ரேஷன் பொருட்கள் யாருக்கு கிடைக்கும்? யாருக்கு இனி இல்லை?!
மத்திய அரசின் தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தமிழகம் இணைந்துள்ளதால் யாருக்கெல்லாம் ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என்பது குறித்து தமிழக அரசு பட்டியலை வெளியிட்டுள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தில் தமிழகம் இணைந்துவிட்டது என்பதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டது. இந்த திட்டத்தின் கீழ் யாருக்கு யாருக்கு ரேஷன் பொருள்கள் கிடைக்கும் என்கிற விதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

விதிகள் விவரம்:
அந்தியோஜனா அன்னயோஜனா திட்டம், அன்னபூர்ணா ஆகிய திட்டங்களின் கீழ் உள்ள பயனாளிகளுக்கு ரேஷன் பொருள்கள் வழங்கப்படும்.
வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கும், மாற்றுத் திறனாளியை குடும்பத் தலைவராக கொண்டவர்களுக்கும் ரேஷன் பொருள்கள் வழங்கப்படும்.
குடிசைவாசிகள், குப்பை சேகரிப்பாளர்கள், வீடில்லாதவர்கள் ஆகியோரும் ரேஷன் பொருள்கள் வாங்க தகுதியானவர்களாவர்.
விவசாய தொழிலாளர்களும் ரேஷன் பொருள்களை பெறலாம்.
இதனிடையே பொதுவிநியோக திட்டத்தில் எந்த மாற்றமும் கிடையாது என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியார்களிடம் பேசிய போது, “பொதுவிநியோக திட்டத்தில் மாற்றம் என வதந்தி பரவுகிறது. குடும்ப அட்டைகளை நீக்குவதற்கான அடிப்படை விதிகள் தமிழகத்திற்கு பொருந்தாது. உணவு பாதுகாப்பு தொடர்பான மத்திய அரசின் விதிகள், தமிழகத்திற்கு பொருந்தாது. பொதுவிநியோக திட்டத்தில் எந்த மாற்றமும் கிடையாது, வழக்கம்போல் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படும்.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தில் சில நிபந்தனைகளுடன் தான் தமிழகம் இணைந்தது. மாநில நிதியில் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு தடை விதிக்கக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் கொண்ட குடும்பங்களும் ரேஷன் பொருட்களை பெறத் தகுதியில்லை” என்றார்.
முன்னதாக மத்திய அரசின் விதிமுறகள் தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதன்படி யார் யாரெல்லாம் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாது என்ற விபரம் இதோ:
குடும்பத்தில் வருமான வரி செலுத்துபவர் ஒருவர் இருந்தாலும் அவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடையாது. தொழில் வரி செலுத்தும் குடும்பங்களுக்கும் இது பொருந்தும்.
ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் பெரிய விவசாயிகளாக வகைப்படுத்தப்பட்டு ரேஷன் பொருட்கள் பெறுவதில் இருந்து நீக்கப்படுவார்கள்.
மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்றவர்களும் விலக்கப்படுவார்கள்.
சொந்தப் பயனுக்கு கார் வைத்திருப்பவர்கள், ஏசி பொருத்தியிருப்பவர்களுக்கும் ரேஷன் பொருட்கள் கிடையாது. சிமென்ட் கட்டடத்தில் 3 அறைகளுக்கு மேல் கொண்ட சொந்த வீடு வைத்திருப்போரும், சொந்த நிறுவனம் நடத்துவோரும் ரேஷன் பொருட்களை பெற இயலாது.


