உலகின் உயிர் நாடி: உணவு – உலக உணவு தின சிறப்புப் பார்வை

உலகின் உயிர் நாடி: உணவு – உலக உணவு தின சிறப்புப் பார்வை

ந்த பரந்துபட்ட பூவுலகில் உள்ள அனைத்து உயிர்களும் உயிர்வாழ அடிப்படை ஆதாரம் உணவுதான். நோய் நொடியின்றி மனிதன் உயிர்வாழ தேவையான ஊட்டச்சத்து, உணவு மூலமாகத் தான் நமக்கு கிடைக்கிறது. அத்தகைய உணவை சிறப்பிக்க, உலக உணவு தினம், ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 16 அன்று கொண்டாடப்படுகிறது.

இந்த நாள் உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பசி, பட்டினியால் அவதிப்படும் மக்கள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டது. மேலும், பசியை எதிர்த்துப் போராடுவதும் இதன் நோக்கங்களுள் ஒன்று. இது தவிர, உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகள் முதல் உணவு ஏற்றுமதி, இறக்குமதி துறையில் வேலை பார்க்கும் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாகவும் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO) தொடங்கப்பட்ட நாளே, 1979லிருந்து உணவு நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

உணவின் அத்தியாவசியம்

நம் உடலின் ஒவ்வொரு உறுப்பும் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வேலை செய்ய வேண்டுமென்றால் அதற்கு குறிப்பிட்ட சக்தியை நாம் அளித்துக்கொண்டே இருக்க வேண்டும். அந்த சக்தி உணவு உட்கொள்வது மூலமே உடலுக்கு கிடைக்கிறது. வாகனங்களுக்கு எரிபொருள் எப்படியோ அதேபோலத்தான் உடலுக்கு உணவும். ஆனால் இன்றைய பரபரப்பான உலகில் உணவு உட்கொள்வது என்பது ஏதோ ஒரு வேலை போலவே ஆகிவிட்டது. அத்தியாவசியம் என்பதை மறந்து போகிறப்போக்கில் செய்கிற காரியமாக உணவு உட்கொள்வதை கொண்டு வந்துவிட்டோம். உணவு குறித்தும், ஊட்டச்சத்து அத்தியாவசியம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இத் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

நீடிக்கும் பசி: ஓர் உலகளாவிய துயரம்

உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் தேவையான உணவை விவசாயிகள் தயாரித்து தந்தாலும், பசி என்பது இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. உலகில் 73 கோடியே 30 இலட்சம் பேர் இன்னும் பசியால் வாடிக்கொண்டிருக்கின்றனர்.

  • உலகில் 10 பேரில் ஒருவர் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சனையை எதிர்கொள்கிறார்.
  • உலகளவில் 5 வயதுக்குட்பட்ட ஐந்து குழந்தைகளில் ஒருவர் வளர்ச்சி குறைவாக உள்ளார்.
  • உலகில் இறக்கும் குழந்தைகளுள் பாதிபேர் சத்துணவின்மையால் உயிரிழக்கின்றனர்.
  • ஒவ்வோர் ஆண்டும் பசி தொடர்புடையவைகளால் உயிரிழக்கும் 90 இலட்சம் பேரில் பெரும்பான்மையினோர் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள்.

இன்றைய உலகில் 35 விழுக்காட்டு மக்கள், அதாவது, 280 கோடி பேர் ஆரோக்கியமான உணவைப் பெறுவதற்கான வசதியற்றவர்களாக இருக்கின்றனர். குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் 71.5 விழுக்காட்டு மக்கள் ஆரோக்கியமான உணவை பெறுவதற்கான வசதிகளின்றி உள்ளனர். அதேவேளை, வருமானம் நிரம்பிய நாடுகளிலோ 6.3 விழுக்காட்டு மக்கள் ஆரோக்கியமான உணவை வாங்குவதற்கான வசதிகளின்றி உள்ளனர்.

