புத்தகம் மற்றும் நோட்டு மூட்டை தூக்கிச் செல்லும் குழந்தைகளுக்கு ரிலீஃப்! – மத்திய அரசு அட்வைஸ்
ஒரு ஸ்மார்ட் போனில் மற்றும் ஒரு சுட்டு விரல் அசைவில் ஒட்டு மொத்த உலகமே வந்து விட்ட நவீனமயமான காலத்தில் கூட கல்வி முறையின் மாற்றத்தால் குழந்தைகள் பள்ளிக்கு கொண்டு செல்லும் புத்தக பையின் அளவு அதிகரித்து கொண்டேதான் போகிறது. முன்னெல்லாம் ஹைஸ்கூட் கல்வி வரும் வரை பள்ளி குழந்தைகளுக்கு குறிப்பிட்ட பாடப்பிரிவு மட்டுமே இருக்கும். ஆனால் தற்போது அதன் எண்ணிக்கை அதிகரித்து கொண்ட செல்கிறது. சுற்றுச்சூழல், கம்ப்யூட்டர் உட்பட பல பாடங்களும் கூட தொடக்க கல்வியிலேயே இடம் பெற்று விட்டது. இவ்வாறு பாடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அதுதொடர்பான புத்தகங்களும், நோட்டு புத்தகங்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. சாதாரணமாக ஒரு ஆரம்ப கல்வி கற்கும் ஒரு குழந்தை 20 முதல் 25 பாட புத்தங்களையும், 25க்கும் மேற்பட்ட நோட்டு புத்தகங்களையும் அன்றாடம் பள்ளிகளுக்கு கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அளவுக்கு அதிமான எடை கொண்ட பாடப்புத்தகங்களை கொண்டு செல்லும் மாணவ- மாணவியர்களுக்கு பாதிப்பு ஏற்படுவது தொடர்பாக ஏற்கனவே பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படி பாட புத்தகங்களை தூக்கிச் செல்லும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பாக மருத்துவ ரீதியாக சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றுள்ளது. கர்நாடக மாநிலம் கஸ்தூரி பா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்தியுள்ள அந்த ஆய்வின் முடிவுகளில், குழந்தைகள் கொண்டு செல்லும் பாட புத்தக சுமை குழந்தையின் மொத்த எடையில் 5 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருந்தால் அது கால் எலும்பு மற்றும் தண்டு வடத்தை பாதிக்கும்.அதாவது 30 கிலோ எடை கொண்ட குழந்தை ஒன்று 2 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட பாட சுமையை எடுத்துச் செல்லவது அதற்கு பாதிப்பையே ஏற்படுத்தும் என தெரிவிக்கப் பட்டிருந்தது.
அதுபோலவே, குழந்தையின் மொத்த எடையில் இருந்து 15 சதவிகிதத்திற்கும் அதிகமாக புத்தக சுமை இருந்தால் குழந்தையின் தலை முதல் கால் வரை அனைத்து பாகங்களுமே பாதிக்கப்படும்.அனைத்து எலும்பு இணைப்புகளிலும் வலி ஏற்படும், நாளடைவில் அந்த பாகங்கள் அனைத்தும் தேய்ந்து பிற்காலத்தில் பெரும் பாதிப்பை அந்த குழந்தைகள் சந்திக்க நேரிடும். குழந்தையின் நிமிர்ந்த நடையும், உடல் அமைப்பும் கூட பாதிக்கப்பட்டு விடும்.சிறு வயதிலேயே சுமக்கும் இந்த எடை அந்த குழந்தைகளுக்கு பிற்காலத்தில் பெரிய அளவில் பாதிப்பையே ஏற்படுத்தும் எனவும் அந்த ஆய்வு எச்சரித்திருந்தது..
இந்நிலையில்தான் மத்திய பள்ளி கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) தனது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சில ஆலோ சனைகளை வழங்கி உள்ளது. மாணவர்கள் அட்டவணைப்படி உள்ள புத்தகங்களை மட்டுமே கொண்டுவர வேண்டும். பெரிய மேற்கோள் புத்தகங்கள், அகராதிகள், இதர பொருட்களை எடுத்து வருவதை தவிர்க்க வேண்டும். அத்தகைய புத்தகங்கள், சீருடைகள், விளையாட்டு கருவிகள் போன்றவைகளை வைப்பதற்காக வகுப்பறைகளில் பாதுகாப்பு அடுக்கு அறைகள் (ரேக்) மற்றும் நூலகங்கள் அமைக்கலாம்.
சரியான முறையில் வடிவமைக்கப்பட்ட புத்தக பைகளை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். அதிக சுமை உள்ள புத்தக பைகளை சுமப்பதால் மாணவர்களுக்கு ஏற்படும் பின்விளைவுகள் குறித்து பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கலந்தாய்வு நடத்த வேண்டும். பள்ளி பாடத்திட்டம் அதிக செயல் நடவடிக்கைகளை கொண்டதாக இருக்க வேண்டும். தலைசுற்றும் அளவுக்கு அதிகளவு வீட்டு பாடங்களை கொடுக்கக்கூடாது. இதுபோன்ற நடவடிக்கைகளை பள்ளி தலைமை மற்றும் மேற்பார்வையாளர்கள் கண்காணிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


