“விஜய்யை ஒரு ஆளாக்காதீங்க!-தமிழகத் தலைவர்களுக்கு மோடி காட்டிய ‘சைலண்ட்’ வழி!”
தமிழக அரசியலில் இப்போது ஒரு ‘கனவு நாயகன்’ அவதரித்துள்ளார். வாடகைக்கு ஒரு மண்டபத்தை எடுத்து, அதில் திரண்டிருந்த ஓரிரு ஆயிரம் பேர் முன்னிலையில், “ஊழல்… நானா?” என்று ஆவேசக் குரலில் அவர் கேட்டதைக் கண்டு விசிலடித்த கூட்டத்தை வைத்துக்கொண்டு, கோட்டைக்குக் குதிரை ஏறலாம் என்று கணக்குப்போடும் அந்த ‘ஜோசப் விஜய்’ என்பவரைப் பற்றித்தான் பேச்செல்லாம். இந்த ‘ஆரவார அரசியலை’ எப்படி லாவகமாக டீல் செய்ய வேண்டும் என்பதற்குத் தமிழகத் தலைவர்கள் டெல்லியைப் பார்த்துப் பாடம் கற்க வேண்டும்.
மோடியின் ‘மௌன’ பாடம்!
அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்ட கூட்டத்தை உற்று நோக்கினால் ஒரு விஷயம் புரியும். தமிழகத்தின் தற்போதைய பேசுபொருளான விஜய் குறித்து அவர் மறைமுகமாகக் கூட ஒரு சொல்லை உதிர்க்கவில்லை. “நீயெல்லாம் ஒரு பொருட்டே இல்லை” என்பதைத் தனது மௌனத்தின் மூலம் மோடி உணர்த்திவிட்டார். விஜய்யின் அரசியல் என்ட்ரியை ஒரு துகளாகக் கூட அவர் மதிக்கவில்லை என்பதுதான் நிதர்சனம்.
ஆனால், தமிழக நிலைமை தலைகீழாக இருக்கிறது. கடந்த வாரம் வரை “2026 தேர்தல் என்பது எனக்கும் திமுக-வுக்கும் தான் போட்டி, அதிமுக ஒரு பொருட்டே இல்லை” என்று எகிறிக் கொண்டிருந்தவர்கள், இப்போது சம்பந்தமே இல்லாமல் விஜய்க்குப் பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் அரசியலில் எதிரியை நீங்களே வளர்த்துவிடும் முதல் கோணல்!

இயக்குநர் விக்ரமன் பட பாணியில் அரசியல்!
விஜய்க்கு ஒரு விஷயம் புரியவில்லை. மண்டபத்தில் ஓரிரு ஆயிரம் பேர் திரண்டு ஆர்ப்பரித்தாலே அது ஓட்டாக மாறிவிடாது. அரசியலின் அரிச்சுவடியைக் கூடக் கற்க ஆர்வமில்லாமல், இயக்குநர் விக்ரமன் சினிமா பாணியில் ஒரே பாட்டில் கோடீஸ்வரனாவது போல, ஒரே தேர்தலில் கோட்டையில் அமர்ந்துவிடலாம் என்று பகல் கனவு காண்கிறார். “ஊழல்… நானா?” என்று அவர் குரல் உயர்த்துவது ‘சர்க்கார்’ பட வசனத்திற்குப் பொருந்தலாம், நிஜமான ‘சர்க்கார்’ அமைக்க அது எடுபடாது.
ஐடி விங் கூட வேஸ்ட்… ஏன் இந்த முக்கியஸ்தர்கள் பதில்?
அதிமுக மற்றும் அதன் முக்கியத் தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள்: விஜய்யின் பேச்சுகளுக்கு உங்கள் கட்சியின் ஐடி விங் (IT Wing) பதில் சொல்வதே நேர விரயம். அப்படியிருக்க, கட்சியின் முக்கியஸ்தர்கள் வரிந்து கட்டிக்கொண்டு வந்து பேட்டி கொடுத்து, அவரை அரசியலில் ஒரு முக்கியமான ஆளாக மாற்ற வேண்டாம். அவருக்கு நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு ‘ரியாக்ஷனும்’, அவருக்கு நீங்களாகவே போடும் ‘ரெட் கார்பெட்’ என்பதை மறந்துவிடாதீர்கள்.
திமுக-வுக்கு ஒரு டிப்ஸ்!
ஆளுங்கட்சியான திமுக-வும் அதே தவற்றைத்தான் செய்கிறது. விஜய்யின் ஒவ்வொரு அசைவிற்கும் பதற்றப்படுவதை விட்டுவிட்டு, அந்த ‘கனவு நாயகனை’ ஒரு புது விதக் கோணச் சிரிப்புடன் (Sarcastic Smile) ஒதுக்கித் தள்ளுங்கள். நீங்கள் அவரை ஒரு ஆளாக மதித்துப் பேசும் வரைதான் அவருக்கு அந்த மிதப்பு இருக்கும். நீங்கள் கண்டுகொள்ளாமல் விட்டால் மட்டுமே அவருக்கு நிஜமான அரசியல் களம் எவ்வளவு கடினமானது என்பது புரியும்.
காலத்தின் கட்டாயம்
சினிமாத் திரையில் இரண்டரை மணி நேரத்தில் வில்லன்களைத் துவம்சம் செய்துவிட்டு சுலபமாக வெற்றிக்கொடி நாட்டும் ‘கிளைமாக்ஸ்’ காட்சிகள், நிஜ அரசியலின் கரடுமுரடான களத்திற்குச் சற்றும் பொருந்தாது என்பதை அந்த சினிமா நாயகன் முதலில் உணர வேண்டும்; ஆனால், அதற்குத் தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகள் தேவையில்லாத எதிர்வினைகள் ஆற்றி அவருக்கு ஒரு வீணான ‘அரசியல் அந்தஸ்தை’ வழங்கிவிடக் கூடாது என்பதே இப்போதைய காலத்தின் கட்டாயம். ஆளுங்கட்சியும், பிரதான எதிர்க்கட்சியும் தங்களது சமூக வலைதளப் படைகள் முதல் கட்சியின் முக்கியத் தூண்கள் வரை விஜய்யின் ஒவ்வொரு அசைவிற்கும் வக்காலத்து வாங்குவதோ அல்லது வரிந்துகட்டிக்கொண்டு பதிலடி கொடுத்து மல்லுக்கட்டுவதோ, அவருக்கு நீங்களாகவே சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு அளிப்பதற்குச் சமமாகும். பிரதமர் மோடியின் அரசியல் நகர்வுகளில் இருக்கும் அந்த நுட்பமான ‘மௌனப் புன்னகையை’ ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு, அவரை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் உதாசீனப்படுத்திப் புறந்தள்ளினால் மட்டுமே, அந்தத் திரையுலக நாயகனுக்குத் தியேட்டரில் பறக்கும் பேப்பர் துண்டுகளுக்கும், சட்டசபையின் அனல் பறக்கும் விவாதங்களுக்கும் இடையே இருக்கும் ஆகாயத்திற்கும் பாதாளத்திற்குமான வித்தியாசம் புரியும்; களத்தில் இறங்கி மக்கள் பணியில் ரத்தம் சிந்தி உழைக்காமல், வெறும் வாடகை மண்டப ஆவேசத்தால் மட்டும் அரியணை ஏறிவிடலாம் என்ற பகல்கனவு தவிடுபொடியாகும்!
நிலவளம் ரெங்கராஜன்


