உலக காகிதப் பை தினமின்று- பிளாஸ்டிக்கிற்கு மாற்று!
ஆண்டுதோறும் ஜூலை 12 ஆம் தேதி உலக காகிதப் பை தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாள், பிளாஸ்டிக்கின் பயன்பாடு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்களான காகிதப் பைகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
காகிதப் பைகள் ஏன் அவசியம்?
பிளாஸ்டிக் பைகள் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கின்றன. அவை மக்கிப் போவதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகும். நிலத்தடி நீர், மண், கடல்வாழ் உயிரினங்கள் என அனைத்திற்கும் தீங்கு விளைவிக்கின்றன. விலங்குகள் இவற்றை உணவு என எண்ணி உட்கொண்டு இறக்கின்றன. கடல்களில் பிளாஸ்டிக் குப்பைகள் ஒரு பெரும் தீவாக மிதந்து, கடல் சூழலை நாசமாக்குகின்றன.
காகிதப்பைகளின் வரலாறு
1852-ம் ஆண்டு அமெரிக்க கண்டுபிடிப்பாளர் பிரான்சிஸ் வோல் முதன்முதலில் காகிதப் பை இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். பின்னர் 1971-ல் மார்கரெட் இ நைட் தட்டையான கீழ் காகிதப் பைகளை உருவாக்கக்கூடிய ஒரு இயந்திரத்தை வடிவமைத்தார். இவர் `மாளிகைப் பையின் தாய்’ என்று அழைக்கப்பட்டார். ஏனெனில், இது முன்பு இருந்ததைவிட அதிகமானவற்றை எடுத்துச் செல்லும் அளவுக்குத் தயாரிக்கப்பட்டது. பொருள்களை எளிதாக சேமித்து வைக்க மடிப்பு பக்கங்களைக் கொண்ட சதுர கீழ் காதிதப் பைகளை ( SOS Style Paper Bag) 1883-ம் ஆண்டில் சார்லஸ் ஸ்டில்வெல் கண்டுபிடித்தார். இந்தப் பைகள் மருந்தகங்கள், உணவு சேவை, மளிகைக் கடைகள் மற்றும் பல வகைகளில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன.
1912-ல் மினசோட்டாவின் செயிண்ட் பால் நகரில் உள்ள மளிகைக் கடைகளில் மக்கள் தங்களுடைய மளிகைப் பொருள்களை எடுத்துச் செல்வதில் உள்ள சிரமத்தைக் கண்டுபிடித்தார். அதற்கு ஏற்ற வகையில், காகிதப் பைகளில் துளைகளை இட்டு அதற்கு காப்புரிமை பெற்றனர். பின்னர் அதற்கு டியூபனர் ஷாப்பிங் பேக் ( Deubener’s Shopping Bag ) என்று பெயரிட்டனர். இருப்பினும் இந்தக் காகிதப் பைகள் பிளாஸ்டிக் பைகளால் மாற்றப்பட்டன.
2015-ம் ஆண்டு, உலகின் மிகப்பெரிய காகித ஷாப்பிங் பை இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டு கின்னஸ் சாதனை செய்தனர்.

இங்குதான் காகிதப் பைகளின் முக்கியத்துவம் வெளிப்படுகிறது.
- மறுசுழற்சி மற்றும் மக்கும் தன்மை: காகிதப் பைகள் எளிதில் மறுசுழற்சி செய்யக்கூடியவை மற்றும் இயற்கையாகவே மக்கிப் போகக்கூடியவை. இதனால் அவை சுற்றுச்சூழலுக்கு எந்தத் தீங்கும் விளைவிப்பதில்லை.
- புதுப்பிக்கக்கூடிய வளம்: காகிதம் மரக்கூழிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது புதுப்பிக்கக்கூடிய ஒரு இயற்கை வளமாகும்.
- பாதுகாப்பானது: உணவுப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களைப் பாதுகாப்பாக எடுத்துச் செல்ல காகிதப் பைகள் சிறந்தவை.
பிளாஸ்டிக்கிற்கு மாற்றும் வழிகள்
உலக காகிதப் பை தினம், வெறும் காகிதப் பைகளை மட்டும் கொண்டாடுவதில்லை. சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்ற மாற்றுப் பொருட்களையும் பயன்படுத்துவதற்கான ஒரு அழைப்பு இது:
- துணிப் பைகள்: நீடித்து உழைக்கும் துணிப் பைகளை மளிகைக் கடைக்கோ அல்லது ஷாப்பிங்கிற்கோ எடுத்துச் செல்வது சிறந்த வழி.
- கூடைப் பைகள்: மூங்கில் அல்லது நாணல் போன்ற இயற்கை இழைகளால் செய்யப்பட்ட கூடைகள், பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்டது போல, இன்றும் நடைமுறைக்கு உகந்தவை.
- ஸ்டீல்/கண்ணாடி கண்டெய்னர்கள்: உணவுப் பொருட்களை சேமிப்பதற்கும், எடுத்துச் செல்வதற்கும் பிளாஸ்டிக்கிற்குப் பதிலாக ஸ்டீல் அல்லது கண்ணாடிப் பாத்திரங்களைப் பயன்படுத்தலாம்.
நமது பொறுப்பு
ஒவ்வொரு தனிநபரும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலமும், காகிதப் பைகள் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலமும் இந்த பூமியைக் காப்பதில் முக்கியப் பங்காற்ற முடியும். இது நம்முடைய எதிர்கால சந்ததியினருக்கான ஒரு பொறுப்பாகும்.
இந்த உலக காகிதப் பை தினத்தில், பிளாஸ்டிக்கைத் தவிர்த்து, காகிதம் மற்றும் பிற சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்த உறுதிமொழி எடுத்துக்கொள்வோம்.
நிலவளம் ரெங்கராஜன்


