32°C
விளம்பரம்
Advertisement

மாணவர் போராட்டத்தால் ஸ்தம்பித்த பிரான்ஸ் கல்வித்துறை!

admin சேலம் Published: October 5, 2026 3 நிமிட வாசிப்பு Exclusive
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice



பிரான்ஸ் நாட்டில் கடந்த சில நாட்களாக உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டங்களால் கல்வித்துறை ஸ்தம்பித்துள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இந்த போராட்டம், தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் தீவிரமடைந்து வன்முறை வடிவமாக மாறியுள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக நூற்றுக்கணக்கான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

போராட்டத்திற்கான முக்கிய காரணங்கள்

பிரான்ஸ் நாட்டில் ‘லைசி’ (Lycees) என அழைக்கப்படும் உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் பதின்பருவ மாணவர்கள், தங்களது கல்விச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர். ஆசிரியர்கள் அடிக்கடி விடுப்பில் செல்வதால் வகுப்புகள் தொடர்ச்சியாக நடப்பதில்லை. மேலும், நீண்ட நேர பள்ளிக் நேரங்கள் மற்றும் போதிய பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்துள்ள பள்ளி கட்டிடங்கள் மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளன. நீண்டகாலமாக தீர்க்கப்படாத இந்த பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும் என்பதே மாணவர்களின் முதன்மைக் கோரிக்கையாக உள்ளது.

தீவிரம் அடையும் போராட்டமும் பள்ளி மூடல்களும்

செப்டம்பர் 17 ஆம் தேதி பாரிஸில் உள்ள ஒரு பள்ளியில் சிறிய அளவில் தொடங்கிய இந்த போராட்டம், கடந்த வாரம் முழுவதும் நாடு முழுவதும் பரவியது. நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு கல்வி அமைச்சர் எடூவார்ட் கெஃப்ராய் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பாதுகாப்பு காரணங்களால் அக்டோபர் 5 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று சுமார் 400 முதல் 500 பள்ளிகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மூடப்பட்டுள்ளன. குறிப்பாக தலைநகர் பாரிஸைச் சுற்றியுள்ள ஐலே-டி-பிரான்ஸ் (Ile-de-France) பிராந்தியத்தில் உள்ள பள்ளிகளில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானவை மூடப்பட்டுள்தாக அப்பிராந்தியத்தின் தலைவர் வலேரி பெக்ரெஸ் தெரிவித்துள்ளார்.

வன்முறைச் சம்பவங்களும் ஊடுருவல் புகாரும்

போராட்டங்களின் போது சில இடங்களில் மாணவர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல்கள் வெடித்துள்ளன. கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் லத்திகளைக் கொண்டு காவல்துறை நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முயன்றது. போராட்டத்தின் போது தீவிர இடதுசாரி ஆர்வலர்கள் ஊடுருவி, மாணவர்களின் போராட்ட திசையை மாற்றி வன்முறையில் ஈடுபடுவதாக அரசு தரப்பு குற்றம்சாட்டுகிறது. இதுவரை பிரான்ஸ் முழுவதும் 5,000 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை ஊழியர்கள் குறிவைத்து தாக்கப்படுவதும், 78-க்கும் மேற்பட்ட கல்வித்துறை ஊழியர்கள் காயமடைந்துள்ளதும் பிரான்ஸ் வரலாற்றில் இதுவரை கண்டிராத சோகமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

அரசின் அவசர நடவடிக்கைகளும் எதிர்காலச் சவால்களும்

மாணவர்களின் போராட்டத்ததைத் தொடர்ந்து பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கும், நீண்டகால விடுப்புப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் உள்ளூர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் பழுதடைந்த பள்ளி கட்டிடங்களைச் சீரமைப்பது குறித்து விவாதிக்க பிராந்தியத் தலைவர்களுடன் அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, இளம் மாணவர்களின் உரிமைகளை நசுக்கும் வகையில் காவல்துறை அதிகப்படியான பலப்பிரயோகம் செய்வதாக ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.

இருப்பினும், காவல்துறை மாணவர்களின் அமைதியான போராட்டங்களை அடக்கவில்லை என்றும், மாறாக வன்முறையிலிருந்து பாதுகாப்பதற்கே முன்னுரிமை அளிப்பதாகவும் உள்துறை அமைச்சர் லாரன்ட் நூனெஸ் விளக்கம் அளித்துள்ளார். அரசு உரிய உறுதியான நடவடிக்கைகளை அறிவிக்காத வரை போராட்டங்கள் தொடரும் என்று மாணவர் அமைப்புகள் அறிவித்துள்ளதால், பிரான்ஸ் கல்வித்துறையில் தொடர் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

தனுஜா

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்