மைக்ரோசாப்ட் வழங்கி வந்த பெயிண்ட் ஆப்-ஸூக்கு ஆப்பு இல்லை!
கடந்த 32 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருக்கும் பெயிண்ட் செயலிக்கு மூடுவிழா நடத்த மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.இதை எதிர்த்தும் தங்கள் அனுதாபங்களை தெரிவித்தும் ட்விட்டர் வாசிகள் தங்கள் கருத்து களைப் பதிவிட்டு வருகின்றனர். 1985ம் ஆண்டு “பெயிண்ட் பிரஷ்”என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட பெயிண்ட் செயலி படங்கள் வரைவதற்கும், புகைப்படங்களை எடிட் செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது. பிறகு பல்வேறு மாற்றங்களையும், அப்டேட்களையும் கடந்து “பெயிண்ட்” இன்றுவரை அணைத்துத் தரப்பு மக்களாலும் அதிகம் நேசிக்கபடும் கம்ப்யூட்டர் அப்ளிக்கேஷனாகப் “பெயிண்ட்” திகழ்கிறது.சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்டோஸ் 10 இயங்குதளத்தின் கிரியேட்டர்ஸ் அப்டேட்டில் பெயிண்ட் கிராபிக்ஸ் செயலி இடம்பெறவில்லை. இது பெயிண்ட் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

இந்த முடிவுக்கு வந்த எதிர்ப்பு அலைகளையும், வாடிக்கையாளர்கள் தங்களது வருத்தத்தையும் கவனித்து வந்த நிலையில் பெயின்ட் செயலி விண்டோஸ் ஸ்டோரில் தொடர்ந்து இலவசமாக வழங்கப்படும் என மைக்ரோசாப்ட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘எம்.எஸ். பெயின்ட் பிரியர்கள் மகிழ்ச்சி கொள்ளுங்கள்: உண்மையான ஆர்ட் செயலி எங்கும் செல்லவில்லை – விண்டோஸ் ஸ்டோரில் தொடர்ந்து இலவசமாக கிடைக்கும்.’ என மைக்ரோசாப்ட் வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இதனிடையே ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட விண்டோஸ் 10 கிரியேட்டர்ஸ் அப்டேட் உடன் பெயின்ட் 3D செயலி வெளியிடப்பட்டது. இந்த செயலியும் தொடர்ந்து விண்டோஸ் ஸ்டோரில் இலவசமாக கிடைக்கும், இதற்கு தொடர்ச்சியான அப்டேட்கள் வழங்கப்படும்.புதிய 3D அம்சங்களோடு மட்டுமில்லாமல், பெரும்பாலான எம்.எஸ். பெயின்ட் அம்சங்களும் புதிய செயலியில் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் விரைவில் எதிர்பார்க்கப்படும் மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 கிரியேட்டர்ஸ் அப்டேட்டில் 1985-ம் ஆண்டில் வெளியான எம்.எஸ். பெயின்ட் செயலி இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டது.
இந்த பிரபலமான பெயின்ட் செயலி இமேஜ் எடிட்டிங் செய்ய அதிகம் ஒத்துழைக்காது என்றாலும் இந்த செயலி கொண்டு எளிமையான கட் மற்றும் பேஸ்ட் உள்ளிட்டவற்றை செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


