32°C
விளம்பரம்
Advertisement

பிஸ்லரி குடிநீரில் புற்றுநோய் அபாயம்… வழக்குத் தொடர எஃப்எஸ்எஸ்ஏஐ ஒப்புதல்!

admin சேலம் Published: November 23, 2026 4 நிமிட வாசிப்பு Exclusive
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice



இந்தியாவில் அடைக்கப்பட்ட குடிநீர் என்றாலே பலரும் தயங்காமல் வாங்கும் முதல் பெயர் பிஸ்லரி. அத்தகைய பிரபல நிறுவனத்தின் குடிநீர் மாதிரியில் புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய ரசாயனங்கள் கண்டறியப்பட்டிருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) பிஸ்லரி இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மீது சட்டப்படி வழக்குத் தொடர ஒப்புதல் அளித்துள்ளது.

இரு ஆய்வகங்களிலும் தோல்வியடைந்த மாதிரி

பிஸ்லரி நிறுவன வளாகத்திலிருந்து சேகரிக்கப்பட்ட குடிநீர் மாதிரியை முதலில் பரிசோதித்த ஆய்வகத்தில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான புரோமேட் (Bromate) இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006-ன் கீழ் அந்தக் குடிநீர் பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்டது.

இந்த முடிவை எதிர்த்து பிஸ்லரி நிறுவனம் மேல்முறையீடு செய்ததைத் தொடர்ந்து, அந்த மாதிரி ரெஃபரல் உணவு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கும் நடத்தப்பட்ட பரிசோதனையில், பாலிநியூக்ளியர் அரோமாடிக் ஹைட்ரோகார்பன்கள் (PAHs) இருப்பது உறுதி செய்யப்பட்டு, குடிநீர் பாதுகாப்பற்றது எனத் தீர்மானிக்கப்பட்டது. இரண்டு ஆய்வகங்களின் அறிக்கைகளும் சட்ட மீறலைச் சுட்டிக்காட்டியதால், நிறுவனம் மீது வழக்குத் தொடர எஃப்எஸ்எஸ்ஏஐ அனுமதி வழங்கியுள்ளது.

புரோமேட் மற்றும் பிஏஎச் ரசாயனங்களின் ஆபத்து

குடிநீரைச் சுத்திகரிக்கும்போது ஓசோன் வாயு இயற்கையாக உள்ள புரோமைடுடன் வினைபுரியும்போது புரோமேட் உருவாகிறது. இதன் அளவு அதிகமாகும்போது சிறுநீரக பாதிப்பு மற்றும் புற்றுநோய் அபாயம் ஏற்படலாம் எனச் சுகாதார ஆய்வுகள் எச்சரிக்கின்றன. சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் புரோமேட்டை மனிதர்களுக்குப் புற்றுநோய் உண்டாக்கக்கூடிய சாத்தியமுள்ள பொருளாக வகைப்படுத்தியுள்ளது.

அதேபோல், கரி, எண்ணெய், மரம் போன்ற கரிமப் பொருட்கள் முழுமையாக எரியாதபோது உருவாகும் பாலிநியூக்ளியர் அரோமாடிக் ஹைட்ரோகார்பன்கள் மாசுபாட்டின் அடையாளமாகும். இவற்றில் சில சேர்மங்கள் மனிதர்களுக்குப் புற்றுநோயை உண்டாக்கக்கூடியவை என அறியப்பட்டுள்ளன. இந்தியாவில் குடிநீரில் புரோமேட் அளவு லிட்டருக்கு 0.01 மில்லிகிராம் என்ற உச்ச வரம்பிற்குள் இருக்க வேண்டும் என்பது விதி.

சட்ட விதிகளும் நடைமுறை நிலையும்

உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பற்ற உணவு என்பது மிகக் கடுமையான பிரிவாகும். வழக்குத் தொடர ஒப்புதல் வழங்குவது என்பது சட்டப்பூர்வ நடவடிக்கைக்கான தொடக்கமே தவிர, நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு அல்ல.

குடிநீர் மாதிரியில் எந்த அளவு ரசாயனங்கள் கலந்திருந்தன, எந்தத் தொகுப்பு அல்லது கிளையிலிருந்து இந்த மாதிரி எடுக்கப்பட்டது என்ற முழு விவரங்களையும் எஃப்எஸ்எஸ்ஏஐ இன்னும் வெளியிடவில்லை. மேலும், நாடு முழுவதும் உள்ள அனைத்து பிஸ்லரி பாட்டில்களையும் திரும்பப் பெறுமாறு ஆணையம் உத்தரவிடவில்லை என்றாலும், இந்த விவகாரம் அடைக்கப்பட்ட குடிநீரின் தரம் மற்றும் கண்காணிப்பு குறித்துக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.

