சாதி வெறியை ஊட்டும் இந்த சமூகம்!
வேற்று சாதிப்பெண்ணை மணந்த இளைஞர் பட்டப் பகலில், நகரின் பிரதான சாலையில் வெட்டிக் கொல்லப் பட்டுள்ளார்.. சாதி வெறி யால் நிகழும் காட்டுமிராண்டித்தனத்தின் தொடர் வெளிப்பாடு இது. இதுபோன்ற சம்பவங் களுக்கு முடிவு கட்டியே ஆக வேண்டும் என்று குரல்கள் பலமாக ஒலிக்கின்றன. இன்னும் கோஷம் அதிகமாகவே ஒலிக்கலாம்.அதேநேரத்தில் சமூதாயம் மற்றும் உளவியல் ரீதியாக இதுபோன்ற விவகாரங்களில் உள்ள சில பின்னணிகளை பற்றி கவலைப்படுவதேயில்லை .

முதலில் கலப்பு மணம் புரிந்தால் சாதிகள் ஒழியும்..எதன் அடிப்படையில் சொல்கிறார்களோ அவர்களுக்கே வெளிச் சம். கலப்பு மணம் புரிந்துகொண்டவர்களில் தங்கள் குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் வாங்காத வர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்?காதல் மற்றும் கலப்பு மணம் புரிபவர்கள் அனைவருமா சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள்? அருமை யான வேலை, நல்லவன், பொறுப்பானவன் என்ற அடையாளங்கள் தென்படும்போது பெருமளவு எதிர்ப்புகள் குறைந்து போகும்.இப்படித்தான் பல கலப்பு மணங்கள் பெரிய அளவில் சலசலப்பை சந்திக்காமல் வெகுவிரைவில் இருதரப்பிலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
அதே நேரத்தில் காதலர்கள் அல்லது தம்பதியர் கொடூரங்களுக்கு உள்ளாக்கப்படும்போது சாதி வெறியை தாண்டி இன்னும் சில காரணங்கள் பின்னால் இருக்கும்..முதல் காரணம், காதலர்கள் தங்கள் பெற்றோரை உரிய வகையில் சமாதானப்படுத்த எவ்வளவு வழிகள் உள்ளனவோ, அதைப்பற்றி யோசிப்பதே இல்லை,.திருமணமான புதிதில் தம்பதியர் வாழ்வில் பெரும்பாலும் தாம்பத்ய உறவு மட்டுமே பிரதானமாக தெரியும் ஆனால் ஒரு குழந்தை வந்த பிறகு இருவரின் கவனமும் பிள்ளைமீது போய்விடுகிறது
ஒவ்வொரு நிமிடமும். பாசத்தை கொட்டி விருப்பப்பட்ட உணவு, விதவிதமான ஆடைகள், நகைகள் போட்டு அழகு பார்க்கிறார்கள்… எவ்வளவோ நெருக்கடிகளில் வட்டிக்கு கடன் வாங்கியாவது படிக்க வைக்கிறார்கள்,கணவன் – மனைவி இருவரும் தங்களுக்கிடை யான உறவிற்கு முக்கியத்துவம் கொடுப்பதை பின்னுக்கு தள்ளிவிட்டு .பிள்ளை களின் எதிர்காலத்தை மனதில் வைத்தே, சேமிப்பு, , படிக்க வைத்து ஆளாக்குவது என பல விஷயங்களில் கடுமையாக போராடுகின்றனர்.
இப்படிப்பட்ட நிலையில் கல்லூரி படிப்பு முடியாமல் காதல், திருமணம், வீட்டை விட்டுவெளியேறுதல் போன்ற வற்றால் பெற்றோர் நிலைகுலைந்து போய் விடுகின்றனர். சில குடும்பங்களில் அவமானம் தாளாமல் தற்கொலை களும் நடக்கின்றன.கொலைகள் பரபரப்பாகவும் பதற்றத்தோடும் பெரிதாக பேசப்படும் சமூகத்தில், ‘’தற்கொலை கள்’’ வசதியாக மறக்கப்பட்டுவிடுகின்றன.மாற்று சாதியில் ஒரு பெண்ணை ஒருவன் காதலித்தால், நீ தூக்கு மாப்பிள்ளை எதுவானாலும் பாத்துக்கலாம் என்று ஏற்றிவிடுவதற்கு ஆட்கள் இருக்கின்றனரே தவிர, ஆக்க பூர்வமான, கௌரமான வழிகளை பயன் படுத்தி உரிய வகையில் நாடும் யோசனைகள் சொல்ல முன் வருவதில்லை.
இன்னொரு பக்கம். நேற்றுவரை தன் பேச்சை கேட்ட குழந்தை, மேஜர் என்ற ஒரே கேடயத்தை பயன்படுத்தி பட்டென உறவை அறுக்கும் விதம்..திடீரென முளைக்கும் காதலனுடன் தனி வாழ்க்கையை தொடங்க முடிவெடுக்க துணிவு வரும் இளம் பெண் ணுக்கு, இவ்வளவு காலம் தனக்காகவே வாழ்ந்துவரும் பெற்றோரிடம் சொல்லி அவர்களிடம் போராட துணிவு வருவதே இல்லை என்பதுதான் ஆச்சர்யம்..காதலனுக்கு உடலையே பரிமாறத் தயக்கம் காட்டாத பெண்ணுக்கு, பெற்றோரிடத்தில் சில வார்த்தைகளை பரிமாறக்கூட தயக்கம்…
இதுபோன்ற விஷயங்களில் இன்னொரு மோசமான கட்டம் உண்டு. அதாவது எதிர்ப்பு என்ற பெயரில் பெற்றோர் ஆத்திரத்துடன் புத்திமதி சொல்லும்போது, அவர்களை கிள்ளுக்கீரையாக நினைத்து தடித்த வார்த்தைகளை காதல் தரப்பு,பயன்படுத்துவது, மேஜர் என்ற விஷயத்தை சொல்லி, சட்டப்படி என்னை தடுக்கவே முடியாது என்று நக்கலாக சொல்வது..
