தமிழ் குரல் / AI Voice
இன்றைய சூழலில் மிக இளம் வயதிலேயே அல்லது சிறுவர்களிடையேயே திடீரென ஏற்படும் மரணங்கள் பற்றிய செய்திகள் நம்மை உரைய வைக்கின்றன. பெரும்பாலான நேரங்களில் இத்தகைய மரணங்களை மாரடைப்பு என்று நாம் தவறாகக் குறிப்பிடுகிறோம். ஆனால், மருத்துவ அறிவியலின் படி மிக இளம் வயதில் ஏற்படுவது பொதுவாக மாரடைப்பு அல்ல. மாறாக, அது இதய செயல் முடக்கம் ஆகும். பொதுமக்களிடையே இந்த இரண்டு மருத்துவ நிலைகளைப் பற்றியும் தெளிவான விழிப்புணர்வு இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
மாரடைப்பு மற்றும் இதய முடக்கம் இரண்டிற்கும் உள்ள அடிப்படை வித்தியாசம்
மாரடைப்பு மற்றும் இதய செயல் முடக்கம் ஆகிய இரண்டும் இதயத்துடன் தொடர்புடையவை என்றாலும், அவற்றின் பின்னணியில் உள்ள அறிவியல் காரணங்கள் முற்றிலும் மாறுபட்டவை.
மாரடைப்பு (Myocardial Infarction):
மாரடைப்பு என்பது இதயத்தின் தசைகளுக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் ரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனிகளில் திடீரென ரத்த உறைவு அல்லது அடைப்பு ஏற்படுவதாகும். இந்த ரத்த நாள அடைப்பின் காரணமாக இதயத் தசைகள் பாதிப்படைந்து, இதயத்தின் இயக்கம் நின்று மரணம் சம்பவிக்கிறது. இது பொதுவாக வயது முதிர்ந்தவர்களுக்கும், தவறான வாழ்வியல் முறை கொண்டவர்களுக்கும் வரக்கூடிய ஒன்று.

இதய முடக்கம் (Cardiac Arrest):
இதய முடக்கம் அல்லது இதய செயலிழப்பில் ரத்த நாள அடைப்பு என்பது முதன்மை மரணக் காரணியாக இருப்பதில்லை. மாறாக, இதயத்தின் இயல்பான துடிப்பைக் கட்டுப்படுத்தும் மின்சார சர்க்யூட் அமைப்பில் ஏற்படும் திடீர் கோளாறுகளே இதற்கு முக்கியமான காரணமாகும். இதயத்திற்குச் செல்லும் மின் சமிக்ஞைகள் தறிகெட்டுப் போகும்போது, இதயம் இயங்குவதை திடீரென நிறுத்திவிடுகிறது.
இளம் வயதில் ஏற்படும் திடீர் மரணங்கள் (Sudden Death in Young Adults)
மிக இளம் வயதில் ரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து மாரடைப்பு ஏற்படுவது என்பது மிகவும் அரிதான நிகழ்வாகும். ஆனால், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களிடம் திடீரென ஏற்படும் மரணங்களுக்கு திடீர் இதய செயல் முடக்கம் (Sudden Cardiac Arrest) மட்டுமே முக்கியக் காரணமாக அமைகிறது.
திடீர் இதய செயல் முடக்கம் என்பது இதயத்தின் துடிக்கும் சீரான வேகத்தில் திடீரென ஏற்படும் சீர்குலைவு ஆகும். இதனால் இதயத்தால் உடல் முழுமைக்கும் தேவையான ரத்தத்தை உந்தித் தள்ள முடியாது போகிறது.
இளம் வயதில் திடீர் இதய செயலிழப்பு ஏற்படப் பின்னணியில் இருக்கும் அரிதான காரணங்கள்
ஹைபர்ட்ரோபிக் கார்டியோமையோபதி (Hypertrophic Cardiomyopathy):
இதயத்தின் துடிக்கும் அமைப்பில் சிக்கல் இருக்கும்போது, குறைந்த திறனுடன் ரத்தத்தை உந்தித் தள்ள இதயம் அதிக வேலைப்பளுவைச் சுமக்க வேண்டியதாகிறது. இதன் விளைவாக இதயத்தின் தசைகள் அளவுக்கு அதிகமாகத் தடிமனாக மாறுகின்றன. இந்நிலை ஹைபர்ட்ரோபிக் கார்டியோமையோபதி என அழைக்கப்படுகிறது.
இதயத் துடிப்புச் சீர்கேடுகள் (Cardiac Rhythm Disorders):
சிலருக்கு இதயத்தின் உள் அமைப்பில் உள்ள துடிக்கும் திறன் தறிகெட்டு இருக்கும். சராசரி அளவை விட இதயம் மிக வேகமாகத் துடிக்கும். பிறவியிலேயே ஏற்படும் கன்ஜெனிட்டல் லாங் கியூடி சிண்ட்ரோம் (Congenital Long QT Syndrome), நோய்களாலோ அல்லது சில குறிப்பிட்ட மருந்துகளாலோ ஏற்படும் அக்வயர்ட் லாங் கியூடி சிண்ட்ரோம், ப்ருகடா சிண்ட்ரோம் (Brugada Syndrome), வுல்ஃப் பார்கின்சன் வொய்ட் சிண்ட்ரோம் (Wolfe Parkinson White Syndrome) மற்றும் ஏஆர்விசி (Arrhythmogenic Right Ventricular Cardiomyopathy) போன்ற மரபணு மற்றும் நரம்பியல் சார்ந்த பாதிப்புகள் இதயத்தை திடீரென முடக்கிவிடும்.
