தக்கனூண்டு சைஸ் ரோபோ! – இது லேசர் பீம் உதவியால் இயங்கும்
வெறும் இயந்திரம் எனும் நிலையில் ஆரம்பிக்கப்பட்ட ரோபோக்களின் இன்றைய வளர்ச்சி பிரமிப்பூட்டுகிறது.இதுவரை வந்ததெல்லாம் வெறும் சாம்பிள் தான் இனிமேல் தான்பா மெயின் பிக்சர் என மிரட்டுகின்றனர் விஞ்ஞானிகள். அதாவது சுயமாகச் சிந்தித்து, முடிவெடுக்கக் கூடிய ரோபோக்கள் தான் அடுத்த இலக்காம்! அப்படி ஒன்று சாத்தியமாகும் காலத்தில் நிகழப் போகும் விபரீதங்கள் தான் திகிலை ஏற்படுத்துகின்றன.

டெர்மினேட்டர் படம் பார்த்திருப்பீர்கள். ஆட்களைத் தேடித் தேடிக் கொல்லும் வில்லன் ரோபோ. அப்படிப்பட்ட வாடகைக் கொலையாளியை உருவாக்கும் காலம் இதோ வெகு அருகில் என அதிர்ச்சியளிக்கிறார் இங்கிலாந்திலுள்ள ஷெப்பீல்ட் பல்கலைக்கழகத்தின் ரோபோட்டிக்ஸ் பேராசிரியர் நோயல் ஷார்க்கி.
ரோபோக்களின் “அறிவு” படிப்படியாய் வளர்ந்து கொண்டே வருகிறது. முதலில் சுவிட்ச் போட்டால் ரோபோக்கள் இயங்கின, பின்னர் கம்ப்யூட்டரின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டன, இப்போதோ மனித மனதிற்கே கட்டுப்படுகின்றன என பரபரப்பு ஏற்றுகிறார் இவர். கூடவே, ரோபோக்களின் வளர்ச்சி ஒவ்வோர் நாட்டிலும் வெகு சுதந்திரமாய் வளர்கிறது. இது ஆபத்தானது. “அணு” வுக்கு இருப்பது போல உலகளாவிய சட்டங்களும் கட்டுப்பாடுகளும் ரோபோ தயாரிப்பிலும் வரவேண்டும் என காரசார அரசியலையும் கலக்கிறார்.
வயர்களும், இரும்புக் கம்பிகளும் கொண்ட லெப்ட் ரைட் போட்டு நடக்கும் “மெஷின் லுக்” ரோபோக்கள் இப்போதெல்லாம் குறைந்துவிட்டது. அச்சு அசலாக மனிதர்களைப் போலவே இருக்கும் ரோபோக்கள் தான் லேட்டஸ்ட் டிரண்ட். ஜப்பானில் சமீபத்தில் கோபியன் எனும் ரோபோவை வெள்ளோட்டம் விட்டார்கள். இது ஏழு விதமான மனித உணர்ச்சிகளை வெளிப்படுத்தி வியப்பூட்டியது. அட்ஷோ டகான்ஸி தலைமையில் டோக்கியோவிலுள்ள வசீடா அறிவியல் மற்றும் பொறியியல் கல்வி நிறுவனம் இதை உருவாக்கியிருந்தது.
போர்களில் ரோபோக்களின் பணி இனிமேல் வெகுவாக அதிகரிக்கப் போகிறது. வெடிகுண்டுகளை அழிக்கும் பணியில் இப்போதே பல ரோபோக்கள் ஈடுபட்டுள்ளன. ஆளில்லாத ரோபோ விமானங்களையும் செய்தாகிவிட்டது. இவற்றை ராணுவ தளத்தில் இருந்து கொண்டு செயற்கைக் கோள் மூலமாக இயக்க முடியும். இதன் அடுத்த இலக்கு, தொலைவில் இருந்து கூட இயக்கத் தேவையில்லாத ரோபோக்கள். அதாவது ரோபோக்களே தீர்மானிக்கும், எங்கே குண்டு போடவேண்டும், எப்போது போடவேண்டும் என்பதை ! தேவைப்பட்டால் அதுவே ஒரு மனித வெடிகுண்டாக…, மன்னிக்கவும் ரோபோ வெடிகுண்டாகவும் மாறி வெடிக்கும் !
இப்படி சகட்டு மேனிக்கு ரோபோக்கள் அதிகரிப்பதால் வேலையில்லாத் திண்டாட்டம் 2030ல் பல மடங்கு அதிகரிக்கும் என்கிறார் அமெரிக்காவின் மார்ஷல் பிரைன் எனும் பியூச்சராலஜிஸ்ட். ரோபோவைச் செய்யும் வேலை மட்டும் தான் மனிதனுக்கு. மற்ற வேலைகளெல்லாம் இனிமேல் ரோபோவுக்கு.