திருமணமாகிவிட்ட நிலையில், பெற்றோரை எதிர்ப்பது என்பது பல இடங்களில் அவமானப்படுத்தும் வழிமுறை கள்தான் கையில் எடுக்கப்படுகின்றன. கொடுமைப் படுத்துகிறார்கள் என்று பெற்றோரையே குற்றவாளி யாக்கி புகார் கொடுக்கும் சம்பவங்களுக்கு பஞ்சமில்லை.சாதி வெறியைத்தாண்டி இதுபோன்ற பல அம்சங்களும் கொடூரங்களை விளைவிக்க தூண்டுதல்களாக அமைந்துவிடுகின்றன.
இன்னொரு பக்கம், பெற்றோர் ஒரு விஷயத்தை மறந்து விடுகின்றனர். காதல் என்பது சாதி மதம் அந்தஸ்து போன்றவற்றையெல்லாம் யோசித்து வராது, அது இளமை அளிக்கிற அற்புதமான உணர்வு. காதல் பிறந்து நெருக்கமாக பேசும் போதுதான் எதிராளியை பற்றிய விவரங்களே தெரியவரும்…மகனோ, மகளோ, அவர்களுக்கும் உணர்வு, கனவு, ஆசை போன்றவை இருக்கும்.. உரிய பருவம் வந்ததும் ஒரு கட்டத்திற்கு மேல் அவர்கள் மீது நாம் 100 சதவீத உரிமையை கொண்டாட முடியாது என்பதை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும்..எட்டியிருந்து பார்க்க வேண்டிய நிலைக்கு தயார் படுத்திக்கொள்ளவேண்டும்
எல்லாவற்றையும்விட கலப்பு மணத்தால் அசாதாரண சூழல் நிலவும்போது தம்பதியரையும் சரி, பெற்றோரை யும் சரி.. சாதி, மத, அந்தஸ்து போன்றவற்றை சுட்டிக் காட்டாமல், ஆத்திரப்பட்டால் நடக்க ப்போகும் பின் விளைவு கள், அதனால் யார் யாருக்கு என்னென்ன பாதிப்புகள், மனித வாழ்வின் யதார்த்தமான சூழல் போன்றவற்றை புரிய வைக்க வேண்டும். ஆக்கபூர்வமான வழிகளில் விவகாரத்தை கையாளுமாறு யோசனைகள் சொல்லவேண்டிய கடமை இரு தரப்பு உறவினர்களுக்கும் நட்புகளுக்கும் உண்டு.
ஆனால் உறவுகளோ, ”பிள்ளைகளை வளர்த்த லட்சணம் இது தானா,, இதுவே என் குடும்பத்தில் நடந்திருந்தால். இன்னேரம் நடப்பதே வேறு” என சம்மந்தப்பட்ட குடு பத்தை குத்திக்காட்டி நக்கலடிக்கும் நிலைதான் பெரும் பாலான இடங்களில் இருக்கின்றன.இப்படி தூண்டிவிட்டு பிரச்சினையை மேலும் வலுவான தாக்கும் உறவுகள், பின்னாளில் போலீஸ், கோர்ட், சிறை என சட்டத்தின் பிடியில் சிக்கி தவிக்கும் குடும்பத்தினரை கண்டுகொள்ளாது…
காதலிப்பவர்கள், கல்வி, வேலை வாய்ப்பு என அடிப்படை விஷயங்கள் பூர்த்தியடைகிற வரையிலாவது காத்திருந்து பெற்றோரை சம்மதிக்க வைக்க முயற்சிக்க வேண்டும்..எவ்வளவு சொல்லியும் சாதி, மத, அந்தஸ்து போன்ற வற்றை மட்டுமே பெற்றோர் பார்க்கிறார்கள் என்பது உறுதியாக தெரியவந்தால், ”காதலர்கள் மீது தப்பில்லை..பொருத்தமான ஜோடிதான்..தேவையின்றி பெற்றோர்தான் முரண்டுபிடிக்கின்றனர் ”’ என்று மற்றவர்கள் சொல்லுகிற அளவுக்கு நிலைமையை உருவாக்கிவிட்டு கரம் பிடிப்பது நல்லது..சாதியில் உயர்வும் இல்லை தாழ்வும் இல்லை.. சாதி, பெருமையும் அல்ல அவமானமும் அல்ல…அது ஒரு அடையாளம் அவ்வளவே.. ஆனால் அதுதான் வாழ்க் கையில் பிரதானம் என்று நினைத்தால் அது அவரவர் தவறு
தனி மனித வாழ்க்கைக்கு ஆதாரமானது இரண்டே பக்கங்கள்தான்,, ஒன்று பசி, இருப்பிடம் போன்றவற்றிற்காக பொருளாதாரம், இன்னொன்று மனித குல தழைப்புக்கு வித்திடும் காமம் சார்ந்த வாழ்வியல்..இரண்டையும் அடைய எங்கேயும் சாதி அத்தியாவசியமாக தேவைப்படாது…அப்படிப்பட்ட சாதியை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொடூரங்களை நிகழ்த் துபவர்கள் எப்படி பயங்கரமான குற்றவாளிகளோ, அதே அளவுக்கு நிகரானது சாதி வெறியை ஊட்டும் இந்த சமூகம்..ஒரு உயிரை போக்கி பலரின் வாழ்வை சூன்யமாக்குவதை தவிர இந்த கொடூரங்கள் வேறு எதையும் சாதிப்பதில்லை


