தமிழ் குரல் / AI Voice
ஈழப் போர் மற்றும் ஈழத் தமிழர்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு தமிழ் மற்றும் உலகத் திரைப்படத் துறையில் பல முக்கியமான படைப்புகள் வெளியாகியுள்ளன; குறிப்பாக மணிரத்தினத்தின் இயக்கத்தில் போர்க் கொடுரங்களை ஒரு குழந்தையின் கண்கள் வழியாகச் சொன்ன ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ (2002) தொடங்கி, தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் இறுதித் தருணங்களைப் பேசிய ‘புலிப்பார்வை’ (2014), பெண் பத்திரிகையாளர் இசைப்பிரியாவின் வாழ்க்கையைச் சொன்ன ‘போர்க்களத்தில் ஒரு பூ’ (2016), மற்றும் போருக்குப் பிந்தைய வவுனியா மக்களின் காணாமல் போன உறவுகள் தேடலை விவரித்த ‘சினம்கொள்’ (2020) போன்ற படங்கள் ஈழப் போரின் நேரடி வடுக்களைப் பதிவு செய்துள்ளன. மேலும், போரின் உளவியல் தாக்கத்தை நகைச்சுவையுடன் பேசிய ‘தெனாலி’ (2000), இலங்கை அமைதிப்படை காலத்து அரசியலைப் பேசிய இந்திப் படமான ‘மெட்ராஸ் கபே’ (2013), போரினால் புலம்பெயர்ந்து இந்தியாவுக்கு வந்து வாழும் தமிழர்களின் சட்டரீதியான சிக்கல்களைப் பேசிய ‘ஆண்டவன் கட்டளை’ (2016), மற்றும் ஈழப் போராளியாக இருந்து பிரான்சில் அகதியாக வாழும் ஒருவனின் கதையைச் சொல்லி மதிப்புமிக்க ‘கான்’ திரைப்பட விழாவின் பாம் டி ஓர் (Palme d’Or) விருதை வென்ற பிரெஞ்சுப் படமான ‘தீபன்’ (Dheepan – 2015) போன்ற வணிக மற்றும் கலைப் படங்களும் ஈழத் தமிழர்களின் வாழ்வியலை உலகிற்குச் கொண்டு சேர்த்துள்ளன.அந்த வரிசையில், ஈழத்து மக்களின் வாழ்வியலையும் போரின் மறுக்க முடியாத வடுக்களையும் மிக ஆழமாகப் பதிவு செய்யும் இயக்குநர் அபிலாஷ் ஜி.தேவனின் ‘தாய்நிலம்’ திரைப்படம், பார்வையாளர்களைச் சும்மா கடந்து போக விடாமல் மனதை ஊடுருவி ரணத்தை ஏற்படுத்த முயல்கிறது
கதைக்களமும் நகர்வும்
தமிழ் ஈழத்தில் இறுதி யுத்தம் உச்சத்தில் இருந்த 2008 ஆம் ஆண்டுப் பின்னணியில் கதை தொடங்குகிறது. போரின் பிடியில் தனது மனைவியை இழந்து தவிக்கும் நாயகன் அமர் ராமச்சந்திரன், நாலாபுறமும் தொடரும் உயிர் பலிகளைக் கண்டு பதைபதைக்கிறார். தனது அன்பு மகளையும் இந்த போரில் இழந்து விடுவோமோ அல்லது தான் இறந்துவிட்டால் தன் மகள் அனாதையாகி விடுவாரோ என்ற பெருந்தீராத அச்சம் அவரை வாட்டுகிறது. இதனால், தமிழகத்தில் உள்ள தன் மனைவியின் உறவினரிடம் மகளைப் பாதுகாப்பாக ஒப்படைத்துவிட்டு, நிலைமை சீரானால் மீண்டும் வந்து அழைத்துச் செல்லலாம் என்ற முடிவுக்கு வருகிறார்.
பல ஆபத்தான தடைகளைத் தாண்டி கடல் வழியாக மகளுடன் தமிழகம் வந்தடையும் அமர் ராமச்சந்திரனுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. எதிர்பார்த்தபடி உறவினர்களிடம் மகளைச் சேர்க்க முடியாத சூழலில், செய்வதறியாது சாலையோரத்தில் வாழத் தொடங்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார். அங்கிருக்கும் மனிதர்கள் செய்யும் சிறு உதவி, தன் மகளுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தையும் அச்சமற்ற வாழ்க்கையையும் அமைத்துக் கொடுத்துவிடலாம் என்ற நம்பிக்கையை அவர் மனதில் விதைக்கிறது. ஆனால், அந்த நம்பிக்கை முழுமையாகத் துளிர்விடுவதற்குள் விதி விளையாடி, அவர் எதற்காகப் பயந்தாரோ அந்தப் பேரதிர்ச்சி நிகழ்ந்துவிடுகிறது. அது என்ன என்பதை திரையில் கண்டு உணர்வதே இந்தத் படத்தின் ஆன்மாவாகும்.
