திரை விமர்சனம்: பேட்டில் (Battle) – கல்வியா? கல்லாவா?
அறிவை ஆயுதமாக்கி அறியாமையை அகற்ற வேண்டிய கல்விக்கூடங்கள், இன்று ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தின் கனவுகளை ஏலமிடும் கார்ப்பரேட் கூடாரங்களாக உருமாறிவிட்டன. ‘அனைவருக்கும் கல்வி’ என்கிற அறச்சீற்றம் மறைந்து, ‘பணம் இருப்பவனுக்கே தரமான கல்வி’ என்கிற பாகுபாடு சமூகத்தின் ஆணிவேரை அரித்துக்கொண்டிருக்கிறது. ஒரு குழந்தையின் எதிர்காலம் அவனது புத்திசாலித்தனத்தால் தீர்மானிக்கப்படுவதை விட, அவனது பெற்றோர் செலுத்தும் கல்விக் கட்டணத்தின் ரசீதுகளாலேயே இன்று தீர்மானிக்கப்படுகிறது. குரு-சீடர் உறவு என்பது மறைந்து, அங்கு வாடிக்கையாளர்-வணிகர் என்ற நுகர்வோர் கலாச்சாரம் குடியேறிவிட்டது. கல்வி என்பது ஒரு விற்பனைப் பண்டமாகிவிட்ட இந்தச் சூழலில், சமூக நீதி என்பது வெறும் ஏட்டளவிலான சொல்லாக மட்டுமே எஞ்சியிருப்பது காலத்தின் பெரும் அவலம். அந்த வகையில், இன்றைய கல்விச் சந்தையில் கல்லா கட்டுவதையே குறியாகக் கொண்டு இயங்கும் சில தனியார் பள்ளிகளால் மாணவர்களின் எதிர்காலம் எப்படிச் சீரழிகிறது என்பதையும், அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் எப்படித் தற்காலக் கொத்தடிமைகளாக நடத்தப்படுகிறார்கள் என்பதையும் தோலுரிக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் நாராயணன்.பி.ஏ. எடுத்துக்கொண்ட களம் பாராட்டுக்குரியது என்றாலும், அதை ஒரு சுவாரஸ்யம் மிக்க சினிமாவாகக் கொடுப்பதில் ‘பேட்டில்’ கோட்டை விட்டுவிட்டது.
கதைச் சுருக்கம்:
ராப் பாடகராகச் சாதிக்கத் துடிக்கும் நாயகன் அர்ஜுன் பிரபாகரனும், தனியார் பள்ளி ஆசிரியையான நாயகி ஆராத்யாவும் காதலர்கள். அர்ஜுன் தனது லட்சியத்தில் வென்று பெரிய ராப் பாடகராக உருவெடுக்க, அவருக்குப் புகழும் வெளிநாட்டு இசை நிகழ்ச்சி வாய்ப்புகளும் குவிகின்றன. மறுபக்கம், ஆராத்யா பணிபுரியும் பள்ளியில் நடக்கும் பெரும் மோசடியால் மாணவி ஒருத்தி தற்கொலை செய்துகொள்கிறாள்.
பள்ளி நிர்வாகத்தின் இந்த அராஜகத்தை நாயகனின் ‘ராப்’ இசை மூலம் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்ட ஆராத்யா விரும்புகிறார். ஆனால், இசை நிறுவனத்தின் மிரட்டல் ஒருபுறம், தனியார் பள்ளித் தலைவரான சுப்பிரமணிய சிவாவின் கொலை முயற்சி மறுபுறம் எனப் பிரச்சனைகள் சூழ்ந்து கொள்கின்றன. இந்த ‘பேட்டில்’ (போர்)-இல் காதலர்கள் வென்றார்களா? இல்லையா? என்பதே பேட்டில்.
நடிப்பு மற்றும் தொழில்நுட்பம்:
-
நாயகன் – நாயகி: அறிமுக நடிகர் அர்ஜுன் பிரபாகரன் கதாபாத்திரத்திற்குப் பொருந்தினாலும், நடிப்பில் இன்னும் மெருகேற வேண்டும். ராப் பாடல்களில் தேவையான அந்த ‘துடிப்பு’ மிஸ்ஸிங். நாயகி ஆராத்யா, அழகிலும் அளவான நடிப்பிலும் ஸ்கோர் செய்கிறார்.
-
பிற நட்சத்திரங்கள்: வில்லத்தனம் காட்டும் சுப்பிரமணிய சிவா, காவல்துறை அதிகாரியாக வரும் சரவண சுப்பையா, அரசியல்வாதியாக முனிஷ்காந்த் மற்றும் சுருளி, காயத்ரி ஆகியோர் தங்களுக்குக் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.
-
ஒளிப்பதிவு: பட்ஜெட் நெருக்கடியிலும் நேரடி லொகேஷன்களில் காட்சிகளை இயல்பாகப் படமாக்கிய யுவராஜ்.ஆர் பாராட்டுக்குரியவர்.
-
இசை: கதையின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய இசை, பெரிய பலவீனம். ஜீவாவின் இசையில் ராப் பாடல்கள் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
பிளஸ் & மைனஸ்:
பலம்: * பள்ளிகளில் நிலவும் போதைப்பொருள் கலாச்சாரம் மற்றும் ஆசிரியர்களின் பணிச்சுமை குறித்த அக்கறையான பதிவு.
பலவீனம்:
-
விறுவிறுப்பு இல்லாத திரைக்கதை.
-
இசையை மையமாகக் கொண்ட படத்தில் இசையே ஈர்க்காமல் போனது.
ஆந்தை தீர்ப்பு:
தேவையான கதையைத் தேர்ந்தெடுத்த இயக்குநர், அதைச் செதுக்குவதில் (Making) இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். நல்ல நோக்கம், ஆனால் பலவீனமான ஆக்கம்!
மார்க்: 2.25 / 5


