அதானி பிராஜெட்டுலே ஊழல்.. உண்மைதானோ! – கருணாநிதி கேட்கிறார்

அதானி பிராஜெட்டுலே ஊழல்..  உண்மைதானோ! – கருணாநிதி கேட்கிறார்

திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “அதானி” குழுமத்தின் சார்பில் ஜெயலலிதாவின் உருவப் படத்தோடு அரைப் பக்க விளம்பரம் ஒன்று நேற்றைய நாளேடுகளில் வெளிவந்துள்ளது. அதில் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா, கமுதியில் அமைந்துள்ள அதானி குழுமத்தின் 648 மெகாவாட் சூரிய மின் சக்தி ஆலையை தமிழக மக்களுக்காக 21-9-2016 காலை 11 மணிக்கு தேசத்துக்கு அர்ப்பணிக்க உள்ளார்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஒருவேளை முதலமைச்சர் இந்த விழாவிற்காகக் கமுதி செல்கிறாரோ என்று அந்த விளம்பரத்தைப் படித்தவர்கள் சந்தேகப்பட்டாலும், இன்று வெளி வந்த ஏடுகளில் அந்தத் தொழிற் சாலையை சென்னையில் இருந்தவாறே தொடங்கி வைத்தார் என்று கூறப்பட்டுள்ளது.

adhani sep 22

இந்த நிகழ்ச்சி குறித்து மாநில அரசிடமிருந்து ராமனாதபுரம் மாவட்ட அதிகாரிகளுக்கோ, பத்திரிகையாளர்களுக்கோ எந்தவிதமான தகவலும் அனுப்பப்படவில்லை என்றும், பத்திரிகையாளர்கள் நேரடியாக சூரிய ஒளி மின் நிலையத்தைப் பார்க்க முயற்சி செய்த போது, அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்றும் செய்தி வந்துள்ளது.

இந்தச் செய்தியைப் படித்தவுடன், அந்தத் தொழிற்சாலை பற்றி 15-9-2016 அன்று “டெக்கான் கிரானிகல்” ஆங்கில நாளேட்டில் வந்த ஒரு செய்தி என் நினைவுக்கு வந்தது. அதன் தலைப்பு, “Solar Power purchase from Adani under Scanner” என்பதாகும். அந்தச் செய்தியில், “The State Government’s move to purchase Solar Power from Adani Group of Companies will come under the scrutiny at the Appellate Tribunal for Electricity, New Delhi, as the Tribunal dismissed applications filed by the mega power firm challenging an appeal filed by an NGO against the Purchase Order” என்று ஆரம்பித்து பல விவரங்களைத் தெரிவித்துள்ளது.

மின்சாரம் வாங்குவது பற்றி கடந்த மாதம் கூட 5-8-2016 அன்றும் 28-8-2016 அன்றும் நான் விரிவாகத் தெரிவித்து, அதற்கு என்ன பதில் என்று இந்த ஆட்சியினரிடம் விளக்கம் கேட்டிருந்தேன். இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. தற்போது “டெக்கான் கிரானிகல்” வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு மின்சார வாரியம் 4-1-2015 அன்று 31 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது என்றும்; குறைந்த பட்சம் 23 நிறுவனங்களிடமிருந்து, ஒரு யூனிட் மின்சாரம் 7.01 ரூபாய் விலைக்கு 25 ஆண்டுகளுக்கு மொத்தம் 34,448 கோடி ரூபாய்க்கு மின்சாரம் வாங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கு தொடுத்துள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனம், தமிழ்நாடு மின்சார வாரியம் இந்த ஒப்பந்தங்களின் மூலம் முடிவு செய்துள்ள சூரிய ஒளிமின்சாரத்தின் விலை; அந்த மின்சாரம் சந்தையில் என்ன விலைக்கு வாங்கப்படுகிறதோ, அதை விட மிகவும் அதிகம் என்று அவரது மனுவிலே தெரிவித்திருக்கிறார். இவ்வாறு வாங்கப்படும் மின்சாரத்தின் அதிக விலையை நுகர்வோருக்கு அதிக கட்டணம் நிர்ணயித்து அதன் மூலம் வசூல் செய்திடத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்வாரியம் ஏற்கனவே மிகப் பெரிய நட்டத்தை அதாவது 70 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பைச் சுமந்து கொண்டுள்ளது. மத்திய முன்னாள் அமைச்சர் கே. ராமமூர்த்தி அவர்களின் மகன் ராமசுகந்தன், இவ்வாறு மின்சாரம் வாங்குவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஆணையை எதிர்த்து வழக்கு தொடுத்துள்ளார். மனு கொடுத்தவர், பாதிக்கப்பட்டவர் அல்ல என்ற காரணத்தைக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமென்று அதானி குழுமம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதற்கு ராமசுகந்தன் மேல் முறையீடும் செய்துள்ளார். அதில் அவர், மத்தியப் பிரதேசத்திலும், ஆந்திராவிலும் சூரிய ஒளி மின்சாரம் யூனிட் ஒன்றுக்கு ஐந்து ரூபாய்க்கும் குறைவு என்றும், யூனிட் விலையைக் குறைக்காமல், 7.01 ரூபாய் என்றே வைத்துக் கொண்டு கால வரம்பை 31-3-2016 வரை நீட்டித்தது தவறு என்றும் சுட்டிக்காட்டியுள்ளது கவனிக்கத்தக்கது.

