்தி வந்தேன். இப்போது மாற்றத்துக்கான நேரம்” என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்ட டவ் நிறுவனம், ”உண்மையான அழகின் பன்முகத் தன்மையை பிரதிநிதித்துவப்படுத்தாமல் விட்டுவிட்டோம். விளம்பரத்தில் நடித்த பெண்களின் நிறம் குறித்தும் கூறவில்லை. எனினும் இது நடந்திருக்கக் கூடாது. நடந்த சம்பவத்துக்காக உண்மையாகவும், வருத்தத்துடனும் மன்னிப்பு கேட்கிறோம்” என்று கூறியுள்ளது.
சர்ச்சைக்குரிய இனவெறி விளம்பரத்தில் டவ் சிக்குவது இது முதல்முறையல்ல. முன்னதாக 2011-ல் டவ் பயன்படுத்துவதற்கு ‘முன்னதாக’ (Before), ‘பின்னதாக’ (After) முறையே கறுப்பின மற்றும் வெள்ளையினப் பெண்கள் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


