நிஜ ஜட்ஜய்யா வி.ஆர். கிருஷ்ணய்யர்
வழக்குரைஞர், கைதி, சட்டமன்ற உறுப்பினர், மாநில அமைச்சர், ஐகோர்ட் ஜட்ஜ், சுப்ரீம் கோர்ட் நீதிபதி, மனித உரிமைச் செயல்பாட்டாளர் எனப் பல வடிவங்களைக் கடந்துவந்தவர். இந்தப் பயணம் நெடுகிலும் ஏழை மக்களுக்கான சமூக நீதி மீதான கரிசனத்தினை வெளிப்படுத்தினார்.

குறிப்பாக சுப்ரீம் கோர்ட்டில் அவர் பணிபுரிந்த குறுகிய காலமான 7 ஆண்டுகளில் அவர் வழங்கிய 745 தீர்ப்புகள் தனித்துவம் வாய்ந்தவை. வெறும் சட்டரீதியாக ஒரு வழக்கை அணுகுவதற்கு மாறாக அதன் பின்னணியில் உள்ள சமூக, அரசியல் பிரச்சினைகளை அவர் தனது தீர்ப்புகளில் விரிவாக எடுத்துரைத்தார்.
கணிப்பொறி, இணையதளத் தொடர்புகள் இல்லாத பணிச்சூழலில் ஒவ்வொரு தீர்ப்பிலும் உலக அறிஞர்களின், வெளிநாட்டு வழக்கு தீர்ப்புகளின் மேற்கோள்கள் உள்ளிட்ட பல அரிய தகவல்களை ஆதாரத்துடன் குறிப்பிட்டு எழுதி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். அதைப் படிப்பவர்களுக்கு அது கலைக்களஞ்சியமாகவே தோன்றும்.
இன்று நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் பொதுநல வழக்கு என்ற முறைக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் கிருஷ்ணய்யர். ஒரு நபரைக் கைது செய்யும்போது அச்சுறுத்தல், பாதுகாப்பின்மை போன்ற காரணங்கள் எதுவுமில்லாத நிலையிலும் அவரது கையில் விலங்கிட்டு அழைத்து செல்வது மனித மாண்பிற்கு எதிரானது என்று கூறி அதற்கு எதிராக தீர்ப்பு வழங்கியவரிர்.
1975-ல் அப்போதையை பிரதமர் இந்திரா காந்தியின் ரேபரேலி தேர்தல் வழக்கில் இவர் அளித்த அதிரடியான தீர்ப்பே, பின்னர் இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட காரணமாக இருந்தது.
சுப்ரீம் கோர்ட்டுக்கு சாமானிய மக்கள் தங்களுக்கு இழைக்கப்படும் மனிதஉரிமை மீறல்கள், துன்பங்கள், கொடுமைகள் பற்றிய சாதாரண போஸ்டில் கடிதங்களை அனுப்பி வைத்தால், அது கூட வழக்குகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. கடித வழி நீதி நல்கும் முறையை தீவிரமாக அமல்படுத்தினார்.
மரண தண்டனையை முற்றிலுமாக எதிர்த்த வி.ஆர். கிருஷ்ணய்யர், அதை தண்டனை வடிவமாக ஏற்க முடியாது என்பதில் உறுதியாக நின்றார்.
மேலும் இலவச சட்ட உதவி முறை நடைமுறைப்படுத்தப்பட அவர் பெரிதும் பங்களித்தார்.
வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களுக்கு சட்ட நிவாரணம் கிடைக்க ஆர்வங்காட்டினார். அதிரடிப்படையின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு அவரது நடவடிக்கைகள் உதவின.
1980-ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வு பெற்று, நூறாவது வயதில் இதே டிசம்பர் 4-ம் தேதி (2014) மறையும் வரை தொடர்ந்து 35 ஆண்டுளாக ஓய்வின்றி மக்கள் நலப்பணிகளிலேயே ஈடுபட்டு வாழ்ந்தவர் கிருஷ்ணய்யர். வி.ஆர். கிருஷ்ணய்யரின் சேவையைப் பாராட்டி 1999-ஆம் ஆண்டு அவருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. கேரளா, கொச்சின் மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகங்களில் கவுரவ பேராசிரியராக பணியாற்றினார்.
105 புத்தகங்களை எழுதியுள்ளார். இந்தியாவில் எழுந்த பல்வேறு பிரச்சினைகள் குறித்து தனது ஆக்கப் பூர்வமானதும், மனிதநேயமிக்கதுமான கருத்தை அச்சமின்றி பல முறை வெளிப்படையாகத் தெரிவித்தவர்.
நீதி என்பது ஆதிக்கப் பகுதியைச் சார்ந்த மக்களுக்குதான் என்பதை மாற்றி, சாதாரண மக்களுக்கும் நீதி கிடைக்கும் என்பதை நிரூபித்துக் காட்டியவர். அடித்தள மக்களுக்கு அவர் வழங்கிய பல தீர்ப்புகள் பின்னர் சட்டமாக இயற்றப்பட்டன. தனது வாழ்நாள் முழுவதையும் மனித உரிமைகள் பாதுகாப்பு, மது புகையிலை ஒழிப்பு, ஏழை, எளிய மக்களுக்காக குரல் கொடுப்பது போன்ற பணிகளுக்காக வீட்டின் கதவை திறந்தே வைத்திருந்தார் இந்த ரியல் ஜட்ஜய்யா என்பது குறிப்பிடத்தக்கது.


