இந்த வருஷம் வடகிழக்கு பருவமழைக்கு என்னாச்சு?நம்ம ரமணன் பேட்டி!
தமிழகத்தில் டிச.2ஆம் தேதிக்குப் பிறகு மழை வரக்கூடும் அல்லது வராமலும் போகலாம் என சென்னை வானிலை மைய முன்னாள் இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.

ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நீடிக்கும். ஆனால், இந்த ஆண்டு போதிய அளவும் மழை பெய்யவில்லை. இதனால், பயிரிடப்பட்ட பயிர்கள் கருகி வருவதையடுத்து விவசாயிகள் கடும் வருத்தத்தில் உள்ளனர். பருவமழை பொய்த்ததாலும், காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடாததாலும் டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர் கருகி வருவதைக் கண்டு அதிர்ச்சியாகி பத்துக்கும் மேற்பட்ட டெல்டா விவசாயிகள் இறந்துள்ளனர். போன அண்டு கொடோ கொடென்று கொடிய மழை இந்தாண்டு கொஞ்சம் கூட பெய்யாததால் சென்னையிலும் மே மாதம் வரும் முன்னரே தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அத்துடன் கடந்த ஆண்டை விட, இந்தாண்டு வடகிழக்கு பருவமழை 69 சதவிகிதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இதனிடையே சிதம்பரத்தில் வியாழக்கிழமை முன்னாள் வானிலை இயக்குநர் ரமணனை செய்தியாளர்கள் சந்தித்து மழை விபரம் குறித்து கேட்ட போது, “தற்போது மழை வருவதற்கான நிகழ்வு ஏதும் ஏற்படவில்லை. வந்த ஒரு நிகழ்வும் வடக்கு நோக்கி சென்றுவிட்டது. சமீபத்தில் ஏற்பட்ட நிகழ்வுகள் இலங்கைக்கு தெற்கே சென்று விட்டதால் நமக்கு மழை பெய்யவில்லை. கணினி சார்ந்த கணிப்புகளை வைத்து பார்க்கும்போது அடுத்த ஒரு வார காலத்துக்கு பெரும் மழை பெய்வதற்கு வாய்ப்பில்லை. டிசம்பர் 2ஆம் தேதிக்கு பிறகு மழை வரக்கூடும்.
நாகை, ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் 10 செ.மீ. வரையிலும் மற்ற உள் மாவட்டங்களில் 2 செ.மீ. வரையிலும் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் சராசரியாக 44 செ.மீ. மழை பெய்ய வேண்டும். தற்போது 9 செ.மீ. வரைதான் மழை பெய்துள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டில் 33 விழுக்காட்டுக்கு குறைவாக மழை பெய்துள்ளது. தற்போது அதைவிட மோசமான நிலையில் உள்ளது.மன்னார் வளைகுடாவில் நிகழ்வு ஏற்பட்டால் மட்டுமே தமிழகம் முழுவதிலும் மழை பெய்யும். தற்போது வானம் தெளிந்து இருப்பதால் வெப்பம் குறைந்து குளிர் நிலவி வருகிறது”என்று தெரிவித்தார்.