மார்பில் ஏற்படும் பலத்த காயங்கள் (Commotio Cordis):
விளையாடும் போதோ, விபத்துகளின் போதோ அல்லது உடற்பயிற்சி செய்யும் போதோ மார்புப் பகுதியில் எதிர்பாராத விதமாக பலத்த காயம் ஏற்பட்டால் இதயம் உடனடியாக தனது இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும். இந்த மருத்துவ நிலை கொமோசியோ கார்டியாக்ஸ் எனப்படுகிறது.
பிறவிக் குறைபாடுகள் மற்றும் தீவிர ரத்த சோகை:
இதயத்தின் அறைகளில் பிறவியிலேயே இருக்கும் ஓட்டைகள், அறைகளுக்கிடையே உள்ள தேவையற்ற ரத்த நாள இணைப்புகள் மற்றும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்ட தீவிரமான ரத்த சோகை நிலையும் கூட ஒருகட்டத்தில் திடீர் இதய செயலிழப்பைத் தூண்டக்கூடும்.
நாம் விழிப்புடன் இருக்க வேண்டிய எச்சரிக்கை அறிகுறிகள்
மேலே குறிப்பிடப்பட்டுள்ள நோய்கள் மிகவும் அரிதானவை என்பதால் பெற்றோர்கள் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இருப்பினும், சில அடிப்படை அறிகுறிகளை அறிந்து வைப்பது ஆபத்துகளை முன்கூட்டியே தடுத்து உயிரைக் காக்க உதவும்.
உடற்பயிற்சி செய்யும் போதோ, ஓடும் போதோ அல்லது விளையாடும் போதோ திடீரென தலைசுற்றி கீழே விழுதல் (Syncope). இது இதயத்தின் துடிப்புச் செயல்பாட்டில் இருக்கும் கோளாறைக் குறிக்கலாம்.
காரணமின்றி ஏற்படும் அதிகப்படியான மூச்சுத்திணறல், குறிப்பாக உடற்பயிற்சியின் போது அளவுக்கு அதிகமாக மூச்சு வாங்குவது. உடல் பருமன் மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்கள் உள்ளவர்களுக்கும் மூச்சுத்திணறல் வரலாம் என்றாலும், மருத்துவ ஆய்வு மூலம் உண்மையான காரணத்தைக் கண்டறிவது அவசியம்.
குடும்பத்தில் ஏற்கனவே மிக இளம் வயதிலேயே காரணமின்றி யாரேனும் திடீர் மரணம் அடைந்திருந்தால், அந்த குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
தடுப்பு முறைகள் மற்றும் நவீன மருத்துவச் சிகிச்சைகள்
இதயம் சார்ந்த பிரச்சனைகள் ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறியப்பட்டால், ஆபத்தான நிலையை எளிதாகத் தவிர்க்க முடியும்.
பாதிப்பு உள்ளவர்கள் தீவிரமான உடற்பயிற்சிகள் செய்வததைத் தவிர்க்க வேண்டும்.
இதயத்தின் துடிப்பைச் சீராக வைத்திருக்கும் மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப்படி தவறாமல் உட்கொள்ள வேண்டும்.
இதய அறைகளில் ஓட்டை அல்லது தவறான இணைப்புகள் இருந்தால், சரியான காலத்தில் எளிய அறுவை சிகிச்சை மூலம் அவற்றைச் சரிசெய்து விடலாம்.
இதயத் துடிப்பில் சீரற்ற நிலை இருப்பவர்களுக்கு இதயத்திலேயே பொருத்தப்படும் தானியங்கி இதயத் துடிப்பு சீராக்கி (Implantable Cardioverter Defibrillator) என்ற நவீனக் கருவியைப் பொருத்தலாம். இந்தக் கருவி இதயத் துடிப்பில் மாற்றம் ஏற்படுவதைத் தானாகவே கண்டறிந்து மின்சார அதிர்வு மூலம் உடனடியாக இதயத்தைச் சீரான இயல்பு நிலைக்குக் கொண்டுவந்துவிடும்.
மொத்தத்தில் குழந்தைப் பருவத்தில் இருந்தே குழந்தைகளைத் தகுந்த குழந்தைகள் நல மருத்துவர் அல்லது குடும்ப மருத்துவரிடம் அழைத்துச் சென்று வழக்கமான பரிசோதனைகளைச் செய்து வரும் பழக்கம் இருந்தால், இதுபோன்ற அரிதான இதயப் பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து விட முடியும். அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் இதய நோய் சிறப்பு நிபுணர்களிடம் ஆலோசித்து முறையான சிகிச்சை பெறுவது இளம் வயது திடீர் மரணங்களை முற்றிலுமாகத் தடுக்கும்.
