செய்தியைக் கேட்க / Listen to News
இந்திய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, 2026-27 ஆம் ஆண்டிற்கான பொது மற்றும் சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வங்கித்துறையில் உயர்பதவிகளையும் நல்ல ஊதியத்தையும் எதிர்பார்க்கும் பட்டதாரிகளுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். இந்த வேலைவாய்ப்பு குறித்த முழுமையான மற்றும் விரிவான தகவல்களை கீழே காணலாம்.
பணியிடங்கள் மற்றும் எண்ணிக்கையின் விவரம்
மொத்தம் 291 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பணிப்பிரிவுகள் வாரியாக உள்ள காலிப்பணியிடங்களின் விவரம்:
மேனேஜர் – கிளை மேலாண்மை: 100 பணியிடங்கள்
மேனேஜர் – தகவல்தொழில்நுட்பம் (IT): 65 பணியிடங்கள்
மேனேஜர் – தகவல் பாதுகாப்பு (Information Security): 5 பணியிடங்கள்
மேனேஜர் – தகவல் பாதுகாப்பு தணிக்கை (IS Audit): 5 பணியிடங்கள்
மேலும் சீனியர் மேனேஜர் பிரிவில் தகவல்தொழில்நுட்பம், தகவல் பாதுகாப்பு, தணிக்கை, தரவுத்தளம் (Database), நெட்வொர்க், சைபர் செக்யூரிட்டி, கிரெடிட் மற்றும் ரிஸ்க் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும், அசிஸ்டென்ட் மேனேஜர் (செக்யூரிட்டி) பிரிவிலும் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

சம்பளம் மற்றும் பிற சலுகைகள்
தேர்ந்தெடுக்கப்படும் அதிகாரிகளுக்கு வங்கியின் விதிமுறைகளின்படி சிறப்பான ஊதியம் வழங்கப்படும். பணியின் நிலை மற்றும் தரத்திற்கு ஏற்ப மாத சம்பளம் 48,480 ரூபாய் முதல் 1,05,280 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தவிர வங்கியின் இதர படிகள் மற்றும் சலுகைகளும் கிடைக்கும்.
கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவம்
விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்ப கல்வித்தகுதிகள் மாறுபடும்.
தொடர்புடைய பாடப்பிரிவுகளில் பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக்., எம்.சி.ஏ., எம்.எஸ்சி., எம்.பி.ஏ. அல்லது சி.ஏ. முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
சிறப்பு அதிகாரி மற்றும் மேலாளர் பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறிப்பிட்ட ஆண்டுகள் முன்அனுபவம் பெற்றிருப்பது அவசியமாகும்.
வயது வரம்பு மற்றும் அனுபவம் ஆகியவை 2026 ஆகஸ்ட் 1 ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் இரண்டு முக்கிய கட்டங்கள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்:
1. ஆன்லைன் கணினி வழித்தேர்வு
2. நேர்முகத்தேர்வு
இறுதித் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கும் போது, ஆன்லைன் தேர்வில் பெறும் மதிப்பெண்களுக்கு 80 சதவீத எடையும், நேர்முகத்தேர்வில் பெறும் மதிப்பெண்களுக்கு 20 சதவீத எடையும் அளிக்கப்பட்டு இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.
விண்ணப்பக் கட்டணம்
பொதுப்பிரிவினர், ஓ.பி.சி. மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் 1,000 ரூபாய்.
எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் 175 ரூபாய்.
கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வழிமுறைகள்
1. வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.iob.bank.in சென்று careers பக்கத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
2. அதில் Recruitment of Generalist / Specialist Officers எனும் அறிவிப்பைச் சொடுக்க வேண்டும்.
3. பின்னர் Apply Online எனும் சுட்டியைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.
4. தனிப்பட்ட விவரங்கள், கல்வித்தகுதி மற்றும் அனுபவ விவரங்களைத் தவறின்றிப் பதிவு செய்ய வேண்டும்.
5. கோரப்பட்டுள்ள புகைப்படம், கையொப்பம் மற்றும் சான்றிதழ்களைச் சரியான அளவில் பதிவேற்ற வேண்டும்.
6. விண்ணப்பக் கட்டணத்தை இணைய வழியில் செலுத்தி விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
7. சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்ப படிவம் மற்றும் கட்டண ரசீதை எதிர்காலத் தேவைக்காகப் பதிவிறக்கம் செய்து அச்சிட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.
முக்கிய தேதிகள்
விண்ணப்பிக்கத் தொடங்கிய நாள்: ஆகஸ்ட் 29
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 15, 2026
வங்கித்துறையில் அதிகாரியாகப் பணியாற்றுவதற்குக் காத்திருக்கும் தகுதியுடைய நபர்கள் கடைசி நேரப் பதற்றத்தைத் தவிர்க்க, செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பித்து பயனடையலாம்.
சியாமளா
