டிரம்பின் புது அதிரடி : வெளிநாட்டினர் தங்கள் சொந்த நாட்டுக்கு பணம் அனுப்பினால் 5 சதம் வரி!

டிரம்பின் புது அதிரடி : வெளிநாட்டினர் தங்கள் சொந்த நாட்டுக்கு பணம் அனுப்பினால் 5 சதம் வரி!

மெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் வெளிநாட்டினரை வெளியேற்றும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு சட்டப்பூர்வமாக பணிபுரியும் வெளிநாட்டினருக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் கொண்டு வந்துள்ள புதிய மசோதா, வெளிநாட்டினரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சட்டவிரோத குடியேற்றங்கள் மீது கடும் நடவடிக்கை:

அமெரிக்காவில் சுமார் 1.37 கோடிக்கும் அதிகமான வெளிநாட்டினர் சட்டவிரோதமாக வசிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவர்களை வெளியேற்ற அதிபர் டிரம்ப் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த ஜனவரி மாதம் முதல் சட்டவிரோத குடியேறிகள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக பணிபுரியும் சுமார் 4.78 கோடி வெளிநாட்டினரின் உரிமைகள் மற்றும் சலுகைகள் அதிபர் டிரம்ப் பதவியேற்ற பிறகு பறிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், “தி ஒன் பிக் பியூட்டிபூல் பில்” என்ற புதிய மசோதாவை டிரம்ப் நிர்வாகம் வரையறுத்துள்ளது. இந்த மசோதாவில் வெளிநாட்டினருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.

பணம் அனுப்பினால் 5% வரி:

குறிப்பாக, அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டினர் தங்கள் சொந்த நாட்டிற்கு பணம் அனுப்பினால் 5 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று புதிய மசோதாவில் அறிவிக்கப்பட்டுள்ளது. கிரீன் கார்டு மற்றும் எச்1பி, எச்2ஏ, எச்2பி விசா பெற்று அமெரிக்காவில் பணிபுரியும் சுமார் 4.78 கோடிக்கும் அதிகமான வெளிநாட்டினர் இந்த வரி விதிப்பால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்தியர்கள் அதிர்ச்சி:

அமெரிக்காவில் பணிபுரியும் சுமார் 45 லட்சம் இந்தியர்களும் இந்த புதிய வரி விதிப்பால் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த வரி விதிப்பு அவர்களின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என்று கருதப்படுகிறது.

இந்த புதிய மசோதா, வெளிநாட்டினரின் உரிமைகளை மீறுவதாகவும், அமெரிக்காவின் பொருளாதாரத்தை பாதிக்கும் என்றும் பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். இருப்பினும், டிரம்ப் நிர்வாகம் இந்த மசோதாவை அமல்படுத்துவதில் உறுதியாக உள்ளது.

விளைவுகள்:

இந்த வரி விதிப்பு அமலுக்கு வந்தால், அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டினர் தங்கள் சொந்த நாட்டிற்கு பணம் அனுப்புவது குறையும். இதனால், அவர்களின் குடும்பங்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படும். மேலும், அமெரிக்காவில் இருந்து வெளிநாட்டினர் வெளியேறுவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

ரமாபிரபா