பட்டாசு வெடிக்கத் தடை? – சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை!
தீபாவளி மற்றும் தசரா பண்டிகையின் போது அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு அடைந்து குழந்தைகளுக்கு சுவாசக்கோளாறு, ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு போன்ற நோய்கள் ஏற்படுவதால் டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரி அர்ஜூன் கோபால், ஆரே பண்டாரி, ஜேயா ராவ் பசின் ஆகிய 3 சிறுவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். 3 பேரின் சார்பில் அவர்களுடைய தந்தை யர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் அருண் மிஸ்ரா, ஆதர்ஷ் குமார் கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு 8–ந் தேதி மத்திய அரசுக்கும், டெல்லி அரசுக்கும் பதில் அளிக்குமாறு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டது.

மத்திய அரசு இது குறித்து நேற்று தாக்கல் செய்த மனுவில் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க எதிர்ப்பு தெரிவித்தது. அந்த பதில் மனுவில் மேலும், “தீபாவளியின்போது வெடிக்கப்படும் பட்டாசுகளால் மட்டுமே காற்று மாசடைவது இல்லை. தொழிற்சாலைகள், வான ஊர்திகள், ரெயில்கள், கப்பல்கள், கட்டிட பணிகள், குப்பை மற்றும் சருகுகளை எரித்தல், டெல்லியில் அதிகரித்துள்ள வாகனங்களால் ஏற்படும் புகை ஆகியவற்றாலும் டெல்லியில் காற்று மாசுபடுகிறது. காற்று மாசுபடுவதை பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் அரசு துறைகளின் ஒத்துழைப்புடன் சீரிய நடவடிக்கைகளால் தீபாவளியின் போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இயலும். எனவே பட்டாசுகள் மீது தடை விதிக்க தேவையில்லை”என்று அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கில் தங்களையும் ஒரு தரப்பாக சேர்த்து கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு பட்டாசு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவில், ”தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகள் வெடிப்பது இந்துக்கள் மட்டுமல்ல. மற்ற மதத்தை சேர்ந்தவர்களும் இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர். இருளை விரட்டி ஒளியை வழிபடும் இந்த பண்டிகையின் போது பட்டாசுகள் வெடிக்காமல் இருப்பது துக்கத்தை கடைப்பிடிப்பது போல ஆகிவிடும். சிவகாசியில் மட்டும் சுமார் 350 பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றின் மொத்த முதலீடு ஆயிரம் கோடி ரூபாயை தாண்டும். இந்த தொழிற்சாலைகள் மூலம் 3 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளிகள் நேரடியாகவும், 10 லட்சத்துக்கும் அதிகமாக தொழிலாளிகள் மறைமுகமாகவும் பயனடைகின்றனர். தீபாவளியின் போது பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிப்பது இந்த தொழிலையே நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த வழக்கில் ஸ்ரீஅய்யப்ப சங்கம், சிவகாசி என்ற அமைப்பின் தலைமையில் சில இந்து அமைப்புகள் தாக்கல் செய்துள்ள மனுவில், ”பட்டாசு வெடிப்பது உலகம் முழுவதிலும் உள்ளவர்களின் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகும். தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதற்கு தடை செய்வது இந்துக்களின் அடிப்படை உரிமையை மறுக்கும் செயலாகும். உணர்வுபூர்வமாக கொண்டாடப்படும் பண்டிகைகள் முறையற்ற தடைகளால் பாதிப்பு அடையக்கூடாது. இந்து மதத்தவர்களின் நம்பிக்கைப்படி, இந்த உலகில் வாழும் மக்களின் மகிழ்ச்சியை கொண்டாடுவதன் அடையாளம் பட்டாசுகளின் சத்தமாகும். எனவே பட்டாசுகளுக்கு தடை விதிப்பது இந்து மதத்துக்கும், இந்து மத நம்பிக்கைக்கும் எதிரானதாகும்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனுக்களின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.


