ஆபீஸ் கேண்டீன் சாப்பாடு: ‘சைலண்ட் கில்லர்’ ஆனதா? தொழில்முனைவோரின் எச்சரிக்கை!

ஆபீஸ் கேண்டீன் சாப்பாடு: ‘சைலண்ட் கில்லர்’ ஆனதா? தொழில்முனைவோரின் எச்சரிக்கை!

சாலையோரக் கடைகளில் விற்கப்படும் உணவுகளை சுகாதாரமற்றவை என்று நாம் ஒதுக்குகிறோம். ஆனால், கார்ப்பரேட் அலுவலகங்களின் ஏசி அறைகளுக்குள் பளபளப்பான தட்டுகளில் பரிமாறப்படும் உணவுகள் அதைவிட ஆபத்தானவை என்ற புதிய விவாதம் கிளம்பியுள்ளது. கார்ப்பரேட் கேண்டீன் உணவுகள் ஊழியர்களுக்கு சர்க்கரை நோய் (Diabetes) மற்றும் கல்லீரல் பாதிப்புகளை (Fatty Liver) அமைதியாக உருவாக்கி வருவதாக தொழில்முனைவோர் டாக்டர் யஷ்வந்த் குமார் எச்சரித்துள்ளார்.

தூய்மை வேறு… சத்து வேறு!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் டாக்டர் யஷ்வந்த் குமாரின் பதிவில், நாம் செய்யும் ஒரு அடிப்படைத் தவறைச் சுட்டிக்காட்டியுள்ளார். தெருவோரப் பானிபூரி கடைகளில் சுகாதாரம் குறைவாக இருக்கலாம், அது அதிகபட்சம் ஒரு நாள் வயிற்று உபாதையைத் தரலாம். ஆனால், சுத்தமாகத் தோற்றமளிக்கும் அலுவலகக் கேண்டீன்களில் தினமும் பரிமாறப்படும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட், அதிக எண்ணெய் மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்கள் நீண்ட கால நோய்களுக்கு அடித்தளமிடுகின்றன.

அலுவலக மதிய உணவில் ஒளிந்துள்ள ஆபத்து

ஒரு சராசரி கார்ப்பரேட் ஊழியரின் மதிய உணவு பெரும்பாலும் இப்படித்தான் இருக்கிறது:

  • நார்ச்சத்தே இல்லாத பாலிஷ் செய்யப்பட்ட வெள்ளை அரிசி.

  • அதிகமாக வேகவைக்கப்பட்ட சத்து குறைந்த பருப்பு.

  • அதிக எண்ணெய்யில் வதக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பொரித்த தின்பண்டங்கள்.

இதை ஊழியர்கள் தங்கள் மேஜையிலேயே அமர்ந்து, வேலையைத் தொடர்ந்துகொண்டே மிக வேகமாகச் சாப்பிடுகின்றனர். பல ஆண்டுகள் தொடரும் இந்த உணவுப் பழக்கம், இரத்த அழுத்தம் (Hypertension) மற்றும் டைப்-2 நீரிழிவு நோய்க்கு நேரடி அழைப்பிதழாக மாறுகிறது.

வெல்னஸ் புரோகிராம்களின் முரண்பாடு

நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் ஆரோக்கியத்திற்காக லட்சக்கணக்கில் செலவு செய்கின்றன. இன்சூரன்ஸ் பாலிசிகள், தியான வகுப்புகள், ஃபிட்னஸ் ஆப்ஸ் எனப் பலவற்றை வழங்கினாலும், ஊழியர்கள் தினமும் மூன்று வேளை உண்ணும் உணவின் தரத்தை அவை கவனிப்பதில்லை.

“ஊழியர்களுக்குத் தீங்கிழைக்கும் உணவை வழங்கிவிட்டு, அவர்கள் நோய்வாய்ப்பட்ட பிறகு குணப்படுத்தச் செலவு செய்வதில் என்ன பயன்?” என யஷ்வந்த் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

தீர்வு என்ன?

அலுவலக உணவு கலாச்சாரத்தை மாற்ற நிறுவனங்களுக்கு அவர் சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளார்:

  1. சத்தான மதிய உணவு: கேண்டீன்களில் ஒரு வேளையாவது சத்தான மற்றும் மலிவான உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

  2. அடையாளத்துக்காக அல்ல: ஆரோக்கியமான உணவு என்பது வெறும் பெயரளவு சாலட் (Salad) ஆக மட்டும் இருக்கக்கூடாது; அது வயிறு நிறையக்கூடிய, அதே சமயம் உடலுக்குக் கேடு தராத முழுமையான உணவாக இருக்க வேண்டும்.

  3. விழிப்புணர்வு: பணியிடத்தில் உணவு உண்பதற்கான நேரத்தையும் முறையையும் முறைப்படுத்த வேண்டும்.

இந்த விவாதம் தற்போது ஐடி மற்றும் கார்ப்பரேட் ஊழியர்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பல ஊழியர்கள் தங்கள் அலுவலகக் கேண்டீன்களில் வழங்கப்படும் தரமற்ற உணவுகள் குறித்தும், அதனால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள உடல்நல பாதிப்புகள் குறித்தும் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

Related Posts