பிற நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை

பிஸ்லரி விவகாரத்துடன் சேர்த்து, உணவுப் பாதுகாப்பு விதிகளை மீறிய பிற நிறுவனங்கள் மீதும் எஃப்எஸ்எஸ்ஏஐ கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. சாக்லேட் நிரப்பப்பட்ட குக்கீகள் தயாரிக்கும் ஆஷா கன்பெக்ஷனரி நிறுவனம், அனுமதிக்கப்படாத மற்றும் அதிகப்படியான செயற்கை நிறமூட்டிகளைப் பயன்படுத்தியதற்காகத் தங்கள் தயாரிப்புகளைச் சந்தையிலிருந்து திரும்பப் பெற உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், உர்மி லைஃப்சயின்சஸ் மற்றும் கவுர் ஆயுர்வேத ஸ்டோர் ஆகியவற்றின் உரிமங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளன. வசந்த் மசாலா, டிட்-பிட் ஃபுட்ஸ், மிமன்சா இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் மீதும் வழக்குத் தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) நோட்டீஸ் அனுப்பியதாக வெளியான ஊடகச் செய்திகளுக்குப் பதிலளித்துள்ள பிஸ்லெரி நிறுவனம், தங்கள் குடிநீர் குடிப்பதற்குப் பாதுகாப்பானது எனத் திட்டவட்டமாக விளக்கமளித்துள்ளது; இந்த விவகாரம் சுமார் 14 மாதங்களுக்கு முன்பு, அதாவது செப்டம்பர் 2025-ல் கோவாவில் உள்ள பிஸ்லெரி ஆலையில் தயாரிக்கப்பட்ட ஒரு பேட்ச் குடிநீர் தொடர்பானது என நிறுவனம் தெரிவித்துள்ளது; 2025 செப்டம்பர் 30 அன்று கோவா ஆலையிலிருந்து FSSAI அதிகாரிகள் 6 குடிநீர் மாதிரிகளைச் சேகரித்தனர்; ஆரம்பக்கட்ட ஆய்வில் 5 மாதிரிகள் அனைத்துத் தர அளவுகோல்களையும் பூர்த்தி செய்த நிலையில், ஆறாவது மாதிரியில் மட்டும் அனுமதிக்கப்பட்ட அளவான லிட்டருக்கு 10 மைக்ரோகிராமுக்குப் பதிலாக 12 மைக்ரோகிராம் புரோமேட் இருந்ததாகக் கண்டறியப்பட்டது; இதையடுத்து 2025 நவம்பர் 22 அன்று பிஸ்லெரி செய்த மேல்முறையீட்டைத் தொடர்ந்து, அந்த மாதிரி மறுஆய்வுக்காகப் பரிந்துரை ஆய்வகத்திற்கு (Referral Laboratory) அனுப்பப்பட்டது; அந்த மறுஆய்வில் புரோமேட் அளவு நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்குள் இருந்ததாகக் கண்டறியப்பட்ட நிலையில், அதில் பாலிநியூக்ளியர் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்கள் (PAHs) இருப்பதாகத் தனியாகக் குறிப்பிடப்பட்டிருந்தது; இரு ஆய்வு முடிவுகளுக்கும் இடையிலான முரண்பாடு குறித்துத் தெளிவுபடுத்தும் விதமாக, FSSAI அங்கீகரித்த சுயாதீன ஆய்வகத்தில் அதே மாதிரியை பிஸ்லெரி நிறுவனம் பரிசோதித்தபோது புரோமேட் அளவு வரம்பிற்குள் இருப்பது உறுதி செய்யப்பட்டது; அந்த சுயாதீன ஆய்வு முடிவுகளை 2026 பிப்ரவரி 2 தேதியிட்ட அதிகாரப்பூர்வக் கடிதத்துடன் FSSAI-யின் மேற்கு மண்டல அலுவலகத்தில் சமர்ப்பித்ததாகவும், அதன் பிறகு FSSAI தரப்பிலிருந்து எந்தத் தகவலும் வராததால் அந்த விவகாரம் முடித்து வைக்கப்பட்டதாகத் தாங்கள் கருதியதாகவும் பிஸ்லெரி வலியுறுத்தியுள்ளது; இதுவரை மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ தங்களுக்கு எந்த நோட்டீஸும் வரவில்லை என்றும், FSSAI இணையதளத்திலும் அத்தகைய நோட்டீஸைக் காண முடியவில்லை என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது; 10 கட்ட தயாரிப்பு செயல்முறையில் 90-க்கும் மேற்பட்ட கடுமையான தரப் பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும், உரிய ஒழுங்குமுறை நடைமுறைகள் மூலம் FSSAI-க்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவோம் என்றும் தெரிவித்துள்ள பிஸ்லெரி, பல ஆண்டுகளாக நம்பிக்கைக்குரிய பிராண்டாகத் திகழும் பிஸ்லெரி குடிநீர் எப்போதும் குடிப்பதற்குப் பாதுகாப்பானது என உறுதிபடத் தெரிவித்துள்ளது.  

விழிப்புணர்வு அவசியம்

விலை உயர்ந்த அல்லது பிரபலமான வணிக முத்திரைகளைக் கொண்ட தயாரிப்புகள் என்றாலும், அவற்றின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்துக் கண்மூடித்தனமாக நம்பாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. குடிநீர் பாட்டில்களை வாங்கும் முன்பு உற்பத்தித் தேதி, காலாவதி தேதி, சீல் சரியாக உள்ளதா என்பதையும், அரசு தரச் சான்றிதழ்களையும் நுகர்வோர் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும்.

நிலவளம் ரெங்கராஜன்

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்