இதைத்தான் நான் 5-8-2016 அன்று என்னுடைய அறிக்கையில், “4-7-2015 அன்று தமிழக அரசு அதானி குழுமத்துடன் 4536 கோடி ரூபாய்ச் செலவில், ஒரு யூனிட் ரூபாய் 7.01 என்ற விகிதத்தில், 25 ஆண்டுகளுக்கு மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திட்டதைச் சுட்டிக் காட்டியிருந்தேன். இந்த ஒப்பந்தம் முடிந்த இரண்டே வாரங்களில், மத்தியப் பிரதேச அரசு சூரிய ஒளி மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்தபோதுதான் குற்றச்சாட்டுகள் கிளம்பின. மத்தியப் பிரதேச அரசுக்கு ஒரு யூனிட் ரூபாய் 6.04 என்ற விலையில் சூரிய ஒளி மின்சாரம் வழங்க இதே அதானி நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. ஆனால் அதானி நிறுவனத்தின் இந்த விலைப்புள்ளியை நிராகரித்த மத்தியப் பிரதேச அரசு, மொரீஷியஸ் நாட்டைச் சேர்ந்த “ஸ்கை பவர் சவுத் ஈஸ்ட் ஏஷியா” என்ற நிறுவனத்தோடு, ஒரு யூனிட் 5.05 என்ற விலையில், 25 ஆண்டுளுக்கு மின்சாரம் வாங்க ஒப்புதல் அளித்தது உண்மையா இல்லையா? என்றும் எனது அறிக்கையில் கேட்டிருந்தேன்.

மேலும் அந்த அறிக்கையில், அதானி நிறுவனம், 648 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் மின்சாரப் பூங்காவை ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைக்க நிலங்களை வாங்குவதில் பல முறைகேடுகள் நடைபெறுவதாகவும், இடைத்தரகர்கள் இடையில் புகுந்து குறைந்த விலைக்கு நிலத்தை விவசாயிகளிடமிருந்து வாங்கி, அதானி நிறுவனத்துக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் எழுந்த புகார்கள் பற்றியும், சில மாதங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் அதானி நிறுவனம் தொடர்ந்துள்ள வழக்கு ஒன்று, இந்தக் குற்றச்சாட்டுகளை மெய்ப்பிக்கும் விதமாக உள்ளது என்றும் தெரிவித்திருந்தேன்.

