காற்றை சுவாசிக்கும் ராக்கெட் இன்ஜின் -இஸ்ரோ சாதனை
ஆக்சிஜனை கொண்டு இயங்கும் ராக்கெட் இன்ஜினை இஸ்ரோ விஞ்ஞானிகள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா இஸ்ரோ ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 6 மணியளவில் வெற்றிகரமாக சோதனை செய்தனர்.இந்த இன்ஜின் வளிமண்டலத்தில் ஏவுகணை பயணிக்கும் போது வேலையைத் தொடங்கும். இதன் ஹைலைட் எரிபொருள் சிக்கனம். INSAT-3DR வானிலை ஆராய்ச்சி செயற்கைக்கோள், இந்த ஸ்க்ராம் இன்ஜின் மூலம் செப்டம்பர் 8-ம் தேதி ஏவப்படுகிறது.

சோதனை குறித்து இஸ்ரோ விஞ்ஞானி சிவன் கூறுகையில், “வளிமண்டல ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு இயங்கும் ராக்கெட் இன்ஜின் சோதனை வெற்றி அடைந்தது. ராக்கெட் ஏவப்பட்ட 55 விநாடிகளில் சோதனை வெற்றி அடைந்தது. 7 விநாடிகளில் திரவ ஆக்சிஜன், ஹைட்ரஜன் எரியூட்டப்பட்டது. ஹைட்ரஜன், ஆக்சிஜன் எரியூட்டப்பட்டது எதிர்பார்க்கப்பட்ட 5 விநாடிகளை காட்டிலும் அதிகம். ராக்கெட் இன்ஜின் சோதனை இஸ்ரோவுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி அடைந்ததன் மூலம் இனி ராக்கெட் ஏவுவதற்கான செலவு 10 மடங்கு குறையும். பொதுவாக ராக்கெட்கள் ஆக்சிஜன் மற்றும் எரிபொருளை தாங்கிச் செல்லக் கூடியவை. ஆனால் இந்த ராக்கெட் என்ஜின் வளிமண்டல ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு அதன் மூலம் இயங்குவதால், ராக்கெட் எடை குறைவாக, அதே சமயம் திறன் அதிகம் கொண்டதாக இருக்கும். இதற்கு முன் இத்தகைய ராக்கெட் என்ஜினை அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா மட்டுமே சோதனை செய்துள்ளன”
உள்நாட்டு தொழில் நுட்பத்தில் உருவான மறுபயன்பாட்டு ராக்கெட் இதுவாகும். இந்த ராக்கெட் என்ஜின் சோதனை பல நாட்களுக்கு முன்னரே சோதனை செய்ய திட்டமிடப் பட்டிருந்தது. ஆனால் மாயமான ஏஎன் 32 விமானத்தை தேடும் பணிக்காக வங்கக் கடலில் ஏராளமான கப்பல்களும், விமானப்படை விமானங்களும் நிறுத்தப்பட்டிருந்ததால் இஸ்ரோ இந்த ராக்கெட் சோதனையை ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.