ஈழத் துயரமும் குழந்தைகளின் வலியும்
ஈழப் படுகொலை மற்றும் தமிழர்கள் அனுபவிக்கும் இன்னல்கள் குறித்து இதற்கு முன்னரும் பல படைப்புகள் வந்துள்ளன. இருப்பினும், போரினால் பெற்றோர்களை இழந்து ஆதரவற்ற நிலையில் தவிக்கும் பிஞ்சுகளின் வலியை காட்சி மொழியின் மூலமாக இவ்வளவு ஆழமாகப் பேசிய படங்கள் அரிது. தமிழ் ஈழம் மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு மூலைகளில் நடக்கும் போர்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் கேள்விக்குறியான எதிர்காலத்தை கிளைமாக்ஸ் காட்சியில் பார்வையாளர்களின் நெஞ்சில் ஆழமாகப் பதிய வைக்கிறார் இயக்குநர்.
கதாபாத்திரங்களின் உயிரோட்டமான நடிப்பு
படத்தின் நாயகனாக வலம்வரும் அமர் ராமச்சந்திரன், தனது கண்களாலும் உடல்மொழியாலும் ஈழத்து மக்களின் ஒட்டுமொத்த வேதனையையும் பிரதிபலித்துள்ளார். போர்க்காலச் சூழலில் மனிதர்கள் ஒவ்வொரு நொடியும் எத்தகைய பயங்கரமான அச்சத்துடன் வாழ்ந்தார்கள் என்பதை அவரது நடிப்பு கண்முன் நிறுத்துகிறது.
மகள் தமிழனி கதாபாத்திரத்தில் நடித்துள்ள நேஹா அமர், வசனங்கள் பெரிதும் பேசவில்லை என்றாலும், சோர்ந்துபோன அவரது முகமும் பயம் நிறைந்த கண்களும் போரால் சிதைந்த குழந்தைப் பருவத்தின் அடையாளமாக ஒளிர்கின்றன.
அகதிகள் என்றாலும் அவர்கள் சக மனிதர்களே என்ற உயரிய மனிதநேயத்துடன் உதவிக்கரம் நீட்டும் பாலா சிங், தமிழகத்திற்கு நம்பிக்கையோடு வரும் இலங்கைத் தமிழர்களுக்குப் பெரிய ஆறுதலாக வந்து செல்கிறார். கடலில் தத்தளிப்பவர்களைக் காப்பாற்றும் மீனவர்கள், அகதி முகாமுக்கு அனுப்பாமல் விருப்பத்திற்கு மதிப்பளிக்கும் காவல் துறை அதிகாரி, சாலையோரத்து எளிய மனிதர்கள் மற்றும் சட்டத்தின் வரம்புகளை மீறி மனம் பார்த்து உதவும் பள்ளித் தலைமை ஆசிரியர் என அனைத்துக் கதாபாத்திரங்களும் நல்மனிதர்களின் முகங்களாகத் திகழ்கின்றன.
தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு
ஒளிப்பதிவாளர் பிரசாந்த பிரணவத்தின் எளிய ஒளிப்பதிவு, ஈழத்து மக்களின் கனத்த உணர்வுகளை எந்தவித செயற்கைத்தன்மையும் இன்றி பார்வையாளர்களிடம் கடத்துகிறது. குறிப்பாக, படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சிறுமி கண்ணீருடன் முகத்தில் பவுடர் பூசிக்கொண்டு நடக்கும் காட்சி, சொல்ல வந்த கருத்தை ஒற்றைக் காட்சியில் அழுத்தமாகச் சொல்லி கைதட்டல்களைப் பெறுகிறது.
இசையமைப்பாளர் அவுசேப்பச்சனின் இசை, கதாபாத்திரங்களின் அமைதியான வலிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறது. வார்த்தைகளால் விவரிக்க முடியாத பல காட்சிகளைத் தனது நுட்பமான இசையின் மூலம் பேச வைத்திருக்கிறார். படத்தொகுப்பாளர் டீஜோ பி.வர்க்கீஸ் காட்சிகளை நிதானமாக நகர்த்தினாலும், அதன் வழியையும் ஆழத்தையும் பார்வையாளர்கள் முழுமையாக உணரும் வகையில் கோர்த்துள்ளார்.
மொத்ததில் இயக்குநர் அபிலாஷ் ஜி.தேவனின் கைவண்ணத்தில் உருவான இத்திரைப்படம், ஈழத்து மக்களின் அழுகுரலைத் தாள முடியாத வலியுடன் காட்சிப்படுத்தியுள்ளது. சில சிறு குறைகள் இருந்தாலும், கிளைமாக்ஸ் காட்சி முழுப் படத்தின் தரத்தையும் பல மடங்கு உயர்த்தி விடுகிறது.
ரேட்டிங்: 3.5 / 5