சூரிய ஒளி மின் நிலையங்களை அமைப்பதற்கான செலவு குறைந்து விட்டதால் நடப்பாண்டில் சூரிய ஒளி மின்சாரத்தின் கொள்முதல் விலை ரூ. 5.86 ஆக குறைந்து விட்டது. அடுத்த ஆண்டில் இது யூனிட் ஐந்து ரூபாய் அளவுக்குக் குறைய வாய்ப்புள்ளது. இந்த நிலையில் அதானி நிறுவனத்துடன் ஒரு யூனிட்டுக்கு 2 ரூபாய் கூடுதலாக அதாவது ரூ. 7.01 என்ற விலைக்கு மின்சாரம் வாங்க அதிமுக அரசு ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது .இந்தத் துறையின் முன்னாள் அமைச்சருக்கு வேண்டிய உறுப்பினர்களான அக்சயகுமார் மற்றும் ஜி. ராஜகோபால் ஆகியோரை உள்ளடக்கிய தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம், முன்னுரிமை கட்டண விலையான ரூ. 7.01 என்பதன் கால வரம்பை 1-4-2015 முதல் 31-3-2016 வரை என்று தன்னிச்சையாக நீட்டித்திருப்பது உண்மையா இல்லையா?

இப்படியெல்லாம் முறைகேடுகள் செய்து, பலகோடி ரூபாய்க்கு தனியார் ஒருவரிடம், எந்தவிதமான டெண்டரும் இல்லாமல், நியமன முறையில் மின்சாரம் வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டதை பற்றித் தான் தற்போது “டெக்கான் கிரானிகல்” எழுதியுள்ளது. இந்தத் துறைக்கு அமைச்சராக இருந்தவர் வீடுகளிலே தான் வருமான வரித் துறை இரண்டு நாட்களுக்கு முன்பு சோதனை செய்திருக்கிறது. அந்தத் துறையின் அமைச்சராக இருந்தவரின் நண்பர் வீட்டிலே எடுக்கப்பட்ட 5 கோடி ரூபாய், அமைச்சருடைய சொந்தப் பணம் என்பதற்கான ஆவணங்கள் கிடைத்துள்ளன என்றும், அந்த நபர் ஓ. பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், செந்தில் பாலாஜி ஆகியோருக்கு நெருக்கமாக இருந்து, அவர்களுடைய பணப் பரிவர்த்தனைகளுக்கும் பாதுகாவலராக இருந்தவர் என்றும் செய்திகள் வந்துள்ளன. ஆனால் மற்றவர்களை விட்டு விட்டு, நத்தம் விசுவநாதன் சம்பந்தப்பட்ட இந்த ஊழல்களையும் மறைப்பதற்கான முயற்சிகள் தற்போது நடப்பதாகவும், தவறு செய்தவர்கள் மீதான குற்றம் உறுதியானால், அதிலே தாங்களும் சிக்கிக் கொள்ள நேரிடும் என்பதற்காக, முன்னாள் அமைச்சர்கள் செய்த ஊழலை மறைக்க முயற்சிகள் நடைபெறுவதாகவும் அதற்கு டெல்லி மூத்த அமைச்சர் ஒருவர் உறுதுணை புரிவதாகவும் தகவல்கள் வருகின்றன. சோதனை செய்த வருமான வரித் துறையும் அதைப்பற்றிய தகவல்களை வெளிப்படையாகத் தெரிவிக்காமல் இருப்பது என்ன காரணத்தால் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. .

எனவே இது பற்றிய உண்மை விவரங்களும் அய்யம்பாளையத்தில் கைப்பற்றப்பட்ட சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ள விவரங்களும் வெளி உலகத்திற்குத் தெரிய பொறுப்பிலே உள்ள உயர்நீதி மன்ற நீதிபதி ஒருவரைக் கொண்டு முறையான விசாரணை நடத்திட வேண்டும் என்பது தான் நீதி – நியாயத்தை எதிர்பார்க்கும் அனைவரின் விருப்பமும் ஆகும். எனவே ஆட்சிப் பொறுப்பில் இருப்போர், இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பார்களா என்று நடுநிலையாளர்கள் காத்திருக்கிறார்கள். அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால், முன்னாள் – இந்நாள் அ.தி மு.க. அமைச்சர்கள் மீது தற்போது கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை தானோ என்ற சந்தேகத்தைத் தமிழக மக்கள் உறுதி செய்து கொண்டு விடுவார்கள்!” என்று தெரிவித்துள்ளார்

Related Posts