32°C
விளம்பரம்
Advertisement

உ.பி. ; மருத்துவமனையில் 5 நாட்களில் 63 குழந்தைகள் பலி!

admin சேலம் Published: August 12, 2017 3 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




பா.ஜ.க. ஆட்சி செய்யும்   உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரிலுள்ள பிஆர்டி மருத்துவ மனையில் ஐந்து நாட்களில் 63 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இதில், கடந்த இரு நாட்களில் மட்டும் 33 குழந்தைகள் இறந்துள்ளன. குழந்தைகள் இறப்புக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணம் என விசாரணை குழு தெரிவித்துள்ள நிலையில், இதற்கு மூளையில் வீக்கத்தை ஏற்படுத்தும் என்சிபாலிட்டிஸ் நோய்தான் காரணம் என அம்மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரசவித்த குழந்தைகள், மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு வார்டு இயங்கி வருகிறது. இந்நிலையில் இங்கு கடந்த 2 நாட்களில் சுமார் 33 குழந்தைகள் உயரிழந்துள்ளன. கடந்த 5 நாட்களில் மொத்தம் 63 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இது குறித்து மாவட்ட நீதிபதி தலைமையில் நடத்தப்பட்ட விசாரணையில் ஆக்சிஜன் குறைபாடு காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையை நீக்கி குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்காததே குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமாக கூறப்படுகிறது.

ஆனால் மருத்துவமனை நிர்வாகமோ இதனை மறுத்து மூளையில் வீக்கத்தை ஏற்படுத்தும் என்சிபாலிடிஸ் நோய்தான் குழந்தைகள் இறப்புக்கு காரணம் என தெரிவித்துள்ளது. இதனிடையே இந்த சம்பவம் குறித்து கோராக்பூர் மாவட்ட மாஜிஸ்திரேட் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அவர் தனது விசாரணைக்கு முடிவில், ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை செய்யும் தனியார் நிறுவனத்திற்கு மருத்துவமனை நிர்வாகம் நிலுவை தொகை வழங்கவில்லை பண பாக்கி காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது என்றார்.

வினியோகஸ்தருக்கு ரூ.66 லட்சம் பாக்கியை அரசு செலுத்தாததால், ஆக்ஸிஜன் சப்ளை பாதிக்க ப்பட்டதாகவும் அதனால் இந்த விபரீதங்கள் நடந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இரு நாட்கள் முன்புதான் இந்த மருத்துவமனையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆய்வு நடத்தியிருந்தார். ஆனால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை குறித்து அவரது கவனத்திற்கு எப்படி வராமல் போனது என்ற கேள்வி எழுந்துள்ளது. கோரக்பூர் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த மாவட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஆர்டி மருத்துவமனை இதுபோன்ற மோசமான நிர்வாகத்திற்கு பெயர் பெற்றது. கடந்த வருடம், ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் மூளையில் வீக்கத்தை ஏற்படுத்தும் என்சிபாலிடிஸ் நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டு இந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 920 குழந்தைகளில் 224 குழந்தைகள் பலியானது குறிப்பிடத்தக்கது. குழந்தைகள் தொடர் இறப்பினால் அதிர்ச்சியடைந்துள்ள அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உயரதிகாரிகளின் அவசர ஆலோசனைக் கூட்டத்தை கூட்டி ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

இதற்கிடையில் சம்பவம் நடந்த மருத்துவமனைக்கு மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் தலைமையிலான காங்கிரஸ் கட்சியினரும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.பி.என்.சிங்கும் சென்றுள்ளனர். ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தின் காரணமாகவே குழந்தைகள் பலியானதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

கோரக்பூர் மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் உள்பட 60 குழந்தைகள் பலியான சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என மாநில சுகாதார அமைச்சர் சித்தார்த்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். எதிர்க்கட்சியினர் உண்மை என்னவென்று வெளியாவதற்கு முன்னதாகவே அவசர கதியில் ஆளும் கட்சி மீது குற்றம் சுமத்தி அறிக்கைகளை வெளியிடுவதாக துணை முதல்வர் கேசப் பிரசாத் மவுரியா கண்டனம் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் இறந்த சம்பவத்தால் மருத்துவமனைக்கு பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரும் பல்வேறு அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் தொடர்ந்து வந்துசெல்வதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்