சென்னைக்கு ‘ரெட் அலர்ட்’: 40.5 டிகிரி வெயிலும், தப்பிக்க முடியாத பெருவெள்ளமும்!

சென்னைக்கு ‘ரெட் அலர்ட்’: 40.5 டிகிரி வெயிலும், தப்பிக்க முடியாத பெருவெள்ளமும்!

ந்தியாவின் கிழக்குக் கடற்கரை நகரமான சென்னை, வருங்காலத்தில் கடுமையான வெப்ப அலைகள், வரலாறு காணாத அதிதீவிர மழைப்பொழிவு மற்றும் தொடர் வெள்ள அபாயங்களை எதிர்கொள்ளும் பேராபத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் கடற்கரை நெடுகிலும் உடனடியாகவும், தீவிரமாகவும் எழப்போகும் பருவநிலை அச்சுறுத்தல்கள் குறித்து புதிய பருவநிலை முன்னறிவிப்பு அறிக்கை ஒன்று மிகக் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. “இந்தியக் கடற்கரைப் பகுதி: பருவநிலை முன்னறிவிப்புகள் 2021-2040” (Indian Coastal Region: Climate Projections 2021-2040) என்ற தலைப்பில் அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த விரிவான அறிக்கை, சென்னைவாசிகள் மற்றும் நகரத் திட்டமிடலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

40 டிகிரியைத் தாண்டும் கோடை: சுட்டெரிக்கப் போகும் புதிய சென்னை

கடந்த சில தசாப்தங்களாகவே சென்னையின் கோடைகாலம் சவாலானதாக இருந்து வரும் நிலையில், அடுத்த 15 ஆண்டுகளில் சென்னையின் ஒட்டுமொத்த வெப்பநிலையில் மிக மோசமான உயர்வு இருக்கும் என்று இந்த அறிக்கை எச்சரிக்கிறது. மிதமான உமிழ்வு சூழலின் கீழ் (moderate-emissions scenario), 1960-களின் அடிப்படைத் தரவுகளோடு ஒப்பிட்டு மாவட்ட வாரியாக நடத்தப்பட்ட அதிநவீன ஆய்வுகளின்படி, சென்னையின் கோடைகால அதிகபட்ச வெப்பநிலை 40.5 டிகிரி செல்சியஸைத் தொடக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இதைவிட அச்சமூட்டும் விஷயம் என்னவென்றால், ஒரு ஆண்டில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டும் நாட்களின் எண்ணிக்கை, ஆண்டுக்குச் சராசரியாக 9.1 நாட்களாக அதிகரிக்கப் போகிறது. மேலும், சென்னையின் வருடாந்திர சராசரி வெப்பநிலை 29.1 டிகிரி செல்சியஸை எட்டும் என்றும், தினசரி சராசரி அதிகபட்ச வெப்பநிலை 33.7 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்றும் இந்தத் தரவுகள் தெளிவாகக் காட்டுகின்றன.

‘ஹீட் ஸ்ட்ரெஸ்’ (Heat Stress): சென்னையின் புதிய பெரும் சவால்

பருவநிலை மாற்றத்தால் சென்னை எதிர்கொள்ளவிருக்கும் மிக முக்கியமான மற்றும் அவசரமான சவால்களில் ஒன்றாக இந்த ‘வெப்ப அழுத்தம்’ (Heat Stress) அடையாளம் காணப்பட்டுள்ளது. மனித உடலால் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு வளிமண்டல வெப்பமும் ஈரப்பதமும் இணைவதே இந்த நிலை ஏற்படும்ற்குக் காரணமாகும். இது பொதுமக்களின் ஆரோக்கியம், உழைப்புத் திறன் மற்றும் வாழ்வாதாரத்தை நேரடியாகப் பாதிக்கக்கூடியது.

பருவநிலை மாற்றம் என்பது எப்போதோ, யாருக்கோ வரப்போகும் தூரத்து ஆபத்து அல்ல; அது நம் சமகாலத்தின் மாபெரும் சவால் என்பதை இந்த ஆய்வின் முடிவுகள் அப்பட்டமாக உணர்த்துகின்றன. இதுகுறித்து அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் பருவநிலை மாற்ற நிலைத்தன்மைப் பள்ளியைச் சேர்ந்த பேராசிரியர் சந்தோனு கோஸ்வாமி (Prof Santonu Goswami) குறிப்பிடுகையில், “பருவநிலை மாற்றம் என்பது ஏதோ தொலைதூர எதிர்கால சவாலல்ல, அது இன்றைய நிஜம். 2040-ம் ஆண்டு என்பது இங்கிருந்து வெறும் 14 ஆண்டுகள் மட்டுமே தள்ளியிருக்கிறது” என்று எச்சரித்துள்ளார்.

தீவிர மழைப்பொழிவும் தப்பிக்க முடியாத வெள்ள அபாயமும்

வெப்பநிலை உயர்வது ஒருபுறமிருக்க, மற்றொரு புறம் சென்னை எதிர்கொள்ளவிருக்கும் மழைப்பொழிவின் தன்மையிலும் ஆபத்தான மாற்றங்கள் நிகழவுள்ளன. சீரான இடைவெளியில் பெய்யும் மழை குறைந்து, குறுகிய காலத்தில் கொட்டித் தீர்க்கும் அதிதீவிர மழைப்பொழிவு (Intense rainfall) அதிகரிக்கும் என அறிக்கை கூறுகிறது.

நகரமயமாக்கல் மற்றும் நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளால் ஏற்கனவே வெள்ள பாதிப்புக்குள்ளாகும் சென்னை, இந்த திடீர் பெருமழை காரணமாக முன்னெப்போதும் இல்லாத அளவிலான பெரும் வெள்ள அபாயங்களை (Heightened flood risks) சந்திக்க நேரிடும். வறட்சியும் வெள்ளமும் மாறி மாறித் தாக்கும் ஒரு விசித்திரமான, அதே சமயம் ஆபத்தான சுழற்சிக்குள் சென்னை சிக்கிக் கொள்ளும் சூழல் உருவாகி வருகிறது.

25 கி.மீ அளவிலான துல்லிய ஆய்வு: உடனடியாகத் தேவைப்படும் தகவமைப்பு நடவடிக்கைகள்

தற்போது வெளியாகும் செய்தித் தரவுகளின்படி, இந்த ஆய்வானது மிக மிகத் துல்லியமான முறையில் 25 கி.மீ-க்கு 25 கி.மீ (25 km by 25 km scale) என்ற உயர்-தெளிவுத்திறன் கொண்ட பருவநிலைத் தரவுகளைப் (high-resolution climate data) பயன்படுத்தி மாவட்ட வாரியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, இதில் கூறப்பட்டுள்ள எச்சரிக்கைகளை வெறும் கணிப்பாகக் கடந்துவிட முடியாது.

கடற்கரை நகரமான சென்னையைப் பாதுகாக்க, இப்போதிருந்தே அவசரக்காலத் தகவமைப்பு நடவடிக்கைகளை (Urgent adaptation measures) எடுத்தாக வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர். கட்டிடக் கலைகளில் மாற்றம், மரங்களை நடுதல், நீர்நிலைகளை மீட்டெடுத்தல் மற்றும் தீவிர மழைநீரைத் தாங்கக்கூடிய வடிகால் அமைப்புகளை உருவாக்குதல் போன்ற தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்துவது மட்டுமே வருங்காலச் சென்னையை இந்த இயற்கைச் சீற்றங்களிலிருந்து ஓரளவேனும் மீட்டெடுக்கும் ஒரே வழியாகும்.

நிலவளம் ரெங்கராஜன்

Related Posts