ரோபோக்களைக் குறித்து அடைமழை போல வரும் வியப்பும், திகைப்புமான செய்திகளுக்குச் சிகரம் வைக்கிறார் ஹாலந்தில் ரோபோ ஆராய்ச்சியில் டாக்டர் பட்டம் பெற்ற லெவி. அவர் சொல்வது இது தான். 2050ல் மக்கள் ரோபோவுடன் செக்ஸ் வைத்துக் கொள்வார்கள். அதை யாராலும் தடுக்க முடியாது.
கைவிரல் நுனியளவு, அதாவது வெறும் 15 மி.மீட்டர் நீளமே கொண்ட வளைந்து செல்லக்கூடிய ரோபோவைக் கண்டுபிடித்து போலந்து வார்சா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்துள்ளனர். ரோபோ ஆய்வு வரலாற்றில் புதிய மைல் கல்லாக இது கருதப்படுகிறது. உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ரோபோக்கள் மனிதனைப் போன்ற உடல் பாகங்களைக் கொண்டதாகவும் அல்லது மிருகங்கள், பிராணிகள் போன்றவையாகவும் இருந்தன.
இவை இணைப்புகளுடன் அதிக எடை கொண்டவையாக இருந்தன. இந்த வகையான ரோபோக்கள் மின்சாரம் அல்லது பாட்டரியால் இயக்கப்பட்டு வந்தன. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் மீன், பறக்கும் தும்பி போன்ற சிறிய வகையிலான ரோபோக்கள் உருவாக்கப்பட்டன. சிறிய வகை ரோபோக்களை இயக்க மின்சக்தி அளிப்பது பெரும் சவாலாக இருந்து வந்தது. இதை போலந்தில் உள்ள வார்சா பல்கலைக்கழக அறிவியல் துறை ஆய்வாளர்கள் தங்கள் புதிய கண்டுபிடிப்பின் மூலம் முறியடித்துள்ளனர்.
அவர்கள் கண்டுபிடித்துள்ள கைவிரல் நுனியளவு ரோபோ, வெளிச்சத்தையே சக்தியாக கொண்டு இயங்குகிறது. லேசர் பீம் லைட்டின் உதவியுடன் சிறிய ரோபா இயக்கப்படுகிறது. கம்பளிப் பூச்சியைப் போல் நகர்ந்து செல்லும் இந்த சிறிய ரோபோ எந்தவித இணைப்புகளுமின்றி வளையக்கூடியது. அதிலும் அதிசயம் என்னவென்றால், இந்த ரோபோ சமமான இடத்தில் ஊர்ந்து செல்வது மட்டுமின்றி, செங்குத்தான பகுதிகளிலும் ஏறிச் சென்று மூலை முடுக்குகளில் நுழையும் வல்லமை படைத்தது.
இந்த சிறிய ரோபோக்கள் தன்னை விட பத்து மடங்கு எடை கொண்ட பொருள்களை கொண்டுச் செல்லும் திறமை கொண்டது என்பது மேலும் ஒரு சிறப்பம்சமாகும். வளையும் தன்மை கொண்ட “லிக்விட் கிரிஸ்டலைன் எலாஸ்டோமீட்டர்’ எனும் திரவ பொருளைப் பயன்படுத்தி ஆய்வாளர்கள் இந்த சிறிய ரோபோவை உருவாக்கியுள்ளனர். இந்த திரவம், வெளிச்சத்தின் அடிப்படையில் தனது அமைப்பை மாற்றிக் கொள்ளும் என்பதால் லேசர் பீம் வெளிச்சத்தை இரு புறத்திலும் செலுத்தி ரோபோவை இயங்க வைத்துள்ளனர். இந்த வெளிச்சத்தின் தன்மையை மாற்றி அமைத்தால், இந்த வகை ரோபோக்கள் முப்பரிமாண (3டி) வடிவங்களிலும் உருவாக்கலாம் என்று மென்மையான வகை ரோபோவைக் கண்டுபிடித்த குழுவின் தலைவரும், போலந்தின் வார்சா பல்கலைக்கழகத்தின் அறிவியல் துறை ஆய்வாளர் பியோட்டர் வஸல்ஸியக் நம்பிக்கையுடன் கூறுகிறார். இந்த ரோபோவைக் கண்டுபிடிக்கும் ஆய்வில் இத்தாலி ஆய்வாளர்களும், லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்களும் தங்களின் பங்களிப்பை அளித்துள்ளனர்.


