பா.ம.க.கெலிச்சா ரெண்டு டெபுடி சி.எம்! – ராமதாஸ் பேட்டி
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர், “தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சியை ஜெயலலிதா நடத்தி வருகிறார். அவரின் ஆட்சிக்கு ஊழல் அதிகாரிகளும் துணை போய் உள்ளனர். தி.மு.க., அ.தி.மு.க. இந்த 2 கட்சிகளின் ஊழல்களை மக்கள் மத்தியில் பா.ம.க. மிகச்சரியாக எடுத்துரைத்தது. இந்த 2 கட்சிகளால் தான் குறிப்பிட்ட சதவீத மக்கள் இன்னும் வாக்களிக்கவே விரும்பவில்லை. இன்றைக்கு மாற்று அரசியலை முன் எடுத்து செல்லும் பா.ம.க. மீதும், முதல்-அமைச்சர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீதும் மக்களுக்கு நம்பிக்கை வந்துள்ளது. டாக்டர் அன்புமணி ராமதாசை மக்கள் ஆதரிக்க முன்வந்து இருக்கிறார்கள்.

எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் பணத்தை வாரி இறைக்கிறது. இதுவரை 100 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இந்த இரண்டு கட்சிகளும் பதுக்கி வைத்து இருக்கிறார்கள். இந்தியாவிலேயே பணத்தால் வாக்குகளை வாங்கும் மாநிலங்களில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. என்னுடைய வீடு அமைந்துள்ள திண்டிவனத்தில் கூட அந்த இரு கட்சிகளும் பணத்தை வாரி இறைக்கிறார்கள். பணம் கொடுக்காமல் வெற்றி பெற முடியாது என்ற நிலைக்கு தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் வந்து விட்டது. எனவே தான் பணத்தை அள்ளி வீசுகிறார்கள்.
மின்தடையால் தமிழகத்திற்கு வர வேண்டிய தொழில் முதலீட்டாளர்கள் வேறு மாநிலத்திற்கு சென்று விட்டார்கள். பா.ம.க. ஆட்சிக்கு வந்ததும் தொழில் முதலீட்டாளர்கள் தமிழகத்திற்கு வரக்கூடிய நிலையை உருவாக்குவோம். எங்கள் முதல்-அமைச்சரே நேரடியாக முதலீட்டாளர்களிடம் பேசி, தமிழகத்தில் அதிகளவில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பார். பா.ம.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட திட்டங்களை நாங்கள் நிறைவேற்றுவோம். மக்களுக்காக புதிய திட்டங்களை உருவாக்குவோம். பா.ம.க. வெற்றி பெற்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் முதல்-அமைச்சராக பதவியேற்கும்போது 2 துணை முதல்-அமைச்சர் பதவி உருவாக்கப்படும்.
ஒரு துணை முதல்-அமைச்சர் தென் மாவட்டத்தை சேர்ந்தவராகவும், மற்றொரு துணை முதல்-அமைச்சராக பெண் ஒருவரும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். நாளை (இன்று) எங்கள் கட்சியின் வேட்பாளர்கள் மெரினா கடற்கரை காந்தி சிலை முன்பு ‘பணி செய்வோம் அல்லது பதவி விலகுவோம்’ என்ற உறுதிமொழியை மக்கள் மத்தியில் எடுக்க உள்ளனர். பா.ம.க. ஆட்சிக்கு வந்ததும் தூய்மையான, வெளிப்படையான நிர்வாகம் செயல்படும்”இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.


