தமிழ் குரல் / AI Voice
மனித வாழ்வின் அன்றாடப் பயணங்களில் நொடிப்பொழுதில் கடந்து போகும் ஒரு போக்குவரத்துச் சிக்னல், ஒட்டுமொத்தத் திரைப்படத்திற்கான கருவாக உருவெடுத்திருப்பது ‘சிக்னல் @ 11.30’ படத்தின் தனித்துவம். தமக்கு நேர்ந்த ஒரு நிஜ சம்பவத்தைத் திரைமொழியாக மாற்றியிருக்கும் இயக்குநர் மலர்விழி நடேசன், காதலின் மென்மையையும், மர்மத்தின் முடிச்சுகளையும், திகிலின் பதற்றத்தையும் ஒரே நேர்கோட்டில் இணைத்து ஒரு சுவாரசியமான திரில்லர் அனுபவத்தைக் கட்டமைக்க முயன்றுள்ளார். கதைக்கருவில் இருக்கும் இந்தப் புதுமையும், மனித உணர்வுகளைக் கையாண்ட விதமும் கைதட்டல் பெற்றாலும், திரைக்கதையின் ஓட்டத்தில் இன்னும் சற்று வேகத்தையும், பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் கூடுதல் திருப்பங்களையும் சேர்த்திருந்தால், இந்தப் பயணம் இன்னும் மறக்க முடியாத திரையனுபவமாக மாறியிருக்கும்.
கதையும், களமும்
அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் வழியில், இரவு 11:30 மணியளவில் போக்குவரத்து சிக்னலில் நின்று கொண்டிருக்கும் இளம் தொழிலதிபர் சந்தோஷ் பிரதாப்பின் கண்களில், இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் ஒரு பெண்ணை சில இளைஞர்கள் பின்தொடர்ந்து விரட்டும் காட்சி படுகிறது. அவர்களைப் பின் தொடர்ந்து செல்லும் சந்தோஷ், அப்பெண் சென்ற இருசக்கர வாகனத்தை ஒரு இடத்தில் கண்டெடுக்கிறார்; ஆனால் அருகில் தேடியும் அந்தப் பெண் தென்படாததால், நடந்த விவரத்தைக் காவல் நிலையத்தில் புகாராகப் பதிவு செய்கிறார். மறுபுறம், கதாநாயகன் சந்தோஷ் பிரதாப் மற்றும் கதாநாயகி பூஜிதா பொன்னாடா ஆகியோரின் காதல், ஆரம்ப எதிர்ப்புகளுக்குப் பின் திருமண வாழ்வில் இணையும் கதையும் உடன் பயணிக்கிறது.
இதற்கிடையில், பணி முடிந்து வீடு திரும்பாத மகள் பவ்யா திரிகாவைக் காணாமல் தவிக்கும் தந்தை ஜெயப்பிரகாஷ், பல இடங்களில் தேடியும் பலனில்லாததால் காவல்துறையை நாடுகிறார். மாயமான பவ்யா திரிகாவுக்கும் சந்தோஷ் பிரதாப்புக்கும் இடையே என்ன தொடர்பு இருக்கிறது, பூஜிதா பொன்னாடாவுக்கும் பவ்யாவுக்கும் உள்ள உறவு என்ன, இரவு நேரச் சிக்னலில் நடந்த சம்பவத்தின் பின்னணியில் ஒளிந்திருக்கும் மர்மங்கள் என்னென்ன என்ற கேள்விகளுக்கு விடை தேடுவதே ‘சிக்னல் அட் 11.30’ படத்தின் கதைக்களமாக விரிகிறது.
