தமிழகம், புதுவையில் ஞாயிறு பெட்ரோல் பங்குகளுக்கு லீவு!
இந்திய பெட்ரோல் கூட்டமைப்பின் அழைப்பை ஏற்று, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள சுமார் 4,850 பெட்ரோல் நிலையங்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் இனி இயங்காது என விற்பனையாளர்கள் அறிவித்துள்ளனர்.மத்திய அரசு கேட்டுக்கொண்டதனால் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பெட்ரோல் நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அதாவது ‘ இனி வரும் மே 14 ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஞாயிற்று கிழமை பெட்ரோல் பங்குகள் , டீசல் விற்பனை நிலையங்கள் இயங்காது என பெட்ரோல் பொருள் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, சனிக்கிழமை இரவு 12 மணி முதல் ஞாயிறு இரவு 12 மணி வரை 24 மணி நேரம் பெட்ரோல் நிலையங்கள் இனி இயங்காது.
இது தொடர்பாக பெட்ரோல் பொருள் விற்பனையாளர்கள் சங்க தலைவர் முரளி , ‘தமிழகத்தில் உள்ள 4,850 பெட்ரோல் விற்பனை நிலையங்கள், மே 14-ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்காது . இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 300 விற்பனை நிலையங்கள் வழக்கம்போல் இயங்கும். அதே சமயம் தனியார் எண்ணெய் நிறுவனங்களின் விற்பனை நிலையங்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என்று தெரிவித்துள்ளார்.மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் எரிபொருள் சேமிப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிதுள்ளார்.


