மனதின் ஓசை முதல் ஆடம்ஸ் ஆப்பிள் வரை-உலக குரல் தினம் 2026 சிறப்புப் பார்வை!
“குரல்” என்பது வெறும் ஒலி அலைகளின் தொகுப்பு மட்டுமல்ல; அது ஒரு மனிதனின் ஆளுமைத் தளம். பொதுவாக மனதின் ஓசைதான் மனிதக் குரலாக வெளிப்படுகிறது என்றாலும், இந்தக் குரல் உருவாகும் உடலியங்கியல் (Physiology) மிகவும் சிக்கலானது. தொட்டிலில் வெறும் அழுகையாய் அரும்பும் மழலையின் குரல், காலப்போக்கில் மெல்லிய சிரிப்பொலியாக மலர்கிறது. ‘அம்மா’ எனும் முதல் சொல்லில் தொடங்கி, பின் சிறு சிறு சொற்களாக கிளைவிட்டு, கேட்டதைத் திரும்பச் சொல்லும் மழலை மொழியில் முகிழ்த்தது. முடிவில், வளர்ச்சியின் பாதையில் அறிவார்ந்த சிந்தனைகளைச் சொற்களாகச் செதுக்கிப் பேசும் முதிர்ந்த நிலையை எட்டுகிறது. குழந்தையின் உடல் வளர்வதைப் போலவே, அவர்தம் குரலும் மொழியும் ஒரு உன்னதப் பரிணாம வளர்ச்சியை அடைகின்றன.இதனைச் சகலருக்கும் நினைவூட்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 16 அன்று உலக குரல் தினம் கொண்டாடப்படுகிறது.
2026-ஆம் ஆண்டிற்கான கருப்பொருள்: “Caring for Our Voices!” (நமது குரல்களைப் பராமரிப்போம்!). இந்த நாளில், குரல் உருவாவதன் பின்னணியில் உள்ள அறிவியல் மற்றும் அதில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து விரிவாகக் காண்போம்.

குரல் எனும் கூட்டு முயற்சி: அது எப்படி உருவாகிறது?
உண்மையில் மனித உடலில் ‘குரல்’ என்று பிரத்யேகமாக ஒரு தனி உறுப்பு கிடையாது. வாய், மூக்கு, தொண்டை, நுரையீரல் மற்றும் வயிற்றுத் தசைகள் எனப் பல உறுப்புகளின் ஒருங்கிணைந்த செயல்பாடே குரல்.
இதன் பின்னணியில் உள்ள அறிவியல் செயல்முறை இதுதான்:
-
ஆரம்பப்புள்ளி: நுரையீரலில் இருந்து வெளியேறும் காற்றுதான் குரலின் எரிபொருள்.
-
அதிர்வு: இந்தக் காற்று குரல்வளை (Larynx) வழியே செல்லும்போது அங்கிருக்கும் ‘குரல் நாண்களில்’ (Vocal Cords) அதிர்வுகளை ஏற்படுத்துகிறது.
-
உருமாற்றம்: இந்த அதிர்வுகள் தொண்டை மற்றும் மூக்குப் பகுதிகளில் எதிரொலித்து, இறுதியாக மேல் அன்னம், நாக்கு, பற்கள் மற்றும் உதடுகளின் அசைவுகளால் செதுக்கப்பட்டு ஒரு முழுமையான சொல்லாக அல்லது குரலாக உருப்பெறுகிறது.
பருவகால மாற்றமும் ‘ஆடம்ஸ் ஆப்பிள்’ ரகசியமும்
பிறக்கும்போது ஆண், பெண் இருபாலருக்கும் குரல்வளை கிட்டத்தட்ட ஒரே அளவில்தான் இருக்கும். குறிப்பாக 12-13 வயது வரை இருவரது குரலிலும் பெரிய வேறுபாடுகள் தெரிவதில்லை. ஆனால், 13 வயதைக் கடக்கும்போது ஒரு வியக்கத்தக்க மாற்றம் நிகழ்கிறது:
-
ஆண்களுக்கு: ஆண் ஹார்மோன்களின் ஆதிக்கத்தால், குரல் நாண்கள் நீளமடைந்து விரிவடைகின்றன. இதன் விளைவாகத் தொண்டையில் ‘ஆடம்ஸ் ஆப்பிள்’ (Adam’s Apple) துருத்திக்கொண்டு வெளியே தெரிவதுடன், குரல் உடையத் தொடங்கி பின் வலுப்பெறுகிறது. இதனால் தான் ஆண்களுக்கு ஆழமான, கணீரென்ற குரல் கிடைக்கிறது.
-
பெண்களுக்கு: பெண்களுக்கு இந்தக் குரல் நாண்கள் பெருமளவு விரிவடைய முயற்சிப்பதில்லை. அதனால்தான் எஸ்.ஜானகி போன்ற பாடகிகள் 30 ஆண்டுகளுக்குப் பிறகும் அதே மென்மையான குரலில் ‘காற்றில் எந்தன் கீதம்’ எனப் பாடி நம்மைக் கட்டிப்போட முடிகிறது.
பியூபர்போனியா (Puberphonia): ஒரு மருத்துவப் பார்வை
ஆண், 17-18 வயதை எட்டிய பிறகும் சிறுவர்களைப் போன்றோ அல்லது பெண்மை கலந்த மெல்லிய குரலிலோ பேசினால், அதை நவீன மருத்துவம் ‘பியூபர்போனியா’ என்கிறது. இது ஒரு குறைபாடல்ல, சரிசெய்யக்கூடிய ஒரு கோளாறு மட்டுமே. குரல் நாண்களைச் சீரமைக்கும் சிறிய அறுவை சிகிச்சை மற்றும் சுமார் மூன்று மாத கால முறையான ‘ஸ்பீச் தெரபி’ (Speech Therapy) மூலம் இதைக் களைந்து இயல்பான ஆண் குரலைப் பெற முடியும்.
குரலைப் பராமரிக்கும் வழிகள் (Tips for Vocal Care)
2026 தீம் வலியுறுத்துவது போல, குரலை மூலதனமாகக் கொண்டவர்கள் அதைப் பேணுவது அவசியம்:
-
தண்ணீர் எனும் மருந்து: குரல் நாண்கள் உலர்ந்து போகாமல் இருக்கப் போதிய நீர்ச்சத்து அவசியம்.
-
அழுத்தத்தைத் தவிர்க்கவும்: குரல் நாண்களைப் பாதிக்கும் வகையில் கத்திப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.
-
புகை தவிர்த்தல்: இது நேரடியாகக் குரல்வளையைச் சிதைக்கும் காரணியாகும்.
-
ஓய்வு: தொடர்ந்து குரலைப் பயன்படுத்துபவர்கள் (பேச்சாளர்கள், ஆசிரியர்கள்) அவ்வப்போது குரலுக்கு ‘வொய்ட் ரெஸ்ட்’ (Voice Rest) அளிக்க வேண்டும்.
முடிவாக…
வெகு எளிதில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய உன்னதமான உறுப்பு நமது குரல். இன்று (ஏப்ரல் 16) உலகெங்கும் இதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. உங்கள் குரலில் தொடர்ந்து 2 வாரங்களுக்கு மேல் மாற்றம் தெரிந்தால் அது சாதாரணக் கரகரப்பு என அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகுவது அவசியம். நமது தனித்துவ அடையாளமான குரலைப் போற்றிப் பாதுகாப்போம்!