நடிப்பும், கதாபாத்திரமும்
நாயகன் சித்தார்த் பாத்திரத்தில் நடித்திருக்கும் சந்தோஷ் பிரதாப், வெளிப்புற அலங்காரங்களைத் தவிர்த்துக் கதாபாத்திரத்தின் உள்ளார்ந்த மர்மத்தையும் மன ஊசலாட்டத்தையும் அளவான நடிப்பால் கடத்துகிறார். கதையின் வெவ்வேறு கட்டங்களில் அவர் காட்டும் எதார்த்தமான அணுகுமுறை பார்வையாளர்களை எளிதில் ஒன்றிவிடச் செய்கிறது. தாரா வேடத்தில் வரும் பூஜிதா பொன்னாடா அமைதியும் இயல்பும் கலந்து நடித்திருக்கிறார்; அவருடன் சந்தோஷ் பிரதாப் பகிர்ந்து கொள்ளும் காட்சிகளில் இணக்கமான பொருத்தம் தென்படுகிறது. ஹாசினி கதாபாத்திரத்தில் தோன்றும் பவ்யா திரிகா, உணர்ச்சிவசப்படும் இடங்களிலும் பாத்திரத்தின் பல முகங்களிலும் நேர்த்தியான பங்களிப்பைத் தருகிறார். மகளைக் காணாமல் தவிக்கும் தந்தையாக ஜெயப்பிரகாஷ் வெளிப்படுத்தும் துயரமும் பாசமும் கதையின் உணர்வுப் பிணைப்புக்கு வலு சேர்க்கின்றன. அவருடன் வரும் காட்சிகள் படத்திற்கு ஆழமான உணர்வுப் பின்னணியைத் தருகின்றன. இதோடு போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் ஜெயப்பிரகாஷ் மற்றும் முனிஷ்காந்த் ஆகியோரது திரை இருப்பும் கதையின் ஓட்டத்திற்குத் தேவையான அழுத்தத்தைச் சேர்த்துக் கவனிக்க வைக்கிறது
டெக்னிஷியன்ஸ்
கதையின் உணர்வுக் கோட்டிற்கு ஏற்பப் பயணிக்கிறது டி. இமானின் இசை; குறிப்பாக மர்ம முடிச்சுகள் அவிழும் தருணங்களில் அவரது பின்னணி இசை நெஞ்சில் படபடப்பைக் கூட்ட, ‘ஜோ ஜோ மா’ பாடல் அப்பா-மகள் பாசத்தின் மென்மையை இதயத்திற்குக் கடத்துகிறது. இதற்கு இணையாகக் கொடைக்கானலின் பசுமையான இயற்கை எழிலையும் நகர்ப்புறச் சூழலையும் ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜி அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார். இருள் சூழ்ந்த இரவு நேரக் காட்சிகளிலும், கதையின் மர்மப் பின்னல்களிலும் அவரது கேமரா வண்ணங்களும் கோணங்களும் படத்திற்குத் தனித்த காட்சிப் பொலிவைத் தருகின்றன. வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை நேர்கோடின்றிப் பின்னிப் பிணைத்துத் திரைக்கதையின் மர்மத்தைத் தக்கவைத்திருப்பது படத்தொகுப்பாளர் ஆர். கலைவாணனின் புத்திசாலித்தனமான உழைப்பைக் காட்டுகிறது. இறுதிக் காட்சிகளில் விறுவிறுப்பும் திருப்பங்களும் சூடுபிடித்தாலும், சில காட்சிகளின் நீளத்தை இன்னும் கொஞ்சம் செதுக்கியிருந்தாலும், கிளைமாக்ஸ் இன்னும் உணர்வுபூர்வமாகவும் அழுத்தமாகவும் முடிந்திருந்தாலும் படம் முழுமையான திருப்தியைத் தந்திருக்கும் என்ற எண்ணம் எஞ்சுகிறது
முத்தாய்ப்பு பார்வை
திரைக்கதையின் கட்டமைப்பில் தென்படும் தடுமாற்றமும், காட்சிகளுக்கு இடையே பிணைப்பு அற்றுப் போன விதமும் படத்தின் விறுவிறுப்பைத் தொடக்கத்திலிருந்தே தடம் புரளச் செய்கின்றன. மர்மமும் பரபரப்பும் இணைய வேண்டிய இடங்களில் உணர்வுகளின் ஒருங்கிணைப்பு இல்லாமல் போவதால், இந்தப் பயணத்தில் ரசிகர்களைக் கைதட்டி முன்னோக்கி நகர்த்தும் ‘பச்சை விளக்கு’ மிஸ்ஸிங்காகவே நிற்கிறது.
கதையின் உணர்வுப் பிடிப்பிலும் திரைக்கதை நேர்த்தியிலும் சறுக்கல்கள் தென்பட்டாலும், மேக்கிங் என்று வரும்போது மட்டும் சில காட்சிகளில் தென்படும் உழைப்பையும் தொழில்நுட்பப் பிரயோகத்தையும் ஓரளவு வரவேற்கலாம். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, எதிர்பார்த்த பரபரப்பையும் ஆழத்தையும் முழுமையாக எட்டத் தவறிய ஒரு தடுமாற்றமான முயற்சியாகவே இது எஞ்சுகிறது.
ரேட்டிங்: 2.25/5
