ஹைதராபாத்: பிளாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பலி எண்ணிக்கை 17 ஆனது!

ஹைதராபாத் மாநிலத்தில் உள்ள சார்மினார் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 குழந்தைகள், 3 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் உட்பட 17 பேர் இன்று காலை வரையில் உயிரிழந்தனர். சம்பவ இடத்திலேயே மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், நேற்று இரவு 8 பேர் வரையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் பலர் உயிரிழந்துள்ளனர்.
மலக்பேட்டையில் உள்ள யசோதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 பேரும், கஞ்சன்பாக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 குழந்தைகளும் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த 10 உடல்களும் உஸ்மானியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
பலர் கவலைக்கிடம்
அடர்ந்த புகை மூட்டம் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் 5 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துயர சம்பவம் குறித்து அறிந்த மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் மாநில அமைச்சர் பொன்னம் பிரபாகர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
இடுக்கியான தெருக்கள் காரணமாக மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய கட்டிடங்களில் தீ பாதுகாப்பு வசதிகள் எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது. பத்து தீயணைப்பு வாகனங்கள் வந்தும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் சிரமப்பட்டனர். இரண்டு மாடி கட்டிடத்தையும் தீ முழுமையாக சூழ்ந்திருந்தது. கட்டிடத்தின் சுவர்களை உடைத்து உள்ளே சென்று மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். கவலைக்கிடமாக உள்ளவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம் என கூறி உள்ளனர்.