செய்தியைக் கேட்க / Listen to News
வேகமாக இயங்கும் நுகர்பொருள் (FMCG) துறையில் இந்தியக் குடும்பங்களின் அசைக்க முடியாத நம்பிக்கையைப் பெற்று, வீடுகளுக்குள் பயன்படுத்தப்படும் நுகர்பொருட்கள் பிரிவில் பார்லே (Parle Products) நிறுவனம் தொடர்ந்து 14 ஆவது ஆண்டாக முதலிடத்தைத் த தக்கவைத்துக் கொண்டுள்ளது. அதே வேளையில், வீடுகளுக்கு வெளியே வாங்கிப் பயன்படுத்தப்படும் நொறுக்குத் தீனி (Out-of-Home) பிரிவில் பிரிட்டானியா (Britannia) நிறுவனம் தனது முதலிடத்தைத் தொடர்ந்து தக்கவைத்துச் சாதனை படைத்துள்ளது. சர்வதேச ஆய்வு நிறுவனமான ‘வேர்ல்ட்பேனல் பை நியூமரேட்டர்’ (Worldpanel by Numerator) வெளியிட்டுள்ள 2026 ஆம் ஆண்டிற்கான ‘பிராண்ட் ஃபுட்பிரின்ட்’ (Brand Footprint India 2026) அறிக்கையில் இந்த சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
நுகர்வோர் புள்ளிகளும் பிராண்டுகளின் வளர்ச்சியும்
ஒரு பிராண்டை எத்தனை குடும்பங்கள் வாங்குகின்றன மற்றும் ஒரு ஆண்டில் அதனை எத்தனை முறை மீண்டும் மீண்டும் வாங்குகின்றன என்பதை இணைத்துக் கணக்கிடப்படும் ‘நுகர்வோர் சென்றடைவு புள்ளிகள்’ (Consumer Reach Points – CRP) அடிப்படையில் இந்தத் தரவரிசை தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் 2025 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த நுகர்பொருள் தேர்வு 5.1 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் மொத்த CRP புள்ளிகள் 123 பில்லியனிலிருந்து 129 பில்லியனாக உயர்ந்துள்ளது. உணவு மற்றும் பால் பொருட்கள் பிரிவுகள் சற்று நிதானமான வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தாலும், பானங்கள் பிரிவு 8.6 சதவீதத்துடன் அதிவேக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

வீட்டுப் பயன்பாட்டுப் பிரிவில் பார்லே நிறுவனத்தின் ஆதிக்கம்
வீட்டுப் பயன்பாட்டு (In-Home) நுகர்பொருட்கள் பிரிவில் பார்லே நிறுவனம் 8,515 மில்லியன் CRP புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. இந்தியக் குடும்பங்கள் பார்லே தயாரிப்புகளை ஒரே ஆண்டில் சுமார் 8.5 பில்லியன் முறை தேர்வு செய்துள்ளன. அதாவது, ஒரு நாளைக்கு 2.3 கோடி முறையும், ஒவ்வொரு வினாடிக்கும் 250 முறைகளுக்கும் மேலாகப் பார்லே தயாரிப்புகள் நுகர்வோரால் வாங்கப்படுகின்றன.
இந்தப் பட்டியலில் பிரிட்டானியா நிறுவனம் 8,296 மில்லியன் புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், அமுல் (Amul) நிறுவனம் 6,922 மில்லியன் புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. கிளினிக் பிளஸ் (Clinic Plus) நான்காவது இடத்தையும், சர்ஃப் எக்செல் (Surf Excel) ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன. டாடா கன்சியூமர் புரோடக்ட்ஸ் ஆறாவது இடத்திலும், கர்நாடகாவின் முன்னணி பால் பிராண்டான நந்தினி ஏழாவது இடத்திலும் உள்ளன. பாலாஜி வேஃபர்ஸ் (Balaji Wafers) நிறுவனம் முதல்முறையாக முதல் 10 இடங்களுக்குள் நுழைந்து 9 ஆவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.
வெளிப்புறப் பயன்பாட்டில் பிரிட்டானியாவின் முன்னணி நிலை
வீடுகளுக்கு வெளியே வாங்கி உட்கொள்ளப்படும் (Out-of-Home) நுகர்பொருட்கள் பிரிவில் பிரிட்டானியா நிறுவனம் 619 மில்லியன் CRP புள்ளிகளுடன் தனது முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. பாலாஜி 499 மில்லியன் புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், ஹல்தீராம்ஸ் 476 மில்லியன் புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும், கேட்பரி 450 மில்லியன் புள்ளிகளுடன் நான்காம் இடத்திலும் உள்ளன.
அமுல் நிறுவனம் முதன்முறையாக இந்த அவுட்-ஆஃப்-ஹோம் பிரிவின் முதல் ஐந்து இடங்களுக்குள் நுழைந்து ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளது. லேஸ், பார்லே, குர்குரே, பிங்கோ மற்றும் சன்ஃபீஸ்ட் ஆகிய பிராண்டுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. வெளியூர் பயணங்கள் மற்றும் நொறுக்குத் தீனிப் பழக்கத்தில் தின்பண்ட பிராண்டுகளின் ஆதிக்கமே அதிகமாக இருப்பதை இது காட்டுகிறது.
சிறு பிராண்டுகளுக்கு ஏற்படும் சவால்கள்
பெரிய மற்றும் நடுத்தர அளவிலான பிராண்டுகள் சந்தையில் தங்களின் பிடியை மேலும் வலுப்படுத்தி வரும் வேளையில், சிறிய பிராண்டுகளுக்குச் சவால்கள் அதிகரித்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது. சந்தையில் 30 சதவீதத்திற்கும் அதிகமான ஊடுருவல் கொண்ட பெரிய பிராண்டுகளில் 83 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளன. ஆனால், 10 சதவீதத்திற்கும் குறைவான ஊடுருவல் கொண்ட சிறிய பிராண்டுகளில் 56 சதவீதம் மட்டுமே வளர்ச்சியைக் கண்டுள்ளன. நுகர்வோரின் கவனத்தை ஈர்ப்பது எளிதாக இருந்தாலும், அவர்களை மீண்டும் மீண்டும் வாங்க வைப்பது சிறிய பிராண்டுகளுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.
பிராந்திய பிராண்டுகளும் நுகர்வோர் தேவையும்
நந்தினி, ஆவின், மில்மா மற்றும் விஜயா போன்ற பிராந்திய பால் பிராண்டுகள் ஒட்டுமொத்தப் பரவலில் குறைவாக இருந்தாலும், நுகர்வோர் தினமும் அல்லது அடிக்கடி வாங்கும் பழக்கம் காரணமாக அதிக CRP புள்ளிகளைப் பெற்று வருகின்றன. உதாரணமாக, ஒரு நுகர்வோர் ஆண்டிற்கு சராசரியாக மில்மா பாலை 219 முறையும், ஆவின் பாலை 164 முறையும் வாங்குகின்றனர்.
அதேபோல, ரின் (Rin) சோப் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் முதல் 25 இடங்களுக்குள் நுழைந்துள்ளது. கேம்பா (Campa) பானம் நுகர்வோர் பரவலில் வேகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. தரமான பொருட்கள், பரவலான விநியோகக் கட்டமைப்பு மற்றும் எளிதில் அணுகக்கூடிய விலை ஆகியவையே பார்லே போன்ற நிறுவனங்களை பல தலைமுறைகளாக இந்தியர்களின் மனதில் முதன்மை பிராண்டாக நிலைநிறுத்தியுள்ளன.
ரமாபிரபா