பசியால் அதிக அளவில் வாடும் நாடுகளாக 36 நாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதிலும் புருண்டி, சாடு, மடகாஸ்கர், சொமாலியா, தென்சூடான், மற்றும் ஏமன் ஆகியவை மிகவும் கடுமையான உணவுப் பற்றாக்குறை உள்ள நாடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

பசி நீடிப்பதன் காரணங்கள்

பசி தன் ஆதிக்கத்தைக் கொண்டிருக்கும் முக்கியக் காரணங்களை ஆராய்ந்தால்:

  1. ஏழ்மை: ஏழ்மையில் வாடும் குடும்பத்தால் போதிய, குறிப்பாக சத்துள்ள உணவைப் பெற முடியாது. இது கல்வி மற்றும் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.
  2. உணவுப் பற்றாக்குறை: அறுவடைக்கு இடைப்பட்ட காலத்தில் விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால் ஒருவேளை உணவைத் தியாகம் செய்யும் நிலை ஏழை நாடுகளில் உருவாகிறது.
  3. போர் மற்றும் மோதல்கள்: உதாரணமாக, ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக கோதுமை ஏற்றுமதிச் சங்கிலி அறுபட்டு, கோதுமை பற்றாக்குறையும் விலையேற்றமும் ஏற்பட்டுள்ளது.
  4. காலநிலை மாற்றம்: உலகம் வெப்பமாகி வருவதும், இயற்கை பேரிடர்களும் பசியின் கொடுமைக்கு வலுசேர்க்கின்றன.
  5. உணவை வீணாக்குதல்: நமது பூமி அனைவருக்கும் உணவளிக்க போதுமான உணவை உருவாக்கினாலும், ஒவ்வோர் ஆண்டும் 130 கோடி கிலோ உணவு இழக்கப்படுகிறது அல்லது வீணாகிறது. இது மொத்த உணவு உற்பத்தியில் ஏறக்குறைய 20%.
  6. இது தவிர திட்டமிடாத அரசின் செயல்கள், அரசியல் நிலையற்றதன்மை, மோசமான பொருளாதாரம் போன்றவையும் காரணங்களாகும்.

சவால்களும் இலக்குகளும்

2030ஆம் ஆண்டுக்குள் எவரும் பசியால் வாடாத ஒரு நிலையை உருவாக்க வேண்டும் என ஐ.நா. நிறுவனம் திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. இருப்பினும், சஹாராவை அடுத்த ஆப்பிரிக்க நாடுகளையும், தெற்காசிய நாடுகளையும் நோக்கும்போது, இந்த இலக்கை அடைவது சிரமம் என்றே தோன்றுகிறது. ஏனெனில், பசி என்பது அரசியல் மற்றும் காலநிலை மாற்றங்களோடு நெருங்கியத் தொடர்புடையதாக இருக்கின்றது.

ஒவ்வொரு தனிமனிதனின் பங்களிப்பு

உலக மக்களை பசிக்கொடுமையில் இருந்து ஒரே நாளில் மீட்டுவிட முடியாது. ஆனால், முடிந்தவரை ஒவ்வொருவரும் இதில் பங்கேற்க முடியும்:

  • உணவை வீணாக்குவதைத் தவிர்த்தல்: ஒரு பருக்கை சோறாக இருந்தாலும் அதை வீண் செய்யக்கூடாது என உறுதியாக இருக்கலாம்.
  • விழிப்புணர்வு: வீட்டில் குழந்தைகளுக்கு இப்போதிலிருந்தே உணவின் முக்கியத்துவத்தை கற்றுக்கொடுங்கள்.
  • தானம்: உணவு மீந்துவிட்டால் பசியால் தவிக்கும் மக்களுக்கு தானமாக அளிக்கலாம்.
  • சத்தான உணவை ஊக்குவித்தல்: உப்பு, வெள்ளம் மற்றும் வறட்சியைத் தாங்கும் விதை வகைகள் மற்றும் கரடுமுரடான தானியங்கள் போன்ற பூர்வீக கடினமான வகைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கலாம்.

உலக உணவு தினம் என்பது அளவுக்கு அதிகமாக உண்பதை தவிர்க்கவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த முடிவுகளை எடுக்கவும் நினைவூட்டுகிறது. விவசாய நாடான இந்தியாவில், இத்தினத்தில் பல பொது மற்றும் தனியார் நிறுவனங்கள், கல்லூரிகள், மற்றும் சமூக சேவை அமைப்புகள் விழிப்புணர்வு பிரச்சாரங்கள், உணவு நன்கொடை இயக்கங்கள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தி, உணவுப் பாதுகாப்பு, நிலையான விவசாயம் மற்றும் நவீன விவசாய நடைமுறைகள் குறித்து வலியுறுத்துகின்றன.

உணவின் முக்கியத்துவத்தை குழந்தைகளிலிருந்து சொல்லி வீட்டில் உள்ள பெரியவர்கள் பழக்கப்படுத்தி, அடுத்த தலைமுறைக்கு பசி பட்டினி இல்லாத உலகை விட்டுச்செல்ல முற்படுவோம்!

நிலவளம் ரெங்கராஜன்

Related Posts