கொம்பு சீவி – விமர்சனம்!
வைகை அணை – தென் தமிழகத்தின் தாகம் தீர்க்கும் பெருமிதம் ஒருபுறம் என்றால், அதன் கட்டுமானத்திற்காகத் தங்கள் வேர்களைப் பறி கொடுத்த மக்களின் அமைதியான அழுகை மறுபுறம். 1958-ல் அணை கட்டி முடிக்கப்பட்ட பின், நிலமிழந்த அந்த எளிய மக்கள் பிழைப்புக்காக 1970-களில் எத்தகைய விளிம்புநிலை வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டார்கள் என்ற வரலாற்று வடுக்களைத் தொட்டுச் செல்கிறது ‘கொம்பு சீவி’. இந்த வாழ்வாதாரப் போராட்டத்தை மையமாக வைத்து ஒரு கதையை அமைத்திருக்கும் இயக்குனர் பொன்ராம், தன் சிற்றறிவுக்குத் தோன்றிய அந்தச் சோக வடுக்களைக் கமர்சியல் கதையாக மாற்றி காமெடி, ஆக்ஷன், காதல், சென்டிமென்ட் எனக் கலந்து குழைந்து போன ‘கூட்டாஞ்சோறு’ ஒன்றை வழங்கியுள்ளார்
கதைக்களம்
வைகை அணை கட்டுவதற்காக நிலங்களை இழந்த தேனி மாவட்ட மக்கள், வறுமையின் பிடியில் சிக்கி கஞ்சா கடத்தல் போன்ற தவறான பாதைகளில் நுழைகிறார்கள். அந்தப் பகுதியின் ‘காட்ஃபாதராக’ விளங்கும் ரொக்கப்புலி (சரத்குமார்), அநாதையாக நிற்கும் பாண்டியனை (சண்முக பாண்டியன்) வளர்க்கிறார். இருவரும் இணைந்து கஞ்சா கடத்தலில் ஈடுபட, ஒரு கட்டத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியின் பகை உருவாகிறது. இந்த மோதல் எங்கே முடிகிறது என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிப்பு எப்படி?
-
சண்முக பாண்டியன்: ‘சின்ன கேப்டன்’ ஆக்ஷன் காட்சிகளில் கம்பீரமாகத் தெரிந்தாலும், உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதிலும், மதுரை வட்டார வழக்கை உச்சரிப்பதிலும் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
-
சரத்குமார்: நரைத்த முடி, தாடி என ஒரு வித்தியாசமான – ஒட்டாத ‘கெட்டப்பில்’ வரும் சரத்குமார், படத்தின் உண்மையான பலம். சண்முக பாண்டியனை விடப் பல இடங்களில் ஸ்கோர் செய்து அதிரடி காட்டுகிறார்.
-
தார்னிகா: அறிமுக நடிகை தார்னிகா போலீஸ் அதிகாரியாக மிடுக்காகத் தெரிகிறார். நடிப்பு பரவாயில்லை.
-
மற்றவர்கள்: காளி வெங்கட், ஜார்ஜ் மரியான் ஆகியோரின் காமெடி சில இடங்களில் மட்டும் எடுபடுகிறது; பல இடங்களில் சோதிக்கிறது. வில்லனாக வரும் சுஜித் சங்கர் கவனிக்க வைக்கிறார்.
தொழில்நுட்பம்
-
இசை: யுவன் சங்கர் ராஜாவின் இசை ஏமாற்றம் அளிக்கிறது. இளையராஜா பாடிய பாடலும், பின்னணி இசையும் மனதில் நிற்கவில்லை.
-
ஒளிப்பதிவு: பாலசுப்பிரமணியத்தின் கேமரா வைகை அணையின் அழகையும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளையும் மிகவும் நேர்த்தியாகப் படம் பிடித்துள்ளது.
-
இயக்கம்: 70-களின் உணர்வைக் கலை இயக்கத்தில் கொண்டு வருவதில் சறுக்கியுள்ளனர். சண்முக பாண்டியனுக்காக எழுதப்பட்ட ஆக்ஷன் கதையில், இறுதியில் சரத்குமாரே படத்தை அதிகம் தாங்கிப் பிடிக்கிறார்.
ப்ளஸ் & மைனஸ்
நிறைகள்:
-
சரத்குமாரின் அதிரடி நடிப்பு.
-
வைகை அணையைச் சுற்றியுள்ள அழகான காட்சி அமைப்பு.
குறைகள்:
-
வலிமையற்ற திரைக்கதை.
-
ஒட்டாத பீரியட் கால பின்னணி.
-
வலுவில்லாத இசை மற்றும் சுமார் காமெடி.
இயக்குநர் பொன்ராம் வைகை அணை வரலாற்றையும் கமர்சியல் மசாலாவையும் சேர்த்து ஒரு ‘கூட்டாஞ்சோறு’ கொடுக்க முயன்றிருக்கிறார். ஆனால், அந்த முயற்சி முழுமையாக வெற்றி பெறவில்லை.
மொத்தத்தில் இந்த ‘கொம்பு சீவி’ – முனை மழுங்கி விட்டது!
மார்க்: 2.25/5


