திருச்சி சிவாவின் ‘காமராஜரும் , ஏசியும்’ பேச்சை திரிக்கும் காங்கிரஸ்!
பெருந்தலைவர் காமராஜர். அவர் தமது முதுமைக் காலத்தில், ‘அலர்ஜி’ காரணமாக ஏசி அறையில் இருந்தாரா, அதற்கு கலைஞர் கருணாநிதி உதவினாரா? இதுதான் இன்றைய தலை போகிற சர்ச்சையாக வெடித்துக் கிளம்பியிருக்கிறது. வித்திட்டவர் திருச்சி சிவா. அவர் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சுத்தான் சர்ச்சைக்கான வித்தாகி விட்டது. அப்படி அவர் என்னதான் பேசிவிட்டார்?அவர் பேசியதை நானும் காணொளியில் பார்த்தேன். அவர் அந்தப் பொதுக்கூட்டத்தில், ‘காரில் பயணிக்கும்போது, கலைஞர் என்னோடு நிறைய விஷயங்களைச் சொல்லுவார். அப்படியொருமுறை சொன்னார்…’தமிழகத்தில் நிலவும் மின்சாரத் தட்டுப்பாட்டை எதிர்த்து, தமிழ்நாடு முழுவதும் காமராஜர் கண்டனக் கூட்டம் போடுகிறார். அவருக்கு ஏசி இல்லையென்றால் உடம்பில் அலர்ஜி வந்துவிடும். அதனால், அவர் தங்குகிற எல்லா பயணியர் விடுதிகளிலும் குளிர்சாதன வசதி செய்து தரும்படி உத்தரவிட்டேன். நம்மை எதிர்த்துத்தான் அவர் பேசுகிறார் என்றாலும் அவருடைய உடல் நலன் கருதி அதைச் செய்தேன்’ என்று கலைஞர் தம்மிடம் சொன்னதாகத்தான் சிவா பேசியிருக்கிறார்.

மற்றபடி, தமக்கு ஏசி வேண்டுமென பெருந்தலைவர் கேட்டதாகவோ, அவர் கேட்டுத்தான் தாம் செய்து கொடுத்ததாகக் கலைஞர் சொன்னதாகவோ சிவா பேசவேயில்லை. பெருந்தலைவரின் உடல்நலன் கருதி, கலைஞர் தாமாகவே முன் வந்து ஏசி வசதி செய்து கொடுத்ததாகத்தான் சொல்லியிருக்கிறார். குறிப்பாக சிவா பேசும்போது, பெருந்தலைவருடைய பெருமைக்கும் புகழுக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் கேலியும் கிண்டலுமாகவோ அல்லது வேறு எந்தவிதத்திலும் அவமரியாதை செய்யும் விதத்திலோ பேசவில்லை. பெருந்தலைவர்மேல் கலைஞர் வைத்திருந்த மரியாதையை எடுத்துக் காட்டும் வகையிலும் தமக்கும் கலைஞருக்குமான நெருங்கிய உறவை எடுத்துக் காட்டும் வகையிலும்தான் அவர் பேசியிருக்கிறார் என்பதுதான் அக்காணொளியில் நான் கண்ட உண்மை. இந்தச் சூழலில், எதற்காக இன்றைய ஏசி சர்ச்சையை காங்கிரசார் கிளப்பினார்கள்?
அப்போதும் பாருங்கள்… ‘பெருந்தலைவர் ஏசி அறையில் இருந்ததேயில்லை’ என்று எந்த காங்கிரஸ்காரரும் மறுக்கவில்லை. உடல் நலன் காரணமாக பெருந்தலைவர் ஏசி அறையில் இருந்திருந்தால் அதில் என்ன தவறு? அதனாலேயே அவருடைய எளிமையைக் குறை சொல்லிவிட முடியுமா? அப்படிச் சொல்பவர்களைத் தமிழக மக்கள் சும்மா விட்டுவிடுவார்களா? இருந்தும் தமிழக காங்கிரசார் ஏன் இப்படி வானத்துக்கும் பூமிக்குமாகக் குதிக்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை. பெருந்தலைவரின் எளிமை என்பது யாராலோ கட்டமைக்கப்பட்ட ‘பிம்பம்’ அல்ல; அவருடைய தேசபக்தியாலும் தியாகத்தாலும் இயல்பானதொரு நடத்தையாலும் தானாகவே உருவான எஃகுக் கோட்டை. இது தமிழக காங்கிரசாருக்குத் தெரியாமல் போனதுதான் நமக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.
சரி, பெருந்தலைவருக்கு மட்டுமல்ல; பாஜகவினர் தவிர ஏறத்தாழ மற்ற அத்தனை பேருக்குமே அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்குமே மகாத்மாவாக விளங்கும் காந்தியடிகளை, ‘இவரை ஏழையாக வைத்திருப்பதற்காகவே ஏராளமாகச் செலவு செய்ய வேண்டியிருக்கிறது’ என்று சரோஜினி நாயுடு சொன்னபோது காங்கிரஸ்காரர்களால் என்ன செய்ய முடிந்தது? பசுவிடம் பால் கறப்பது ஹிம்சை என்றுதானே காந்திஜி பசும்பாலைத் தவிர்த்தார். தான் ஈனும் ஒரு கன்றுக்காக நான்கு பால் காம்புகளைக் கொண்டிருக்கும் பசுவிடம் பால் கறப்பதே ஹிம்சை என்றால், தான் போடும் இரண்டு குட்டிகளுக்காக இரண்டு பால் காம்புகளை மட்டுமே கொண்டிருக்கும் ஆடுகளிடம் பால் கறப்பது மட்டும் எப்படி அகிம்சையாகும்? இது பற்றிய முடிவை காந்தி அவசரப்பட்டு எடுத்துவிட்டார் என்பது உண்மையா? இதை காங்கிரஸ்காரர்கள் என்றைக்காவது யோசித்திருக்கிறார்களா? இன்றைக்காவது விளக்கம் சொல்ல முடியுமா? காங்கிரஸ்காரர்கள் பதில் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் காந்தி நமக்கு எப்போதுமே ‘மகாத்மா’தான். அதுபோல காமராஜர் எப்போதுமே நமக்குப் ‘பெருந்தலைவர்’தான்.
இது காங்கிரஸாருக்கும் தெரியும். ஆனாலும் ‘ஈரைப் பேனாக்கி, பேனையே பெருமாளாக்கும்’ முயற்சியில், அன்றைய ‘வாழப்பாடி’ போல இன்றைய காங்கிரஸார் ஈடுபட்டிருப்பதேன்? இங்குதான் நமக்கொரு சந்தேகம் ஏற்படுகிறது. வரும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அமையப்போகும் ஸ்டாலின் அமைச்சரவையில், தாங்களும் இடம்பெற வேண்டும் என்கிற ஆசை காங்கிரஸ்காரர்களுக்கு வந்திருக்க வேண்டும். அதைத்தான் நேரடியாகச் சொல்லப் பயந்து கொண்டு, இப்படியெல்லாம் தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டுச் சொல்லுகிறார்களோ என்னவோ, யார் கண்டது? தமிழக காங்கிரஸாரின் ஆசை நிறைவேறுமா? முடிவெடுக்க வேண்டியது ராகுல். ராகுல் யார் சொல்வதைக் கேட்பார்? இவர்கள் சொல்வதையா? ஸ்டாலின் சொல்வதையா? இது அனைவருக்குமே தெரிந்ததுதான்.


