வந்துடுச்சு.. ஆனா.. வரலை! – தென் மேற்கு பருவ மழை குறித்து குழப்பம்!

வந்துடுச்சு.. ஆனா.. வரலை! – தென் மேற்கு பருவ மழை குறித்து குழப்பம்!

ஒவ்வொரு வருஷமும் அக்னி நட்சத்திரம் முடிந்ததும் மே மாதம் கடைசியில் அல்லது ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்தாண்டு அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் புழுக்கம் அதிகமாகி வியர்த்துக் கொட்டியது. அதனால் மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். இந்நிலையில், வானம் இன்று மேகமூட்டத்துடன் காணப்பட்டது. வெப்பமும் சற்று குறைந்து இருந்தது.

weather-june-5

இதனிடையே தென்மேற்கு பருவமழை தொடக்கம் தொடர்பாக வானிலை நிறுவனங்களின் அறிவிப்பில் வேறுபாடு நிலவி வருகிறது. தனியார் வானிலை நிறுவனமான ஸ்கைமெட் மே 28 முதல் 30-ம் தேதிக்குள் பருவமழை தொடங்கும் என்று அறிவித்தது. ஆனால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஜூன் 7-ம் தேதியை ஒட்டி பருவமழை தொடங்கலாம் என்று அறிவித்தது. ஸ்கைமெட் அறிவிப்பின்படி பருவமழை தொடங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக பருவமழை தொடர்பான அறிவிப்புகளில் வேறுபாடு நிலவிவருகிறது.

தற்போதைய நிலையில் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் இன்னும் குறையாத காரணத்தினால் மக்கள் பருவமழை பெய்யும் நாட்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் தென்மேற்கு பருவ மழை கேரளா மாநிலத்தில் வரும் 4 அல்லது 5 நாட்களுக்குள் தொடங்குவதற்கான சாத்திய கூறுகள் உள்ளன. இதன் எதிரொலியாக தமிழகத்தை பொறுத்தவரையில் மேற்கு தொடர்ச்சி மலை அருகில் உள்ள நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் குமிளி, சின்னகல்லாறு உள்பட சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வெப்பசலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நாளை மாலை அல்லது இரவில் மாநகரில் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் படிப்படியாக வெப்பம் குறைய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

இதனிடையே தென்மேற்கு பருவமழை தொடர்பாக கூடுதல் தகவல்களை இந்திய வானிலை ஆய்வு துறை தலைமை இயக்குனர் லட்சுமன் சிங் ரத்தோர், டெல்லியில் வெளியிட்டார். ”இந்த ஆண்டு பற்றாக்குறை மழை என்று கூறுவதற்கு இடம் இருக்காது. பருவமழை சராசரி அளவோ அல்லது சராசரிக்கும் அதிகமாகவோ பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. நீண்ட கால சராசரி என்று பார்த்தால் நாட்டின் வட, மேற்கு பகுதிகளில் 108 சதவீத மழை பெய்வதற்கு சாத்தியம் உண்டு. நாட்டின் மத்திய பகுதிகளிலும், (தமிழகம் உள்ளிட்ட) தென் தீபகற்ப பகுதிகளிலும் 113 சதவீத மழை பெய்யும்.”

வட, கிழக்கு பிராந்தியத்தை பொறுத்தமட்டில் 94 சதவீத மழை பெய்யக்கூடும். இதுதான் சராசரிக்கும் குறைவான அளவு ஆகும்.90 சதவீதத்துக்கும் குறைவான மழை என்றால் அது பற்றாக்குறை மழை ஆகும். 90-96 சதவீத மழை என்றால் அது சராசரிக்கும் கீழே பெய்யும் மழை. 96-104 சதவீதம் என்கிறபோது அது சராசரி அளவு ஆகும். 104-110 சதவீதம் என்னும்போது அது சராசரிக்கும் அதிகமான மழை ஆகும். 110 சதவீதத்துக்கும் அதிகமான மழை என்கிறபோது அது நல்ல மழை ஆகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தென் தீபகற்ப பகுதிகளில் 113 சதவீத மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு துறை கணித்துள்ளதால் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் இந்த ஆண்டு நல்ல பருவ மழையை பெறும். இது வறட்சியால் பாதித்துள்ள விவசாயிகளுக்கு நற்செய்தியாக அமைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts